Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | முக்கிய சமூக தீமைகள்

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முக்கிய சமூக தீமைகள் | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages

   Posted On :  11.06.2023 10:52 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

முக்கிய சமூக தீமைகள்

குடும்பப் பெருமை, பெண் குழந்தைக்குப் பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்ற காரணிகளே இந்த நடைமுறைக்கு முக்கிய காரணங்கள் ஆகும். எனவே, பிறந்த உடனேயே பெண் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

முக்கிய சமூக தீமைகள்

 

அ) பெண்சிசுக் கொலை

பெண்சிசுக்கொலை 19ஆம் நூற்றாண்டில் இந்திய சமுதாயத்தைப் பாதித்த ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும். இது குறிப்பாக ராஜபுதனம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்பெண்சிசுக்கொலையானது பொருளாதார சுமையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன.

குடும்பப் பெருமை, பெண் குழந்தைக்குப் பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்ற காரணிகளே இந்த நடைமுறைக்கு முக்கிய காரணங்கள் ஆகும். எனவே, பிறந்த உடனேயே பெண் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் இந்த நடைமுறையை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. 1795ஆம் ஆண்டின் வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் 1802ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் 1870ஆம் ஆண்டின் பெண் சிசுக்கொலை தடைச் சட்டம் ஆகிய சட்டங்களை நிறைவேற்றி பெண்சிசுக்கொலை நடைமுறையைத் தடை செய்தது.


ஆ) பெண்சிசு கருக்கொலை

பெண்சிசு கருக்கொலை என்பது சாதி, சமய, வர்க்கம் மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்த மற்றொரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும். பெண் சிசுக்கொலை அல்லது பெண்சிசு கருக்கொலை எதுவாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே. பெண்சிசு கருக்கொலை மற்றும் கருவிலேயே பாலினம் அறிதல் ஆகியவற்றைத் தடை செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.


இ) குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணமானது நடைமுறையில் பெண்களுக்கெதிரான மற்றொரு சமூக தீமையாக காணப்பட்டது.

1846ஆம் ஆண்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 10 என இருந்தது. 1872இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அக்பர் குழந்தை திருமணத்தைத் தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலைப் பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் பெண்ணிற்கான திருமணவயது 14 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 16 எனவும் நிர்ணயித்தார்.

1930இல் மத்திய சட்டபேரவையில் ராய்சாகிப்ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 14 ஆகவும் நிர்ணயித்தது. பின்னர் இது 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் திருத்தப்பட்டது.


ஈ) சதி

இந்திய சமூகத்தில் நிலவிய மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர் ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால் சிதையில் அமர்ந்த னர். கி.பி.(பொ.ஆ.) 1420இல் விஜயநகருக்கு வருகைப்புரிந்த இத்தாலிய பயணி நிக்கோலோ கோண்டி தனது குறிப்புகளில் அந்தப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டனர் என்றும் பெண்கள் இறந்த தன் கணவருடன் எரிக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறார்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சதி என்னும் பழக்கம் வங்காளத்தின் பல பகுதிகளிலும் மேற்கு இந்தியா மற்றும் தென் இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது. 1811ஆம் ஆண்டில், இராஜா ராம்மோகன் ராயின் சகோதரர் ஜெகன்மோகன் ராய் காலமானதால் அவருடன் அவரது மனைவியும் எரிக்கப்பட்டார். இராஜா ராம்மோகன் ராய் அதைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தார். இந்த கொடூரமான நடைமுறையைச் சட்டத்தின் மூலம் ஒழிப்பேன் என்று சபதம் செய்தார். அவர் சதியை ஒழிப்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தைப் பத்திரிகை மூலமாகவும் மேடைகளில் பேசுவதன் மூலமாகவும் மேற்கொண்டார்.

ராஜா ராம்மோகன் ராய் 1818-20இல் பல கட்டுரைகளை வெளியிட்டார், அதில் சதி எனும் சடங்கு சாஸ்திரங்களால் கட்டளையிடப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார். சதி எனும் சடங்கு இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிதைக்க செராம்பூர் சமயப் பரப்புக் குழுக்களில் இந்த கருத்துகள் பயன்படுத்தப்பட்டது. பழமையான இந்து பழக்கமான சதி ஒழிப்புக்கு எதிராக ராதாகந்த் தேப் மற்றும் பவானி சரண் பானர்ஜி ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.

வில்லியம் பெண்டிங் பிரபு குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபதிகளால் சதி எனும் பழக்கம் ரத்து செய்யப்படுவது பரிந்துரைக்கப்பட்டிருப்பதை கண்டார். எனவே அவர் டிசம்பர் 4, 1829இல் விதிமுறை XVI என்ற சட்டத்தை நிறைவேற்றினார். இச்சட்டத்தின் மூலம் சதியில் ஈடுபடுவது அல்லது எரித்தல் அல்லது இந்து விதவைகளை உயிருடன் புதைத்தல் ஆகியவை சட்டத்திற்கு புறம்பானது மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் தண்டிக்க கூடியவை எனவும் அறிவித்தார். அதே போன்ற நடவடிக்கைகள் பம்பாய் மற்றும் சென்னையிலும் உடனடியாக சட்டமாக்கப்பட்டது.


உ) தேவதாசி முறை

தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் "கடவுளின் சேவகர்" என்பதாகும். பெண் குழந்தையைக் கோவிலுக்கு நேர்த்தி கடனாக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர்.

பிற்காலங்களில் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம், பெருமை உணர்வு, சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றை இழந்தனர்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், கொடுமையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவதாசி முறைக்கு எதிரான அவரது போராட்டத்தைப் பாராட்டும் வகையில் 1929இல் அவர் சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார். பெரியார் ஈ.வெரா. "தேவதாசி ஒழிப்பு மசோதாவை" நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டார். 1930இல் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் இம்மசோதாவைச் சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

தேவதாசிகளின் விடுதலைக்காக போராடிய மற்றொரு பெண்மணி மூவலூர் ராமாமிர்தம் ஆவார். ராஜாஜி, பெரியார் மற்றும் திரு.வி.க. ஆகியோரின் தொடர்ச்சியான தார்மீக ஆதரவுடன் இந்த கொடுமையான முறைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பினார். இதன் விளைவாக அரசாங்கம் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

மதராஸ் தேவதாசி சட்டம் என்பது அக்டோபர் 9, 1947இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்குச் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளைத் தானமாக வழங்குவது சட்டவிரோதம் எனவும் அறிவித்தது.

Tags : Status of Women in India through the ages | Chapter 8 | History | 8th Social Science காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages : Major Social Evils Status of Women in India through the ages | Chapter 8 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை : முக்கிய சமூக தீமைகள் - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை