ஒரு
பண்புக் கலப்பு - ஒரு ஜீன் பாரம்பரியம்
ஒரு பண்பின் இரு மாற்றுத்
தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலப்புறச் செய்வது ஒரு பண்புக்
கலப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டாக இந்தக்
கலப்பிற்கு பட்டாணிச் செடியின் உயரம் என்ற பண்பை எடுத்துக் கொண்டு, நெட்டை,
குட்டை ஆகிய பண்புகளில் வேறுபட்ட இரு தாரவங்களைக் கலப்புறச்
செய்தார்.
பெற்றோர்
தலைமுறை (P): அவர் தனது ஆய்விற்கு ஒரு தூய நெட்டைத் தாவரத்தையும்
தூய குட்டைத் தாவரத்தையும் தேர்ந்தெடுத்தார்.
முதல்
சந்ததி (F1) பெற்றோர்: தூய பெற்றோர் கலப்பின் மூலம் பெறப்பட்ட
விதைகளிலிருந்து தோன்றும் தாவரங்கள் முதல் சந்ததி தாவரங்கள் ஆகும். அனைத்துத்
தாவரங்களும் நெட்டைத் தன்மைக் கொண்ட ஒரு பண்புக் கலப்புயிரிகள்.
இரண்டாம்
சந்ததி (தலைமுறை) F2: F1 சந்ததியின் ஒரு பண்புக்
கலப்புயிரிகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நெட்டை மற்றும்
குட்டைத் தாவரங்கள் 3 : 1 என்ற விகிதத்தில் தோன்றின. அவை 784 நெட்டைத் தாவரங்களும், 277 குட்டைத் தாவரங்களும்
ஆகும். ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித்தோற்றத்தைப் புறத்தோற்றம் (பீனோ டைப்)
என்கிறோம். எனவே புறத்தோற்ற விகிதம் 3:1 ஆகும்.
F2 சந்ததியில் மூன்று வகையான தாவரங்கள் தோன்றின.
கலப்பற்ற நெட்டை
(ஹோமோசைகஸ்) TT-1
கலப்பின நெட்டை
(ஹெட்டிரோசைகஸ்) Tt - 2
கலப்பற்ற குட்டை tt -1
தாவரங்களின் ஜீனாக்கம்
ஜீனோடைப் எனப்படும். எனவே ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம் 1:2:1 (படம் 18.1).
மெண்டல் தன் ஆய்வின்
முடிவில் காரணிகள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதைக்
கண்டறிந்தார். காரணிகள் தற்போது ஜீன்கள் என அழைக்கப்படுகின்றன. நெட்டை மற்றும்
குட்டைப் பண்புகள் வேறுபட்ட ஒரு ஜோடி ஜீன்களைக் கொண்டுள்ளன. நெட்டைத் தாவரத்தில்
காணப்படும் ஒரு ஜோடி காரணிகள் T என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. (ஓங்கு
பண்பின் (Tall) முதல் எழுத்து) குட்டைத் தாவரத்தின் காரணிகள்
(t) என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது (ஒடுங்கு பண்பு)
இந்தக் காரணிகள் ஜோடியாகக் காணப்படும், கலப்பற்ற நெட்டை (TT),
குட்டை (tt) பெற்றோரில் உள்ளது போல காரணிகள்
ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருப்பின் அவை ஹோமோசைகஸ் (ஒத்த கருநிலை TT, tt) எனவும் ஒரு பண்புக் கலப்புயிரியில் உள்ளது போல் காரணிகள் வெவ்வேறு வகையைச்
(Tt) சேர்ந்தவையாக இருந்தால் ஹெட்டிரோசைகஸ் (வேறுபட்ட
கருநிலை) எனவும் அழைக்கப்படுகின்றன.
1. இரு வகையான காரணிகள்
ஒரு ஜோடி பண்புகள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ளன. அவை அல்லீல்கள் எனப்படும்.
அல்லீல்களால் வெளிப்படும் புறத்தோற்றப் பன்புகள் அல்லீலோமார்புகள் எனப்படும்.
2. ஒரு பண்பின் இரு
வேறுபட்ட நிலைகளுக்கான காரணிகளில் கருவுறுதல் நடைபெறும் போது, ஒரு பண்பு
மட்டும் வெளிப்படுகிறது (நெட்டை) மற்றொன்று மறைக்கப்படுகிறது (குட்டை) வெளிப்படும்
பண்பு ஓங்கு பண்பு (dominant) எனவும், மறைக்கப்படும்
பண்பு ஒடுங்கு பண்பு (recessive) எனவும் அழைக்கப்படுகிறது.
3. காரணிகள்
அனைத்தும் தூய நிலை உடையன. கேமீட்டுகள் (பாலின செல்கள்) உருவாகும் போது காரணிகள்
தனித்தனியாகப் பிரிந்து இரு வேறுபட்ட பண்புகளுக்கான காரணிகளில் ஒன்று மட்டும் ஒரு
கேமீட்டுக்குச் செல்கிறது. நெட்டை (T) மற்றும் குட்டை (t)
தன்மைக்குரிய காரணிகள் தனியாக உள்ளன. முதல் சந்ததி கலப்புயிரில் தன்
மகரந்தச் சேர்க்கை நடைபெறும் போது இவ்விரு காரணிகளும் பிரிந்து பின்பு சார்பின்றி
இணைந்து நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களை உருவாக்குகின்றன.
தகவல் துணுக்கு
புன்னட்
கட்டம் என்பது R.C புன்னட்டால் உருவாக்கப்பட்ட சோதனைப்
பலகை ஆகும். மரபியல் கலப்பில் ஜீனோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து
கொள்ளும் ஒரு வரைபட முறையாகும்.