தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உறுப்புகளின் மாற்றுருக்கள் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
தாவர உறுப்புகளின் மாற்றுருக்கள்
கீழ்க்காணும் தாவரங்களை ஒப்பிட்டு, உங்களின் ஆசிரியருடன் கலந்துரையாடுக.
ஒரு கேரட் தாவரத்தை மண்ணிலிருந்து கவனமாக நீக்கி அதனை உற்றுநோக்கு. அத்தாவரத்தில் நாம் உண்ண க் கூடிய கேரட் என்ற பகுதியைப் பார். அது உண்மையிலேயே காய் அல்ல. அது அத்தாவரத்தின் ஆணி வேர். இதில் ஆணி வேர் தடித்து கேரட்டாக மாறியுள்ளதை நாம் காணலாம். பிற தாவர வேர்களைப் போன்று இல்லாமல் கேரட் தாவரத்தின் ஆணி வேர் பல விதங்களில் மாறுபட்டுள்ளது. இயல்பாகவே ஒவ்வொரு தாவரமும்
அதன் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பல உறுப்புகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக ஒரு தாவரத்தில் வேரானது தாவரத்தை மண்ணில் ஊன்றச் செய்யவும் மண்ணிலுள்ள நீரையும், கனிமப் பொருள்களையும் உறிஞ்சுவதற்கும் உருவாகிறது.
இலைகள் ஒளிச்சேர்க்கை செய்வதற்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. சூரிய ஒளியைப் பெறுவதற்கும், வேரிலிருந்து நீரை இலைகளுக்குக் கடத்துவதற்கும் தண்டு தோன்றுகிறது. எனினும், ஒருசில தாவரங்களில், வேறுசில குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வகையில் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் தோன்றுகின்றன. சில தாவரங்களில் வேர், தண்டு மற்றும் இலைகள் ஆகியவை சிறப்பான பணிகளான உணவு சேமித்தல், ஆதாரமளித்தல், பாதுகாப்பு மற்றும் பல முக்கியமான பணிகளைச் செய்வதற்காக தங்களது வடிவம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்கின்றன. இதற்கு மாற்றுரு என்று பெயர்.
கள்ளித் தாவரங்களில் இலை போன்று காணப்படுவது அதன் தண்டு ஆகும். முட்கள் போன்று காணப்படுவது அதன் இலை ஆகும். இதன் இலைகள் நீராவிப்போக்கைத் தவிர்ப்பதற்காக முட்களாக மாறியுள்ளன. ஒளிச்சேர்க்கையானது தண்டின் மூலம் நடைபெறுகிறது. இப்பகுதியில் வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்கள் பற்றி படிப்போம்.