முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - காலனிகளுக்கான போட்டி | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath
காலனிகளுக்கான
போட்டி
முதலாளித்துவம்
சார்ந்த தொழில்களின் நோக்கம் மிகை உற்பத்தி செய்வதாகும். இவ்வாறு உற்பத்தி
செய்யப்பட்ட உபரிச் செல்வம் மென்மேலும் தொழிற்சாலைகள் அமைக்கவும் இருப்புப்பாதை
அமைக்கவும் நீராவிக்கப்பல்கள் கட்டவும் அல்லது இவை போன்ற பிறவற்றிற்கும்
பயன்படுத்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகவல் பரிமாற்றம்,
போக்குவரத்து
ஆகிய துறைகளில் ஏற்பட்ட புரட்சியானது ஆப்பிரிக்காவிலும் ஏனைய பகுதிகளிலும்
ஐரோப்பிய விரிவாக்கம் அரங்கேறத் துணைபுரிந்தன.
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் கருத்தைக் கவரும் ஒரு அம்சம் யாதெனில் ஐரோப்பா,
மேலாதிக்க
சக்தியாக உருப்பெற்றதும் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் காலனிகளாக்கப்பட்டு
சுரண்டப்பட்டதுமாகும்.
ஐரோப்பிய
நாடுகளிடையே இங்கிலாந்து ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக
முதலாளித்துவத்துக்குத் தலைமையாகவும் விளங்கியது. சந்தை,
கச்சாப்பொருள்
ஆகியவற்றுக்கான தேவைகள் வளர்ந்து கொண்டேயிருந்ததால் சுரண்டுவதற்காகத் தங்கள்
பேரரசை விரிவாக்கம் செய்ய முதலாளித்துவ நாடுகள் உலகத்தைச் சுற்றிப் போட்டியில்
இறங்கின.
1870ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுதந்திரப்போட்டி முதலாளித்துவமானது
முற்றுரிமைகளின் முதலாளித்துவமாக மாறியது. ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கியப்
பண்புக்கூறான தொழில், நிதி ஆகிய இரண்டும் அணி சேர்ந்து சந்தைகளில்
தங்களின் பொருள்கள் மற்றும் மூலதனத்திற்கான லாபத்தைத் தேடுமென்பது பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் தெளிவாக உணரப்பட்டது. சுதந்திரவணிகம் எனும் பழையக்
கோட்பாடு சரிந்து வீழ்ந்தது. அமெரிக்காவில் கூட்டு நிறுவனங்களும் ஜெர்மனியில்
வணிகக் கூட்டிணைப்புகளும் உருவாயின.
கூட்டு
நிறுவனம் என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு
தொழில்சார் நிறுவனமாகும். தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம்,
விலை
ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.