Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | தண்டின் மாற்றுருக்கள்

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தண்டின் மாற்றுருக்கள் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants

   Posted On :  09.05.2022 04:25 am

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

தண்டின் மாற்றுருக்கள்

தண்டின் மாற்றுருக்கள் : அ. தரைமேல் தண்டின் மாற்றுருக்கள், ஆ. தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள், இ. தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள்.

தண்டின் மாற்றுருக்கள்

இஞ்சி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இம்மூன்றிற்கும் உள்ள பொதுவான பண்பு என்னவென்று தெரியுமா? இந்த மூன்றுமே தண்டுகளாகும். சில தாவரங்களின் தண்டுகள் உணவைச் சேமிப்பதற்காவும், உடல இனப்பெருக்கம் செய்வதற்காகவும் மாறுபட்டுள்ளன. தண்டின் மாற்றுருக்களைத் தரைமேல் தண்டின் மாற்றுருக்கள், தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள் மற்றும் தரைகீழ்த் தண்டின் மாற்றுருக்கள் எனப் பிரிக்கலாம்.


அ. தரைமேல் தண்டின் மாற்றுருக்கள் 

இலைத் தொழில் தண்டு

வறண்ட சூழ்நிலையில் நீரைச் சேமிப்பது ஒரு சவாலாகும். மேற்பரப்பில் உள்ள நீர் ஆவியாகிறது. மேற்பரப்பு பெரியதாக இருந்தால் நீர் ஆவியாதல் அதிகரிக்கிறது. மேற்பரப்பு சிறியதாக இருந்தால் நீர் ஆவியாதலும் குறைகிறது. அதிகமான இலைகளைக் கொண்ட தாவரங்கள் அதிகளவு பரப்பைக் கொண்டுள்ளன. எனவே, கள்ளித் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்கும் பருத்த தண்டையும், முட்களாகிய மாறிய இலைகளையும் கொண்டுள்ளன.



ஆ. தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள்

சில வகைத் தாவரங்களின் தண்டுகள் இனப்பெருக்கத்திற்காக தரையை ஒட்டி, கிடைமட்டமாக மண்ணில் வளர்கின்றன. இவை நான்கு வகைப்படும்.

ஓடு தண்டு

தரையின் மேற்பரப்பில் வளரக்கூடிய கிடைமட்டத் தண்டு உடைந்து, ஆங்காங்கே வேர்களையும், இலைகளையும் உருவாக்கி, புதிய தாவரங்களை உருவாக்கின்றது. எ.கா. வல்லாரை.


ஸ்டோலன்

ஸ்டோலன் என்பது தண்டின் மென்மையான இலையாகும். இது தரையின் மேற்பரப்பிற்கு மேல் கிடைமட்டமாக வளர்ந்து பின்னர் வளைந்து மண்ணைத் தொட்டு வளரும். அவ்வாறு மண்ணைத் தொடும் போது இது புதிய தாவரமாக மாறுகிறது. எ.கா.: காட்டு ஸ்ட்ராபெர்ரி.


தரைகீழ் ஓடு தண்டு (அல்லது) சக்கர்

இது சிறிய மற்றும் நலிந்த பக்கவாட்டுக் கிளை ஆகும். இது மேல் நோக்கி வளர்ந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்குகிறது. எ.கா.: கிரைசாந்திமம்.


குட்டையான ஓடு தண்டு

இதன் தண்டு குட்டையானது, தடித்தது. இது இலையின் கோணப்பகுதியிலிருந்து தோன்றும் குட்டையான மற்றும் தடித்த கிளையாகும். இது தடித்த கணுவிடைப் பகுதியைக் கொண்டது. இது ஆங்காங்கே கொத்தான இலைகளையும், அதற்குக் கீழே வேர்களையும் உருவாக்குகிறது. இத்தண்டு உடைந்து இனப்பெருக்கம் செய்கிறது. எ.கா.: வெங்காயத் தாமரை.



இ. தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள்

தரைமேல் தண்டு மற்றும் தரையொட்டிய தண்டின் மாற்றுருக்களில், தண்டு வரம்பற்ற வளர்ச்சி உடையது. தரைகீழ்த் தண்டுகளில் தண்டானது முழுவதுமாக மண்ணில் புதைந்திருக்கும். இவை வரம்புடைய வளர்ச்சி உடையவை.

பொதுவாக தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால், சில தண்டுகள் தரைக்குக் கீழே வளர்கின்றன. உணவைச் சேமிப்பதற்காக இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும். தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும். அவை:

1. மட்டநிலத் தண்டு 2. கந்தம் 

3. கிழங்கு 4. குமிழம்


1. மட்டநிலத் தண்டு

இத்தண்டு தரைக்குக் கீழ் காணப்படும் தடித்த தண்டு ஆகும். இது கணு மற்றும் கணுவிடைகளோடு காணப்படுகின்றது. கணுவில் செதில் இலைகள் காணப்படுகின்றன. இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் வளர்கிறது. இத்தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும். எ.கா.: இஞ்சி, மஞ்சள்.


2. கந்தம்

இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் காணப்படும். இதன் மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாகக் காணப்படும். இது மட்ட நிலத்தண்டைவிட மிகவும் குறுகிய தண்டாகும். இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்குகின்றன. 

எ.கா.: சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு


3. கிழங்கு

இது கோள வடிவிலுள்ள உணவைச் சேமிக்கும் பெரிய தரை கீழ்த் தண்டாகும். இதன் தண்டில் செயலற்ற மொட்டுகள் காணப்படும். இவை கண்கள் எனப்படும். நாம், இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து, புதிய தாவரமாக வளர்கின்றன. எ.கா.: உருளைக் கிழங்கு.



4. குமிழம்

இதன் தண்டு மிகவும் குறுகிய தட்டு போன்றது. சதைப்பற்றான இலைகளில் இது உணவைச் சேமிக்கிறது. குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன.

• சதைப்பற்றுள்ள இலை 

• செதில் இலை

தண்டின் நுனியில் நுனி மொட்டு இருக்கும். இது எண்ணற்ற செதில் இலைகளால் மூடப்பட்டிருக்கும். குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கின்றன. எ.கா.: பூண்டு, வெங்காயம்.




செயல்பாடு 8

நோக்கம் : தண்டின் மாற்றுருக்களைப் பற்றி படித்தல். 

தேவையானவை: இஞ்சி, உருளைக் கிழங்கு, வெங்காயம், புதினா, காகிதப்பூ செடி, அகேஷியா, சப்பாத்திக் கள்ளி மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கும் தண்டுகள். 

செயல்முறை: ஒவ்வொரு தண்டின் புற அமைப்பையும் நன்றாக உற்று நோக்குக. 

காண்பன: இவற்றின் படத்தை வரைந்து, இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் மற்றும் அவற்றின் மாற்றுருக்களின் பணிகளையும் எழுதுக.


Tags : Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants : Modification of stems Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் : தண்டின் மாற்றுருக்கள் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்