முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - பன்னாட்டுச் சங்கம் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath
பன்னாட்டுச்
சங்கத்திற்கான கூட்டு ஒப்பந்த ஆவணம் பாரிஸ் அமைதி மாநாட்டில் தயார் செய்யப்பட்டு
முதல் உலகப்போருக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கையிலும்
சேர்க்கப்பட்டது. சவால்கள் நிறைந்த இப்பணி குடியரசுத்தலைவர் உட்ரோவில்சன் கொடுத்த
அழுத்தத்தால் நிறைவேறியது. இவ்வமைப்புக்கான அரசியல் அமைப்பு விதிகளை
உருவாக்குவதில் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைகள்
மேலோங்கியிருந்தன.
1920இல் துவக்கப்பட்ட இச்சங்கம் ஐந்து உறுப்புகளைக்
கொண்டிருந்தது. அவை பொதுச்சபை, செயற்குழு,
செயலகம்,
பன்னாட்டு
நீதிமன்றம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு என்பனவாகும்.
ஒவ்வொரு உறுப்பு நாடும் பொதுச்சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
செயற்குழுவே முடிவுகளைச் செயல்படுத்தும் அமைப்பாகும். பிரிட்டன்,
பிரான்ஸ்,
இத்தாலி,
ஜப்பான்,
அமெரிக்கா
ஆகிய நாடுகளே தொடக்கத்தில் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு அளிக்கும் உரிமை உண்டு. மேலும் அனைத்து
முடிவுகளும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால் சிறு நாடுகளும்
மறுப்பாணை அதிகாரத்தைப் (Veto Power) பெற்றிருந்தன.
பன்னாட்டுச்
சங்கத்தின் செயலகம் ஜெனீவாவில் அமைந்து இருந்தது. அதன் முதல் பொதுச்செயலாளர்
பிரிட்டனைச் சேர்ந்த சர் எரிக் டிரம்மாண்ட் ஆவார். செயலகப் பணியாளர்களைப்
பொதுச்செயலாளர் செயற்குழுவின் ஆலோசனையின்படி பணியமர்த்துவார். பன்னாட்டு
நீதிமன்றமானது தி ஹேக் நகரில் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்றம் பதினைந்து
நீதிபதிகளைக் கொண்டிருந்தது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு,
ஒரு
செயலகத்தையும் அதன் பொது மாநாட்டில் ஒவ்வொரு உறுப்பு நாட்டிலிருந்தும் நான்கு
உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பன்னாட்டுச்
சங்கத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களைத்தவிர்த்து உலகில் அமைதியை
நிலைநாட்டுவது. மற்றொன்று சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை
மேம்படுத்துவது என்பனவாகும். பன்னாட்டுச் சங்கம் நடுவராகவும்,
சமாதானம்
செய்பவராகவும் இருந்து அதன் மூலம் பிரச்சனைகளைத் தொடக்கத்திலேயே தீர்த்துவைக்க
விரும்பியது. நடுவர் தீர்ப்பையும் மீறி போர்கள் வெடித்தால் போருக்குக் காரணமான
நாட்டின் மீது சங்கம் முதலில் பொருளாதாரத் தடைகளையும் பின்னர் இராணுவ ரீதியிலானத்
தடைகளையும் விதிக்கவேண்டும்.
அமெரிக்கா
(சங்கத்தில் உறுப்பினராகாத நாடு), ஜெர்மனி (தோல்வியுற்ற நாடு),
ரஷ்யா
ஆகிய மூன்று வல்லரசுகள் இவ்வமைப்பில் அங்கம் வகிக்காததால்,
இக்குறிக்கோள்களை
எட்டுவதில் சிரமங்கள் மேலும் அதிகரித்தன. ஜெர்மனியும் ரஷ்யாவும் முறையே 1926,
1934 ஆகிய ஆண்டுகளில் சங்கத்தில் சேர்ந்தன. 1933இல்
ஜெர்மனி விலகியது. 1939இல் ரஷ்யா
வெளியேற்றப்பட்டது.
1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே
பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது. மூன்று
பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது. 1920இல்
பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில்
அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும்
சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள்
பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டில் போலந்திற்கும்
ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு,
பிரச்சனையைத்
தீர்த்துவைக்கச் சங்கம் அழைக்கப்பட்ட போது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத்
தீர்த்து வைத்தது. 1925இல் மூன்றாவது பிரச்சனை
கிரீஸ், பல்கேரியா நாடுகளிடையே ஏற்பட்டதாகும். கிரீஸ்
பல்கேரியாவின் மீது படையெடுத்தபோது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய
உத்தரவிட்டது. விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி,
கிரீஸ்
போர் இழப்பீடு வழங்கவேண்டுமெனத் தீர்மானித்தது. ஆகவே 1925இல்
லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்றவரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே
செயலாற்றியது. லொக்கார்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி,
பிரான்ஸ்,
பெல்ஜியம்,
இங்கிலாந்து,
இத்தாலி
ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன. இதன்பின்னர்
ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர
இடமளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும்
சங்கத்தினுடைய அரசியல் அல்லாத நடவடிக்கைகளில் பங்கேற்கத் தொடங்கின.
ஐரோப்பிய
சக்திகள் எதிர்கொண்ட பெரும் பிரச்சனைகளிலொன்று எவ்வாறு ஆயுதக் குறைப்பை
சாத்தியமாக்குவது என்பதாகும். 1925இல் சங்கத்தின் பாதுகாப்புக்
குழுவானது ஏற்பாடு செய்த ஆயுதக்குறைப்புப் பிரச்சனை தொடர்பான மாநாடு,
1932 பிப்ரவரியில் தான் கூடியது. இம்மாநாட்டில்
பிரான்சுக்கு நிகராகத் தானும் ஆயுதங்களை வைத்துக்கொள்ள ஜெர்மனி அனுமதி கோரியபோது
அது மறுக்கப்பட்டது. அக்டோபர் திங்களில் ஹிட்லர் ஜெர்மனியை மாநாட்டிலிருந்தும்
பன்னாட்டுச் சங்கத்திலிருந்தும் விலக்கிக்கொண்டார்.
1931இல் ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கியது. சங்கம்
ஜப்பானைக் கண்டனம் செய்யவே ஜெர்மனியின் நடவடிக்கையைப் பின்பற்றி ஜப்பானும்
சங்கத்திலிருந்து வெளியேறியது. இத்தாலி எத்தியோப்பியாவைத் தாக்கிய விசயத்தில்
சங்கம் இத்தாலிக்கு எதிராகத் தடைகளை விதித்தது. தடைகள் நடைமுறைக்கு வந்தபோது,
அதை
எதிர்த்து இத்தாலி 1937இல் விலகியது. இதன்பின்னர்
ஏற்பட்ட ரைன்லாந்து, ஆஸ்திரியா,
செக்கோஸ்லோவாக்கியா,
போலந்து
ஆகிய பிரச்சனைகளில் சங்கம் தலையிடாமல் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாய்
விளங்கியது. 1939 டிசம்பர் திங்கள்
பின்லாந்தைத் தாக்கியதற்காக ரஷ்யாவை வெளியேற்றியதே சங்கத்தின் இறுதியான உறுதியான
நடவடிக்கையாகும். சங்கத்தின் பொதுச்சபை அதன்பின்னர் கூட்டப்படவில்லை . இறுதியாக 1946இல்
பன்னாட்டுச் சங்கம் கலைக்கப்பட்டது.
பன்னாட்டுச்
சங்கம் முதல் உலகப்போரில் வெற்றிபெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.
சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை
என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை.
அமைதிக்கான இவ்வமைப்பை
உருவாக்கியவர்கள் தேசியவாதத்தின் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்திருக்கவில்லை. ‘கூட்டுப்பாதுகாப்பு’
எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.
சர்வாதிகாரிகளால்
தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான்,
ஜெர்மனி
ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது,
இங்கிலாந்து,
பிரான்ஸ்
ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.