தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இனப்பெருக்கம் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
இனப்பெருக்கம்
செயல்பாடு 1
நோக்கம்
தர்ப்பூசணி மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து புதிய தலைமுறைத் தாவரங்களை உருவாக்குதல்.
தேவையானவை
மண்ணால் நிரப்பப்பட்ட இரண்டு தொட்டிகள், உருளைக் கிழங்கு, தர்ப்பூசணி விதைகள் மற்றும் தண்ணீர்.
செய்முறை
இரண்டு தொட்டிகளை எடுத்துக்கொண்டு அவற்றை இயற்கை உரம் கலந்த மண்ணால் நிரப்பவும். காய்ந்து போகாத தோல் உடைய புதிய உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு, ஒரு தொட்டியில் அதைப் புதைத்துவைக்கவும். மறு தொட்டியில் தர்ப்பூசணி விதைகளை விதைக்கவும். இரண்டு தொட்டிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி, அவற்றைப் பராமரிக்கவும்.
காண்பன
சில நாட்கள் கழித்து, ஒரு தொட்டியில் உருளைக்கிழங்கு முளைத்திருப்பதை நாம் காணலாம். மறு தொட்டியில் விதைக்கப்பட்ட தர்ப்பூசணி விதைகள் முளைத்துச் செடிகளைத் தந்திருக்கும். ஒவ்வொரு விதையும் ஒரு செடியை உருவாக்குகிறது.
இச்செயல்பாட்டின் மூலம் தர்ப்பூசணி விதைகளிலிருந்து தர்ப்பூசணிச் செடிகள் உருவாவதைக் காணலாம். உருளைக்கிழங்குச் செடியோ விதைகளிலிருந்து உருவாகவில்லை. அது தண்டுக் கிழங்கிலிருந்து (உடல் உறுப்பு) உருவாகியுள்ளது. புதிய தலைமுறைத் தாவரங்களை உருவாக்க விதை மட்டுமின்றி உடல் உறுப்புகளும் உதவுகின்றன என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
தாவரங்களும், விலங்குகளும் இளம் உயிரிகளை உருவாக்கி தங்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் நிகழ்ச்சியே இனப்பெருக்கம் எனப்படுகிறது. முருங்கை மரத்தினை விதைகள் மூலமாகவும், போத்து நடுதல் மூலமாகவும் உருவாக்கலாம். விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாகும் நிகழ்ச்சியை நாம் பாலினப் பெருக்கம் என்கிறோம். விதைகள் இல்லாமல் பிற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலிலா இனப்பெருக்கம் என்கிறோம்.
செயல்பாடு 2
பின்வரும் தாவரங்கள் எதிலிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டுபிடி.