தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வேரின் மாற்றுருக்கள் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
வேரின் மாற்றுருக்கள்
அ . சேமிப்பு வேர்கள்
முள்ளங்கி, டர்னிப், பீட்ரூட் மற்றும் கேரட்டைப் பார். இவை அனைத்தும் மண்ணிற்கடியில் வளர்கின்றன. மண்ணிலிருந்து பிடுங்கிய உடன் அவற்றைக் கழுவினால் அவற்றின் மேற்பரப்பில் வேர்கள் இருப்பதைக் காணலாம். இந்தக் காய்கறிகள் அனைத்தும் தாவர வேர்களாகும். இத்தாவரங்களின் வேர்கள் சிறிய வேர்களாக இருப்பதற்குப் பதிலாக உணவைச் சேமிக்கும் உறுப்புகளாக மாறியுள்ளன. எனவே, தடித்தும், பருத்தும் உள்ளன.
முள்ளங்கியின் ஆணிவேரைக் கவனித்துப் பார்த்தால் அது கதிர் வடிவில் இருப்பதைக் காணலாம். இது மையத்தில் பருத்தும், மேலிருந்து கீழ்ப்பகுதி வரை சிறுத்தும் காணப்படும். இப்படிப்பட்ட வேரின் மாற்றுரு , கதிர் வடிவ வேர் எனப்படும்.
இதே போன்று டர்னிப் மற்றும் பீட்ரூட்டின் ஆணி வேர் பம்பர வடிவில் உள்ளது. இதன் கீழ்ப்பகுதி பருத்து உருண்டை வடிவிலும் மேற்பகுதி சிறுத்தும் உள்ளது. இது பம்பர வடிவ வேர் எனப்படும்.
கேரட்டின் வடிவம் கூம்பு வடிவம் ஆகும். இதன் மேற்பகுதி பருத்தும் அடிப்பகுதி சிறுத்தும் காணப்படும். இப்படிப்பட்ட மாறுபட்ட வேர், கூம்பு வடிவ வேராகும்.
ஆ. ஆதாரமளித்தல்
ஒரு ஆலமரத்தைப் பார். இதன் மையத்தில் தாவரத்தைத் தாங்கும் தண்டுகள் போன்ற அமைப்பு தோன்றலாம். ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை வேர்களாகும். பெரிய மற்றும் அகன்ற மரமான ஆலமரம் நிலையாக நிற்பதற்கு எண்ணற்ற வேர்கள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட தாவரங்களுக்கு கூடுதல் ஆதாரம் தேவைப்படுகின்றது. இது போன்று பல தாவரங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட தாவரங்கள் கூடுதல் ஆதாரத்திற்காக தனது தரைமேல் பாகங்களில் வேர்களை உருவாக்குகின்றன. இவ்வேர்கள் கீழ் நோக்கி வளர்ந்து தாவரத்தைத் தாங்கும் உறுப்புகளாக மாறுகின்றன.
செயல்பாடு 7
நோக்கம்
வேரின் மாற்றுருக்களைப் பற்றி படித்தல்.
தேவையானவை
முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆலமர விழுதுகள், பற்றுவேர்கள், மற்றும் சுவாசவேர்கள் (இப்பொருள்கள் கிடைக்கவில்லையெனில் அதற்குப் பதிலாக வரைபடத்தைப் பயன்படுத்தலாம்)
செயல்முறை
ஒவ்வொரு வேரின் புற அமைப்பையும் கவனித்துப் பார்.
காண்பன
ஒவ்வொரு வேரும், பிற வேர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறிந்து அவற்றின் படம் வரைக.
i. தூண் வேர்கள்
ஆலமரத்தில் காணப்படுவதுபோல், தாவரத்திற்கு ஆதாரமளிப்பதற்காக வேர்கள் மாற்றமடைகின்றன. இவை கிடைமட்டக் கிளைகளிலிருந்து தோன்றி (விழுதுகள்) செங்குத்தாகப் பூமியை நோக்கி வளர்கின்றன.
ii. முட்டு வேர்கள்
கரும்பு மற்றும் மக்காச் சோளத்தில் தண்டின் அடிப்பகுதியில் கணுக்களிலிருந்து கொத்தான வேர்கள் தோன்றி, தரையில் ஊன்றுகின்றன. இவை முட்டு வேர்கள் எனப்படுகின்றன. இவை தாவரத்திற்கு மேலும் உறுதியை அளிக்கின்றன.
iii. பற்று வேர்கள்
வெற்றிலை மற்றும் மிளகுக் கொடிகளில் கணு மற்றும் கணுவிடைப் பகுதியிலிருந்து தோன்றும் வேர்கள் ஆதாரத்தின் மீது இக்கொடிகள் பற்றி ஏற உதவுகின்றன.
சில தாவரங்களில் வேர்கள் தரையிலிருந்து தோன்றாமல் தரைமட்டத்திற்கு மேல் தண்டு அல்லது இலைகளிலிருந்து தோன்றுகின்றன. இவை மாற்றிட வேர்கள் என அழைக்கப்படுகின்றன.
இ. சுவாச வேர்கள்
அவிசினியா என்ற மரம் சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது. இதன் வேர்கள் வாயுப் பரிமாற்றத்திற்காக, தரைக்கு மேலே வளர்கின்றன. இந்த வேர்கள் குச்சி போன்று நீண்டு எண்ணற்ற துளைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இவ்வகை வேர்கள் சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டோஃபோர்கள் எனப்படுகின்றன.
வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளர்கிறது. இதன் தொற்று வேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது.
ஈ. உறிஞ்சு வேர்கள்
வேர்கள் மேலும் பல சிறப்பான பணிகளைச் செய்கின்றன. ஹாஸ்டோரியா அல்லது உறிஞ்சு வேர்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். கஸ்குட்டா என்ற ஒட்டுண்ணித் தாவரம், பிற மரங்களிலும் தாவரங்களிலும் படர்ந்து தனது உறிஞ்சு வேர்கள் மூலம் ஓம்புயிரித் தாவரத் திசுக்களைத் துளைத்து, அதிலுள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சுகின்றது. இவ்வகை வேர்கள் பொதுவாக உணவிற்காக பிற தாவரங்களைச் சார்ந்துள்ள ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகின்றன.