காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பெண்களின் நிலை | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages
பெண்களின்
நிலை
அ) பண்டைய காலம்
பண்டைய இந்தியாவின்
சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அச்சான்றுகளிலிருந்து அந்தக் காலகட்டத்தில் பெண்கள்
மதிக்கப்பட்டிருந்தனர் என தெளிவாகத் தெரிகிறது. ரிக்வேத காலத்தில் மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக
இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பின்வேதகாலத்தில்
பெண்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சமய வேள்வி செயல்பாடுகளைத் தவிர்த்து,
அவர்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. பின் வேதகாலத்தின்
போது சதி எனும் பழக்கம் பிரபலமானது. விதவைகள் தாங்களாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ
கணவரின் சிதையோடு சேர்த்து எரிக்கப்பட்டனர். தந்தை வழி முறை கடுமையானதாக மாறியது. பெண்கள்
வேதாகமங்களைப் படிக்க மறுக்கப்பட்டனர்.
ஆ) இடைக்காலம்
இடைக்கால
சமூகத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை,
மற்றும் அடிமைத்தனம் போன்ற பல சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். பொதுவாக ஒருதார
மணமே இருந்தது. ஆனால் செல்வந்த மக்களிடையே பலதாரமணமும் நிலவியது. குறிப்பாக அரச மற்றும்
உயர்தர சமூகத்தினரிடையே சதி எனும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் முகலாய ஆட்சியாளர்
அக்பர் சதி முறையினை ஒழிக்க முயன்றார் என்ற உண்மையை நாம் மறுக்க இயலாது. விதவை மறுமணம்
அரிதாகவே காணப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது.
ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்களிடையே ஜவ்கார் எனும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.
இடைக்காலத்தில் விதவையின் நிலை பரிதாபமாக மாறியது. பெண்கல்விக்குச் சிறிதளவே முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது.
ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் - கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும்
தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜப்புத்திர போர்வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின்
கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறையைக் குறிப்பிடுகிறது.
பொதுவாக
பெண்களின் நிலை மோசமடைந்திருந்தபோதிலும், ரசியா சுல்தானா, ராணி துர்காவதி, சாந்த் பீபி,
நூர்ஜஹான், ஜஹனாரா, ஜீஜாபாய் மற்றும் மீராபாய் போன்ற சில விதிவிலக்குகளையும் நாம் காணலாம்.
இடைக்காலத்தில்
பெண்களின் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படவில்லை. இருப்பினும் பெண்களுக்கென தனியாக
பள்ளிகள் எதுவும் காணப்படவில்லை, பெண்கல்வி முறையாக இல்லை. பெண்கள் பொதுவாக குழந்தை
பருவத்தில் பெற்றோரிடமிருந்து தங்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டனர். ஆனால் செல்வந்தர்கள்
தங்கள் மகள்களுக்கு வீட்டிலேயே பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர். ராஜபுத்திர
தலைவர்கள் மற்றும் ஜமீன்தார்களின் மகள்கள் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றைக் கற்றனர்.
இ) ஆங்கிலேயர்கள் காலம்
இந்தியாவில்
பல நூற்றாண்டுகளாக பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்திருந்ததோடு சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்டிருந்தனர்.
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வின் விளைவாக சமூகத்தில் சீர்திருத்தம்
ஏற்பட்டது. கடுமையான சமூக தீமைகள் மற்றும் காலாவதியான பழக்கவழக்கங்களுக்கு எதிராக அறிவார்ந்த
மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்தனர்.
ஏராளமான
தனிநபர்கள், சீர்திருத்த சங்கங்கள் மற்றும் சமய அமைப்புகள் பெண் கல்வியைப் பரப்ப கடுமையாக
உழைத்தன. விதவை மறுமணத்தை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், ஒருதார மணத்தை
நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடுத்தரவர்க்க பெண்கள், தொழில்கள் அல்லது பொது வேலைவாய்ப்புகளை
மேற்கொள்ள உதவுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டன.
19ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண் கல்வியறிவுடன் ஒப்பிடும்போது பெண் கல்வியறிவு மிகக்குறைவாகவே
இருந்தது. கிறித்துவ அமைப்புகள் 1819ஆம் ஆண்டு கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார்
சங்கத்தை அமைத்தன. கல்கத்தாவில் கல்வி கழகத்தின் தலைவராக இருந்த J.E.D. பெதுன் என்பவர்
1849ஆம் ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.
1854ஆம்
ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
1882ஆம் ஆண்டில் இந்திய கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும்
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது. மேலும், சிறுமிகளுக்கு சிறப்பு
உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க பரிந்துரைத்தது. இந்தியப் பெண்கள் 1880களில் பல்கலைக்கழகங்களில்
நுழையத் தொடங்கினர். அவர்கள் மருத்துவர்களாகவும் ஆசிரியர்களாகவும் பயிற்சி பெற்றனர்.
மேலும் அவர்கள் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் எழுத தொடங்கினர். 1914 இல் மகளிர்
மருத்துவ சேவை அமைப்பு செவிலியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பெரும்பங்காற்றியது.
1890களில் D.K. கார்வே என்பவர் பூனாவில் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவினார். பேராசிரியர்
D.K. கார்வே, பண்டித ரமாபாய் ஆகியோர் கல்வியறிவின் மூலம் பெண்கள் விடுதலை பெற தீவிர
முயற்சி எடுத்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. 1916இல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம்
பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது. இது பெண்களுக்குக் கல்வியை வழங்குவதில்
சிறந்த நிறுவனமாக விளங்கியது. அதே ஆண்டில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியும் டெல்லியில்
தொடங்கப்பட்டது.