Posted On :  10.09.2023 11:01 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

மனித உரிமைகள்

இப்பாடம் மனித உரிமைகளுக்காகப் போராடிய நிறுவனங்களின் வரலாற்றின் ஊடே பயணிக்கிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளவிய பேரறிக்கை (LDR) மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

அலகு 3

மனித உரிமைகள்


 

கற்றல் நோக்கங்கள்

மனித உரிமைகளைப் பாதுகாக்க உலக அளவில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளல்

இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி புரிந்து கொள்ளல்

 மனித உரிமைகளுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பணிகளைப் பற்றி புரிந்து கொள்ளல்

மனித உரிமைகளின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளல்

 

அறிமுகம்

இப்பாடம் மனித உரிமைகளுக்காகப் போராடிய நிறுவனங்களின் வரலாற்றின் ஊடே பயணிக்கிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளவிய பேரறிக்கை (LDR) மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறது. குழந்தைகள் உரிமைகள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற மனித உரிமை வகைமைகள் பற்றியும் விளக்குகிறது.

1893ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா என்னும் இடத்திற்கு தொடர்வண்டியில் முதல் வகுப்பில் வெள்ளையர் அல்லாத ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் வண்டியில் ஏறிய வெள்ளை இனத்தவர் ஒருவர், வெள்ளையரல்லாதவரை முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு செல்லும்படி கட்டளையிட்டார். முதல் வகுப்பு பயணச் சீட்டை வைத்திருந்த . வெள்ளையரல்லாதவர். அவ்வாறு செல்ல மறுத்தபோது, பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற இடத்தில் ஓடும் வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டார். அவ்விரவு நேர கடுங்குளிரில் அந்நிலையத்தில் குளிர் நடுக்கத்தில் உட்கார்ந்து இருந்தபோது அவரிடம் துளிர்விட்ட சிந்தனை, அவர் வாழ்வின் திசையை மாற்றியது. இந்நொடியிலிருந்து அகிம்சை வழி நின்று இனதுக்கல் கொள்கைக்கு எதிராக தன்வாழ்நாள் முழுவதும் போராட அந்த நபர் உறுதி பூண்டார்.


அந்நபர் யாரென்று ஊகித்தீர்களா? அவர் வேறு யாருமல்ல நமது தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள்தான். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெள்ளயர் அல்லாதவர்களுக்கு எதிராக நிலவிய இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற முக்கியமான முடிவு அவரை அந்நாட்டிலேயே தங்க வைத்தது அப்போராட்டத்தில் உருவானது தான் காந்தியின் சத்தியாகிரகம் என்ற தனித்துவமான அமைதி வழிப்போராட்டம்.

ஒரு மனிதராக, முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ய காந்திக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால் அவரைப் பாகுபடுத்திக் காட்டியது அவரது நிறமே. மக்கள் நிறத்தால் மட்டுமின்றி, இனம், பாலினம், பிறந்த நாடு சாதி மற்றும் மதம் போன்றவற்றின் அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுகின்றனர்.

இப்பாகுபாடுகளினால் மக்கள் தங்கள் அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்க இயலாமல் போகின்றது.


9th Social Science : Civics: Human Rights : Human Rights in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : மனித உரிமைகள் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்