அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages
அலகு - 8
காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
கற்றலின்
நோக்கங்கள்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
>பழங்கால சமூகத்தில் பெண்களின் நிலை
>மத்தியகாலத்தில் பெண்களின் நிலை வீழ்ச்சி அடைதல்
>இந்திய சமூகத்தில் நிலவிய முக்கிய சமூக தீமைகள்
>சமூக தீமைகளின் ஒழிப்பில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு
>கல்வியின் மூலம் பெண்கள் விடுதலை அடைதல்
பொதுவாக
மனித சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும்
நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள்
உள்ளனர். இதனால் பல்வேறு காலங்களில் பெண்களின் நிலையை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ளுதல்
தவிர்க்க இயலாததாகிறது.
பெண்களின்
நிலை அனைத்து காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேலும் வட்டார அளவிலும்
கூட வேறுபட்டிருந்தன. பண்டைய இந்தியாவில் அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில் பெண்கள்
சமமான உரிமைகளை பெற்று மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்புகளின்
விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது. அவர்கள் அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத்
தள்ளப்பட்டனர். புதிய சமூக நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களின்
சுதந்திரத்திற்குச் சில வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தன.
பிரிட்டிஷ்
ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர
வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார்
ஈ.வெ.ரா., டாக்டர் தர்மாம்பாள் போன்ற பல முக்கிய சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின்
மேம்பாட்டிற்காக போராடினர். ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால் 1829ஆம் ஆண்டு சதி
ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின்
நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் 1856இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும்
வழிவகுத்தது. பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதைச் சீர்திருத்தவாதிகள்
உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் பெண்களுக்கான பள்ளிகளை நாட்டின் பல பகுதிகளிலும் தொடங்கினர்.
அதுவே பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்தன.
இந்திய
சுதந்திர போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். சுதந்திரம் பெறும் வரை பெண்களின்
நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை . இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பெண்கள்
அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் தற்பொழுது வாழ்க்கையின் ஒவ்வொரு
துறைகளிலும் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்துகின்றனர்.