காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages
சமூக சீர்திருத்தவாதிகளின்
பங்கு
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, பல சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் சமூக சீர்திருத்த
இயக்கங்கள் பெண்களுக்கு கல்வி அளிப்பது, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது, விதவைகளை
பராமரிப்பது, அதே போன்று சாதிமுறையின் இறுக்கமான தன்மையை நீக்குவது மற்றும் ஒடுக்கப்பட்ட
வகுப்பைச் சமத்துவநிலைக்கு உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை
ஊக்குவிக்க முயன்றது. இவ்வியக்கங்களை வழிநடத்திய சீர்திருத்தவாதிகளே நவீன இந்தியாவின்
முன்னோடிகள் ஆவர்.
அ) இராஜா ராம்மோகன் ராய்
இந்தியாவில்
காணப்பட்ட சமூக அடக்குமுறைகளை சீர்திருத்த முயன்ற பிரிட்டிஷாரின் முயற்சியை ஆதரித்த
சில அறிவார்ந்த இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் மிக முக்கியமானவர் இராஜா ராம்மோகன்
ராய் ஆவார். இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடியான இராஜா ராம்மோகன் ராய்,
தனது உடன் பிறந்த சகோதரரின் வாழ்க்கையில் இந்த நடைமுறையைக் கண்ட பின்னர் சாதிகளுக்கு
அப்பால் சதி எதிர்ப்பு போராளியானார். மனிததன்மையற்ற இத்தீய பழக்கத்திற்கு எதிரான இயக்கத்தைத்
தொடங்கினார். இரக்கமற்ற கொடிய இப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட இராஜா ராம்மோகன் ராய்
தலைமையிலான இயக்கத்தின் செல்வாக்கினால், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தச் செயலை "குற்றம்
சார்ந்த கொலை" என்று அறிவித்தது. 1829இல் சதி எனும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய
குற்றம் என வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார். இந்த தடைச்செயலுக்கு உதவியதற்காக
ராஜா ராம்மோகன் ராய் மிகவும் நினைவு கூறப்படுகிறார். மேலும் குழந்தைத் திருமணம் மற்றும்
பெண்சிசுக்கொலை ஆகியவற்றையும் அவர் எதிர்த்தார். விதவை மறுமணம், பெண்கல்வி மற்றும்
பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார். இவ்வாறாக சதி என்னும் தீய பழக்கம் சமூகத்திலிருந்து
ஒழிக்கப்பட்டது.
ஆ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
ஈஸ்வர
சந்திர வித்யாசாகர் பெண் கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரிக்கவும் பலதார மணத்தை
ஒழிப்பதற்காகவும் வங்காளத்தில் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார். 1856இல் இந்து விதவை மறுமணச்
சட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய சட்டமன்றத்திற்கு அவர் பல மனுக்களைச் சமர்ப்பித்தார்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அவரது மகன் நாராயணச்சந்திரா, ஒரு விதவையைத் திருமணம்
செய்து கொண்டார். வித்யாசாகர் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக வங்காளத்தில் நாடியா,
மிட்னாபூர், ஹுக்ளி மற்றும் பர்த்வான் ஆகிய மாவட்டங்களில் பல பெண்கள் பள்ளியை நிறுவினார்.
இ) கந்துகூரி வீரேசலிங்கம்
கந்துகூரி
வீரேசலிங்கம் பந்துலு தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி
ஆவார். அவர் விவேகவர்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டார். மேலும் அவர் 1874இல் தனது
முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார். விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச்
சமூக சீர்திருத்தத்திற்கான தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டார்.
ஈ) M.G. ரானடே மற்றும் B.M. மலபாரி
M.G.
ரானடே மற்றும் B.M. மலபாரி ஆகியோர் பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை
நடத்தினர். 1869ஆம் ஆண்டில், ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம்
மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்ததுடன் குழந்தை திருமணத்தை எதிர்த்தார். 1887இல் இந்திய
தேசிய சமூக மாநாட்டை தொடங்கினார். அது சமூக சீர்திருத்தத்திற்கான ஒப்புயர்வற்ற நிறுவனமாக
உருவானது. ஒரு பத்திரிகையாளரான B.M. மலபாரி 1884 இல் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான
ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு
அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
உ) கோபால கிருஷ்ண கோகலே
கோபால
கிருஷ்ண கோகலே 1905ஆம் ஆண்டில் இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கினார். அது தொடக்கக் கல்வி,
பெண் கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட கோபால கிருஷ்ண வகுப்பினரின் கோகலே மேம்பாடு ஆகியவற்றில்
சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பெண்கல்வியின் பரவலானது, பல பெரிய சமூக சீர்திருத்தங்களுக்கு
வழிவகுத்ததோடு, சுதந்திர போராட்டத்தில் பெண்கள் பங்கேற்கவும் வழிவகுத்தது.
ஊ) பெரியார் ஈ.வெ.ரா
பெரியார்
ஈ.வெ.ரா தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார். இவர் பெண்கல்வி,
விதவை மறுமணம் மற்றும் கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார். மேலும் குழந்தை திருமணத்தை
எதிர்த்தார்.
எ) பெண் சீர்திருத்தவாதிகள்
பெரும்பாலான
சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம் (1828), பிரார்த்தனை சமாஜம் (1867) மற்றும்
ஆரிய சமாஜம் (1875) போன்றவை ஆண் சீர்திருத்தவாதிகளால் வழிநடத்தப்பட்டன. அவர்கள் பெண்கள்
சுதந்திரம் மற்றும் வளர்ச்சியில் ஒரு எல்லையை நிர்ணயித்தனர். பண்டித ரமாபாய், ருக்மாபாய்
மற்றும் தாராபாய் ஷிண்டே போன்ற பெண் சீர்திருத்தவாதிகள் மேலும் அதை விரிவு படுத்த முயற்சித்தனர்.
1889இல் இந்து விதவைகளுக்காக சாரதா சதன் (கற்றல் இல்லம்) எனும் அமைப்பினை பண்டித ரமாபாய்
பம்பாயில் தொடங்கினார். பின்னர் அது பூனாவுக்கு மாற்றப்பட்டது. அவரது முயற்சிகளிலேயே
மகத்தானது இந்தியாவில் விதவைகளுக்கு முதன் முதலில் கல்வி புகட்ட மேற்கொண்டதாகும். மேலும்
சென்னையில் பிரம்மஞான சபை (தியோசாபிகல் சங்கம்) நிறுவப்பட்டது.டாக்டர் அன்னிபெசன்ட்
அம்மையார் ஐரோப்பாவிலிருந்து வருகை தந்து அவற்றில் இணைந்தார். இச்சங்கமும் பொது சமூக
சீர்திருத்த திட்டத்தை உருவாக்கியது.
பெரியாரின்
கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட மற்றொரு சீர்திருத்தவாதி டாக்டர் S. தர்மாம்பாள்
ஆவார். அவர் விதவை மறுமணத்தைச் செயல்படுத்துவதிலும் பெண்கல்வியிலும் மிகுந்த ஆர்வம்
காட்டினார். சீர்திருத்தவாதியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி
முறைக்கு எதிராக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் குரல் எழுப்பினார். அம்மையார் அவர்களது
நினைவாக தமிழக அரசு அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தைத் தொடங்கியது. இந்த சமூக
நலத்திட்டம் மூலம் ஏழைப்பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறாக தங்களின்
உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெண் சீர்திருத்தவாதிகளும் பெரும் பங்காற்றியுள்ளனர்.
தங்களின்
நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுக்கானதொரு சங்கம் நிறுவப்படுவதன் அவசியத்தைப்
புகழ்பெற்ற பெண்கள் உணர்ந்தனர். அதன் விளைவாக, இந்தியாவில் இந்திய பெண்கள் சங்கம்,
தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் அகில இந்திய பெண்கள் மாநாடு போன்ற ராமாமரதம மூன்று மிகப்பெரிய
பெண்கள் அமைப்புகள் நிறுவப்பட்டது.