தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - பாலினப் பெருக்கம் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
பாலினப் பெருக்கம்
மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் மூலமாக ஒரு மலரிலிருந்து விதைகள் உருவாகின்றன. இந்நிகழ்ச்சிக்கு பாலினப் பெருக்கம் என்று பெயர். ஒரு மலரில் எவ்வாறு விதைகள் உருவாக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில், முதலாவது, மலரின் பாகங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
செயல்பாடு 3
ஒரு மலரை எடுத்துக்கொள். அதை படத்தில் உள்ளவாறு நீள்வெட்டுத் தோற்றத்தில் வெட்டி அதன் பாகங்களைப் பிரித்துப் பார். உன்னால் ஆண் இனப்பெருக்க உறுப்பான மகரந்தத்தாள் வட்டத்தைக் (மகரந்தப்பை மற்றும் மகரந்தக் கம்பி) கண்டுபிடிக்க முடிகிறதா? கவனமுடன் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலக வட்டத்தைக் (சூற்பை, சூலகத்தண்டு, சூலக முடி) கவனி. உன்னால் இவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றால் மென்மையாக, புல்லிகள் மற்றும் அல்லிகளை நீக்கிவிட்டுப் பார்க்கவும் உனது குறிப்பேட்டில் மலரின் பாகங்களை வரைந்து அவற்றை வரிசைப்படுத்தவும்.
1. மலரின் பாகங்கள்
மொட்டு நிலையிலும், மலர்ந்த நிலையிலும் உள்ள செம்பருத்தி மற்றும் ஊமத்தை மலர்களைச் சேகரித்துக் கொள். அவற்றை உற்றுநோக்கி ஒப்பிடு. அவற்றின் பண்புகளை நாம் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
இலை போன்ற பசுமை நிறமுடைய அமைப்பு , மொட்டினை முழுவதும் மூடி இருப்பதை நாம் காணலாம். வெளிப்புற அமைப்பாக அமைந்துள்ள இந்த ஒவ்வொரு பசுமை நிற இலை போன்ற அமைப்பும் புல்லி இதழ்கள் எனப்படுகின்றன. இந்த அமைப்பு புல்லி வட்டம் எனப்படுகிறது.
மலரின் பெரியதான பாகம் அல்லிகளாகும். இவை பிரகாசமான வண்ணத்துடன் கவர்ச்சியாகவும், இனிய நறுமணத்தோடும், பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதாகவும் இருக்கும். வட்டமாக அமைந்த அல்லி இதழ்களின் இணைவு அல்லி வட்டம் எனப்படுகிறது.
செம்பருத்தி மலரில் அல்லிவட்டத்தையடுத்து நீண்ட குழலையும் அதில் பல மகரந்தத்தாள்களையும் நாம் பார்க்கலாம். ஆனால், ஊமத்தை மலரில் நாம் ஐந்து மகரந்தத் தாள்களை மட்டுமே பார்க்கலாம்.
வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும் இப்பாகம் மகரந்தத்தாள் வட்டம் அல்லது ஆண் இனப்பெருக்க வட்டம் எனப்படுகிறது. ஒவ்வொரு மகரந்தத்தாளும் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை: மகரந்தக் கம்பி மற்றும் மகரந்தப் பை. ஒரு முதிர்ந்த மலரின் மகரந்தப்பையை நாம் தொட்டால் தூள் போன்ற ஒரு பொருளை நாம் பெறலாம். அவை மகரந்தத் தூள்கள் (ஆண் இனப்பெருக்க உறுப்பு) எனப்படும்.
மகரந்தத் தாள் வட்டத்திற்குள் மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலக வட்டத்தை நாம் பார்க்கலாம். இதன் அடிப்பகுதி பருத்துக் காணப்படும். இது சூற்பை எனப்படும். இதிலிருந்துதான் விதைகள் உருவாகின்றன.
சூற்பைக்கு மேலே சூலகத் தண்டு எனப்படும் மெல்லிய குழல் போன்ற பகுதி காணப்படும். இதன் நுனியில் ஒட்டும் தன்மையுடைய பகுதி ஒன்று காணப்படும். அது சூலக முடி எனப்படும். சூலக முடி, மகரந்தத்தூள்களைப் பெற்றுக்கொள்கிறது. இது, மலரின் நான்காவது வட்டமாகும்.
2. மலரின் வகைகள்
மலர்கள் இரண்டு வகைப்படும். அவை பின்வருமாறு விளக்கப்படுகின்றன.
முழுமையான மலர்
ஒரு மலரில் புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம், ஆகிய நான்கு வட்டங்களும் காணப்பட்டால் அது முழுமையான மலர் எனப்படும். முழுமையான மலர் பொதுவாக இருபால் மலராக இருக்கும்.
முழுமையற்ற மலர்
இந்த நான்கு வட்டங்களுள் ஏதேனும் ஒருசில வட்டங்கள் இல்லாத மலர்கள் முழுமையற்ற மலர்கள் எனப்படும். முழுமையற்ற மலர்கள் பொதுவாக ஒருபால் மலர்களாக இருக்கும். ஒருபால் மலர்களில் இரண்டு வகை உண்டு. அவை ஆண் மலர் அல்லது பெண் மலராக இருக்கலாம்.
எந்த மலர் மகரந்தத்தாள்களைப் பெற்று, சூலக வட்டத்தைப் பெறாமல் உள்ளதோ, அது ஆண்மலர் என்றும், எந்த மலர் சூலக வட்டத்தைப் பெற்று, மகரந்தத்தாள்கள் இல்லாமல் உள்ளதோ, அது பெண்மலர் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியகாந்திப் பூ என்பது ஒரு தனிமலர் அன்று. பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்பே சூரியகாந்தியாகும். இவ்வாறு பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர். வெட்டுக்காயப் பூண்டு என்றும் கிணற்றடிப் பூண்டு என்றும் அழைக்கப்படும் ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் என்ற தாவரத்தில் தனி மலர் போல் காணப்படுவது மஞ்சரி ஆகும். இதன் இலைச்சாறு வெட்டுக்காயங்களைக் குணமாக்கும்.
செயல்பாடு 4
மலர் ஆல்பம் ஒன்றைத் தயார் செய்க
ஒருசில மலர்களைச் சேகரித்து, அவற்றை செய்தித்தாள் அல்லது புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையில் வைக்கவும். அவற்றின் மேல் இரண்டு கடினமான தாளை வைத்து அதன்மீது செங்கல் போன்ற கனமான பொருளை வைத்து அழுத்தவும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாள்களை மாற்றவும். மலர்கள் காயும் வரை இதைத் தொடர்ந்து செய்யவும். பின் அவற்றை ஒரு தாளில் ஒட்டவும். இதுவே மலர் ஆல்பமாகும்.
செயல்பாடு 5
3. மகரந்தச் சேர்க்கை
பூசணி மலர் ஒருபால் மலர் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அதாவது சில மலர்கள் ஆண் மலர்களாகவும், பல மலர்கள் பெண் மலர்களாகவும் இருக்கின்றன. மொட்டுக்கள் மலர்வதற்கு முன்பே, நாம் ஆண் மற்றும் பெண் பூசணி மலர்களை அடையாளம் காணமுடியும். ஒரு மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள பூசணி மலரில் ஒரு சோதனையைச் செய்து பார்ப்போம்.
செயல்பாடு 6
பூசணித் தாவரம் மொட்டுகளை உருவாக்கும்போதே அதில் பத்துப் பெண் மலர் மொட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றை நெகிழிப் பையால் கட்டு. இதனால் இம்மலருக்குள் வேறு எந்தப் பொருளும் நுழைய முடியாது. காற்று நுழைவதற்காக, குண்டூசி கொண்டு நெகிழிப்பையில் சிறுசிறு துளைகளை உருவாக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை காத்திரு. பிறகு மொட்டுகள் விரிந்து மலராக மாறும்.
பிறகு மூன்று அல்லது நான்கு ஆண் மலர்களைத் தேர்ந்தெடுத்து அதன் மகரந்தத்தாளை எடுத்து, அதை நன்கு குலுக்கி, அதில் உள்ள மகரந்தத்தூள்களைச் சேகரித்து வைத்துக் கொள். பிறகு நெகிழிப் பைகளால் கட்டப்பட்ட பத்துப் பெண் மலர்களில், ஐந்து பெண் மலர்களின் பையைத் திறந்து, சிறிய தூரிகை மூலம் சேகரிக்கப்பட்ட மகரந்தத்தூள்களைக் கவனத்துடன் பெண்மலரின் சூலகமுடி சேதமடையாமல், அதில் தூவி அம்மலர்களை மீண்டும் நெகிழிப் பையால் கட்டிவைக்கவும்.
மேற்கண்ட சோதனையில் நாம் ஆண்மலரில் உள்ள மகரந்தத்தூளை பெண்மலரில் உள்ள சூலக முடியில் சேர்த்தோம். இது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும். ஆனால், இயற்கையாகவே, பல்வேறு வழிமுறைகளில் மலரின் சூலகமுடியை மகரந்தத்தூள் சென்றடைகிறது. இது இயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
புற்கள் போன்ற சில தாவரங்களில், மகரந்தத்தூள் மிகவும் லேசாக இருக்கும். மகரந்தப்பை, மகரந்தத்தூள்களை உதிர்க்கும் போது அவற்றை காற்று எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கிறது. பூச்சிகள் மற்றும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பல வகையான பறவைகள் மலர்களைச் சுற்றி வட்டமிடுகின்றன. இவை ஒரு மலரிலிருந்து, மற்றொரு மலருக்கு மகரந்தத்தூளை எடுத்துச்செல்ல உதவுகின்றன. அவை ஒரு மலரிலிருந்து வேறொரு மலருக்குச் செல்லும்போது, அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன. இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவே அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
நாம் மகரந்தப் பையைக் குலுக்கும் போது அதில் உள்ள மகரந்தத்தூள்கள் உதிர்கின்றன. இதேபோல், காற்று மலரை அசைக்கும் போதும், வண்ணத்துப்பூச்சி மலரை அசைக்கும் போதும் மகரந்தத்தூள் அதே மலரின் சூலகத்தைச் சென்றடைகிறது. ஒரே மலரில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டையும் கொண்ட தாவரங்களில் (இருபால் மலர்) இம்முறையில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
அட்டவனை 5.1 தன் மகரந்தச்சேர்க்கைக்கும் அயல் மகரந்தச்சேர்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
தன் மகரந்தச்சேர்க்கை
1. ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் சூலகமுடியையோ அல்லது மற்றொரு மலரின் சூலகமுடியையோ அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
2. தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தியாகத் தேவையில்லை.
3. இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது.
அயல் மகரந்தச்சேர்க்கை
1. ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலகமுடியைச் சென்றடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
2. அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
3. இதனால் உருவாகும் புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படுகின்றன.
பொதுவாக, ஃபேபேஸி குடும்பதைச் சார்ந்த அவரை மற்றும் சொலானேஸி குடும்பத்தைச் சார்ந்த தக்காளி ஆகியவற்றில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. தக்காளியில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றாலும் அதற்கு பூச்சிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், பூச்சிகள் மலரில் ஏற்படுத்தும் அதிர்வுகளால், மகரந்தத்தூள்கள் வெளியேறுகின்றன. நெல்லின் மலர்கள் காற்றினால் அசைக்கப்படுவதால், அதில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வாறு மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படுகின்றன.
பல தாவரங்களில் மகரந்தங்கள் வேறு மலர்களிலிருந்தே பெறப்படுகின்றன. பூசணி போன்ற ஒருபால் மலர்களைக் கொண்ட தாவரங்களில் இது காணப்படுகிறது. சில மலர்களில் மகரந்தங்கள் உருவாவதற்கு முன்பே சூலக வளர்ச்சி முடிவு பெறுகிறது. இவை அயல் மகரந்தச் சேர்க்கையையே நம்பியுள்ளன. ஆப்பிள், ஃபிளம்ஸ், ஸ்ட்ரா ஃபெர்ரி மற்றும் பூசணி வகைகளில் பூச்சிகளின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
4. கருவுறுதல்
மகரந்தச் சேர்க்கையின்போது மகரந்தத்தூள் சூலகமுடியை அடைகிறது. இதற்குப் பிறகு என்ன நிகழும்? சூலக முடியில் உருவாகும் சில பொருள்களால் மகரந்தத்தூள் முளைக்கின்றது. பிறகு மகரந்த தூளிலிருந்து மகரந்தக்குழல் உருவாகின்றது. இந்த மகரந்தக்குழல், ஆண் கேமீட்களைக் கொண்ட மகரந்தத்தூளை எடுத்துச் செல்கிறது. இது சூலகத் தண்டு வழியே சூற்பையை அடைந்து அங்கு இருக்கும் பெண் கேமீட்டோடு இணைகிறது. இவ்வாறு ஆண் கேமீட்டும் பெண் கேமீட்டும் இணையும் நிகழ்ச்சி கருவுறுதல் எனப்படும்.
இந்த பெண் கேமீட் எங்கே உள்ளது? ஒரு மலரின் சூற்பையின் உள்ளே உருண்டையான சூல்கள் காணப்படும். இந்தச் சூல்களுக்குள் (பெண் கேமீட்) அண்டம் இருக்கின்றது. சூலினைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு மலரின் சூற்பையைக் குறுக்கு வெட்டிலும், நீள் வெட்டிலும் வெட்டிப் பார்க்க வேண்டும்.
ஒரு மலரின் சூற்பையை நீள்வெட்டிலும், குறுக்கு வெட்டிலும் வெட்டிப்பார். அதிலுள்ள சூல்களைக் கவனி. அதுபோல பல்வேறு மலர்களின் சூல் மற்றும் சூற்பையை ஒப்பிட்டுப் பார். அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்களைக் கொண்டுள்ளனவா? சூற்பையில் உள்ள சூல்களின் எண்ணிக்கைக்கும், அதன் கனிகளில் உள்ள விதைகளின் எண்ணிக்கைக்கும் ஏதேனும் தொடர்பைக் காண முடிகிறதா?
தாவரத்தின் வாழ்க்கைச் சுழற்சி
தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், மாம்பழம், பட்டாணி மற்றும் சீத்தாப்பழம் போன்ற கனிகளைச் சேகரித்து அவற்றை உற்றுநோக்கு. இவற்றுள் கத்தரி மற்றும் வெண்டைக்காயின் அடிப்பகுதியில் பசுமை நிறப்பகுதி இருப்பதைக் காணலாம். அது என்ன?
மாம்பழம், சீத்தாப்பழம் மற்றும் பட்டாணியை ஒப்பிட்டுப் பார். சீதாப்பழத்தைத் தவிர, மற்றவை எல்லாம் தனிக்கனிகள். சீதாப்பழத்தில் பல சிறு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விதை உள்ளது. மாம்பழத்தில் ஒரு விதையும், பட்டாணியில் பல விதைகளும் உள்ளன. இவற்றிலிருந்து நீ என்ன புரிந்து கொள்கிறாய்?.
* கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காயின் அடிப்பகுதியில் உள்ள பசுமை நிறப் பகுதி அம்மலரின் புல்லிகளாகும். சில மலர்களில் கருவுறுதலுக்குப் பின் புல்லி இதழ் கனியிலிருந்து உதிராமல் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்.
* சீத்தாப்பழம் என்பது பல கனிகள் சேர்ந்து உருவான திரள் கனி. இதன் ஒவ்வொரு பகுதியும் மென்மையான ஜவ்வு போன்று இருக்கும். இது உண்ணக்கூடிய பகுதியாகும்.
* மாம்பழத்தில் வெளிப்பகுதியும் மையத்திலுள்ள சதைப்பற்றுள்ள பகுதியும் உண்ணக்கூடியவை. இவை இனிப்பாக இருக்கும். இதன் உட்புறப் பகுதியில் ஒரே ஒரு விதை இருக்கும்.
* பட்டாணியின் கனியானது சதைப்பற்றுள்ளதாக இருக்காது. ஆனால், இது பல விதைகளை உள்ளடக்கிய மூடிய அறை போன்றது.
மேற்கூறிய அனைத்துக் கனிகளிலும் சூலக வட்டத்தின் பருத்த பகுதியான சூற்பை கனியாக மாறியுள்ளது. சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறியுள்ளன.
இந்த உற்று நோக்குதல்களின் அடிப்படையில் ஒரு மலர் கருவுற்றுக் கனியாகும் போது என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பட்டியலிட்டுவோம். இவை அனைத்தும் கருவுறுதலுக்குப் பின் நடைபெறும் மாற்றங்கள் எனப்படுகின்றன.
❖ சில கனிகளில் புல்லி வட்டம் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்.
❖ அல்லிகள் கீழே உதிர்கிறது.
❖ மகரந்தத்தாள் வட்டமும் உதிர்கிறது.
❖ சூற்பை கனியாக மாறுகிறது.
❖ சூலகத் தண்டும் சூற்பையும் உதிர்கின்றன.
❖ உணவைச் சேமித்துவைப்பதற்காக சூலகம் பருத்து, கனியாக உருவாகிறது.
❖ சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறுகின்றன.
உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை, இரட்டைத் தேங்காய் ஆகும். இதன் விதை இரண்டு தேங்காய்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல இருக்கும். இவ்விதை சேசில்லிஸ் (Seychelles) என்ற இடத்தில் உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், வட்டம் 3 அடி, எடை 18 கிலோ உள்ளதாக இருக்கும்.
தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை ஆர்க்கிட் விதைகளாகும். 35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை வெறும் 25 கிராம் மட்டுமே.