புரட்சிக்கான காரணங்கள் - ரஷ்யப்புரட்சியும் அதன் தாக்கமும் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath
ரஷ்யப்புரட்சியும்
அதன் தாக்கமும்
அறிமுகம்
முதல்
உலகப்போரின் மாபெரும் விளைவு உலக வரலாற்றில் தனித்தன்மை கொண்ட ரஷ்யப்
புரட்சியாகும். முதல் உலகப் போரின் காரணமாக
ஏற்பட்ட பேரிழப்புகளும் பெருந்துயரங்களும் ரஷ்யாவில் நிலவிய மோசமான சமூக,
அரசியல்,
பொருளாதார
நிலைகளை அவற்றின் உச்சத்திற்கு இட்டுச்சென்றன. 1917இல்
மார்ச் திங்களில் ஒன்று, நவம்பரில் மற்றொன்று என இரண்டு புரட்சிகள்
நடைபெற்றன. சார் மன்னர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற
பூர்ஷ்வாக்கள் போரைத் தொடர விரும்பினர். ஆனால் மக்கள் அதற்கு எதிராக இருந்தனர்.
எனவே அவர்களின் தலைவர் லெனின் வழிகாட்டுதலின்படி இரண்டாவது மாபெரும் புரட்சி
மேற்கொண்டனர். ஆட்சியைக் கைப்பற்றிய லெனின் ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவினார்.
ரஷ்யாவில்
மகா பீட்டரும், இரண்டாம் கேதரினும் சமூக நிலைமையை மாற்றாமல்
ஐரோப்பிய மயமாக்கலை மேற்கொண்டனர். ரஷ்ய விவசாயிகள் நிலக்கிழார்களுக்குச் சொந்தமான
நிலங்களில் பண்ணை அடிமைகளாகக் கட்டுண்டு கிடந்தனர். கிரிமியப்போரில் ரஷ்யா
தோல்வியடைந்த பின்னர் சில சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 1861இல்
சார் இரண்டாம் அலெக்ஸாண்டர் பண்ணை அடிமை முறையை ஒழித்து அவர்களை மீட்டார். ஆனால்
அவர்கள் வாழ்வதற்குப் போதுமான நிலங்கள் வழங்கப்படவில்லை . இந்த விவசாயிகளே
புரட்சியின் வெடிமருந்துக் கிடங்காயினர். நாடு தொழில்மயம் ஆனதின் விளைவாகத்
தொழிலாளர்களின் எண்ணிக்கையும் பெருகியிருந்தது. அவர்கள் மிகக் குறைவான ஊதியம்
பெற்றதால் மனக்குறையுடன் இருந்தனர்.
இதே
சமயத்தில் அறிவுஜீவிகளிடையே புரட்சிகரக் கருத்துக்கள் பரவியதும் அவர்களை சார்
மன்னர் ஒடுக்கியதும், சமதர்மக் கொள்கையின்பால் பற்றுக் கொண்ட
மாணவர்கள் தங்கள் கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்புரை செய்ய வைத்தது. விரைவில்
மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையில் புதிய கருத்துக்கள் வடிவம் கொண்டன. மேலும்
சோசலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியும் உருவானது.
ரோமனோவ் வம்சத்தைச் சேர்ந்த சார் இரண்டாம் நிக்கோலஸ் அரசு நிர்வாகத்தில் குறைவான அனுபவமே கொண்டிருந்தார். அவருடைய மனைவி சாரினா அலெக்ஸாண்டிரா ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆளுமையாக இருந்ததால் நிக்கோலஸ் அவ்வம்மையாரின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தார். காலனிகளைக் கைப்பற்றும் போட்டியில் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதற்காக மஞ்சூரியாவில் ரஷ்யாவின் விரிவாக்கத்தை ஊக்குவித்தார். இது 1904இல் ஜப்பானோடு போரிடத் தூண்டியது. இந்தப் போரில் ரஷ்யா அடைந்த தோல்வி வேலை நிறுத்தங்களுக்கும், கலகங்களுக்கும் இட்டுச்சென்றது. சார் எதிர்ப்பு மேலும் வளர்ந்தது. 1905 ஜனவரி 22ஆம் நாளன்று கபான் எனும் பாதிரியார் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்ற பேரணியைப் புனிதபீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அரசரின் குளிர்கால அரண்மனையை நோக்கி நடத்திச்சென்றார். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட தேசியச் சட்டமன்றம், வேளாண், தொழில் துறைகளில் சீர்திருத்தங்கள் என்பவையே அவர்களின் கோரிக்கைகளாய் இருந்தன. ஆனால் காவல்துறையும், இராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ‘குருதிஞாயிறு’ என்றழைக்கப்பட்ட இந்நாளில் நடந்த நிகழ்வுகள் வேலை நிறுத்தம், கலகம், வன்முறை ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றது. சார் நிக்கோலஸ் ஒரு அரசியல் அமைப்பை வழங்கி, டூமா எனும் நாடாளுமன்றத்தை நிறுவும் கட்டாயத்திற்குள்ளானார். ஆனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு இது மனநிறைவு அளிப்பதாயில்லை. அவர்கள் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத் (குழு) எனும் அமைப்பை பீட்டஸ்பர்க்கில் நிறுவினர். டிராட்ஸ்கி அதன் தலைவர் ஆவார்.
முதல்
உலகப்போர் வெடித்ததுடன் ரஷ்யா பிரான்ஸ், இங்கிலாந்து
ஆகிய நாடுகளுடன் அணி சேர்ந்ததால் ரஷ்ய முடியாட்சி தற்காலிகமாக வலுப்பெற்றது. சாரை
(Tsar) மாற்றும் நோக்கமுடன் அரண்மனைப்புரட்சியொன்று
நடைபெறப்போவதாக வதந்தி பரவியதால் நிக்கோலஸ் தன்னைப் படைகளின் தலைமைத் தளபதியாக
அறிவித்துக் கொண்டார். 1916ஆம் ஆண்டு முடிவடைவதற்குச்
சில நாட்களுக்கு முன்னர் சார்மன்னர், பேரரசி
ஆகியோரிடம் செல்வாக்குமிக்க அதிகாரம் கொண்ட ரஸ்புட்டின் என்பவர்,
சார்
மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் கொலை செய்யப்பட்டார். பீட்டர்ஸ்பர்க்
நகரத்தின் சோவியத் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். சார் மன்னரின் நோக்கங்களை
எப்போதெல்லாம் ஆமா எதிர்த்ததோ அப்போதெல்லாம் டூமா கலைக்கப்பட்டுப் புதிய
தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசின் கொள்கைகளில் மாற்றமேதுமில்லாமல் 1917
புரட்சியுடன்
நான்காவது டூமா முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நூற்பாலைகளில் பணியாற்றிய பெண்களிடையே (அவர்களின் கணவர்கள் படைகளில் பணியாற்றினர்) ரொட்டிக்கு ஏற்பட்ட பெருந்தட்டுப்பாடு அவர்களை வேலைநிறுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியது. ரஷ்யப்பேரரசின் தலைநகரான பெட்ரோகிரேடில் தொழிற்சாலைகள் அதிகமிருந்த பகுதிகள் வழியாக அவர்கள் ஊர்வலம் சென்றனர். பெருமளவிலான பெண்உழைப்பாளர்கள் போர்க்குணத்துடன் "உழைப்போர்க்கு ரொட்டி” எனக் கோரிக்கை முழக்கமிட்டனர். தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை நோக்கிக் கையசைத்த அவர்கள், “வெளியே வாருங்கள்” “வேலையை நிறுத்துங்கள்” எனக் கூற நகரின் 4,00,000 தொழிலாளர்கள் அடுத்த நாளே (பிப்ரவரி 24) போராட்டத்தில் இணைந்தனர்.
1917
ஆம் ஆண்டுப் புரட்சி
வேலை
நிறுத்தத்தை உடைப்பதற்கு அரசு தனது துருப்புகளைப் பயன்படுத்தியது. ஆனால்
வேலைநிறுத்தத்தின் நான்காம் நாள் பாசறைகளில் இராணுவ வீரர்களின்
கலகங்கள் வெடித்தன. சார் தொலைதூரத்தில் தலைமைத்தளபதியாக தனது இராணுவத்தை
வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருடைய ஆணை நகரத்தில் ஒலிபரப்பப்படவில்லை.
அப்பணியைச் செய்ய அங்கு யாருமில்லை. இதன்பின்னர் சார் பெட்ரோகிரேடு திரும்ப
முயற்சித்தார். இருப்புப்பாதை ஊழியர்கள் அவர் பயணம் செய்த புகைவண்டியை வரும் வழியில் நிறுத்திவிட்டனர். இத்தகைய நிகழ்வுகளால்
திகைத்துப்போன சில தளபதிகளும் பெட்ரோகிரேடிலிருந்த சில தலைவர்களும் சாரைப் பதவி
விலகுமாறு கெஞ்சிக் கேட்டனர். மக்களின் பேரெழுச்சிகளுக்கு சிறிது
காலத்திற்குப்பின் மார்ச் 15இல் சார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்.
ரஷ்யப்
புரட்சி நடந்து சார் மன்னன் வீழ்ச்சியுற்றபோது நம் தேசியக்கவி பாரதியார் எழுதிய
உணர்ச்சிமிக்க கவிதை:
புதிய
ரஷ்யா
மாகாளி
பராசக்தி உருசியநாட்
டினர்கடைக்கண்
வைத்தா ளங்கே
ஆகாவென்
றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்கோலன்
அலறி வீழ்ந்தான்;
வாகான
தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெலாம்
வருந்திக் கண்ணீர்
போகாமற்
கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர்,
புதுமை
காணீர்!
அரசு
நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஒன்றுக்கொன்று இணையான இரண்டு அமைப்புகள் இருந்தன. ஒன்று
பழைய டூமா அமைப்பின்,
உடைமை
வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா அரசியல்வாதிகளைக் கொண்ட அமைப்பு. மற்றொன்று தொழிலாளர்களின்
பிரதிநிதிகள் அங்கம் வகித்தக் குழு அல்லது சோவியத் சோவியத் அமைப்புகளின்
ஒப்புதலோடு ஆமாவால் ஒரு தற்காலிக அரசை நிறுவ முடிந்தது. சோவியத்துகளில்
மென்ஷ்விக்குகள் ஆதிக்கம் செலுத்த,
சிறுபான்மையினராக
இருந்த போல்ஷ்விக்குகள் அச்சமுற்றவர்களாகவும் முடிவெடுக்க முடியாதவர்களாகவும்
இருந்தனர். லெனினின் வருகையால் இச்சூழல் மாறியது.
புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் "ரொட்டி, அமைதி, நிலம்" எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர். ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது. ஒன்று நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது. மற்றொன்று போரைத்தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு. ஏமாற்றமடைந்த விவசாய இராணுவவீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நிலஅபகரிப்பில் ஈடுபடலாயினர். இந்நிகழ்வு பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது. அரசு ‘பிரவ்தா’ வை தடை செய்து போல்ஷ்விக்குகளைக் கைது செய்தது. டிராட்ஸ்கியும் கைதுசெய்யப்பட்டார்.
லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக்
கைப்பற்றுதல்
அக்டோபர் திங்களில், லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவுசெய்யக் கேட்டுக்கொண்டார். டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார். நவம்பர் 7இல் முக்கியமான அரசுக்கட்டங்கள், குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் ஆயுதமேந்திய ஆலைத்தொழிலாளர்களாலும், புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன. 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட்அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப் பெயரிடப்பட்டது.
1870இல் மத்திய வோல்கா
பகுதி அருகே கற்றறிந்த பெற்றோர்க்கு லெனின் பிறந்தார். கார்ல்மார்க்ஸின்
சிந்தனைகளால் கவரப்பட்ட அவர், விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பினார். பெரும்பாலானோரின்
(போல்ஷின்ஸ்ட்வோ) ஆதரவைப் பெற்ற லெனினும் அவரது ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சி
என்று அறியப்பட்டனர். இவருக்கு எதிரான சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்ட்வோ )
மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
புரட்சியின் விளைவுகள்
ரஷ்யக்
கம்யூனிஸ்ட் கட்சியால் குறுகிய காலத்தில் ரஷ்யாவில் எழுத்தறிவின்மையையும்
வறுமையையும் ஒழிக்க முடிந்தது. ரஷ்யாவின் தொழில்துறையும் வேளாண்மையும் உன்னதமான
வளர்ச்சியைப் பெற்றன. வாக்குரிமை முதலாகப் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன.
தொழிற்சாலைகளும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. நிலம் சமுதாயத்தின் சொத்தாக
அறிவிக்கப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
போரிலிருந்து விலகாமலிருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்கு முக்கியக்காரணமென,லெனின்
நினைத்தார். எனவே அவர் உடனடியாக அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். மைய
நாடுகளின் கடுமையான நிபந்தனைகள் குறித்துக் கவலை கொள்ளாமல்,
புதிய
அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக அவர் போரிலிருந்து விலகினார். 1918இல்
பிரெஸ்ட்லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
ரஷ்யப்புரட்சி
உலக மக்களின் கற்பனையைத் தூண்டியது. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள்
உருவாக்கப்பட்டன. ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு காலனி நாடுகளை விடுதலைக்காக போராட ஊக்குவித்து அவர்களுக்கு
முழுமையாக ஆதரவையும் நல்கியது. நிலச்சீர்திருத்தம்,
சமூக
நலன், தொழிலாளர் உரிமைகள்,
பாலின
சமத்துவம் போன்ற இன்றியமையாதவை குறித்த விவாதங்கள் உலக அளவில் நடைபெறத் தொடங்கின.
பிரவ்தா என்பது ஒரு ரஷ்யமொழிச் சொல். அதன் பொருள் “உண்மை” என்பதாகும். இது 1918 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் கம்யூனிஸக் கட்சியினுடைய அதிகாரபூர்வ நாளேடாகும்.