Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு

இரண்டாம் உலகப்போர் - புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு | 10th Social Science : History : Chapter 3 : World War II

   Posted On :  27.07.2022 08:37 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்

புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு

1941இல் சுதந்திரமான அனைத்து உலக நாடுகளிடையே நிரந்தரமான அமைதியைப் பேணத் தேவைப்படும் பன்னாட்டு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரிட்டனும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கின.

புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு

1941இல் சுதந்திரமான அனைத்து உலக நாடுகளிடையே நிரந்தரமான அமைதியைப் பேணத் தேவைப்படும் பன்னாட்டு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரிட்டனும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கின. பன்னாட்டுப் பொருளாதாரம், நிதி ஆகியவற்றின் நிலைத்த தன்மையும் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இப்பொது நோக்கங்களுக்கு, உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து செயல்படும் பன்னாட்டு அமைப்பு தேவைப்பட்டது. இம்முயற்சியின் இறுதியாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு போன்றவையும் அனைத்து நாடுகள், சமூகங்கள் ஆகியவற்றின் முக்கிய அடிப்படை அம்சங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள, அவற்றின் துணை அமைப்புக்களும் நிறுவப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்கான முதல் முயற்சியை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரிட்டனும் 1941இல் அட்லாண்டிக் சாசனத்தின் வழியே வெளியிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் 1942இல் புத்தாண்டு தினத்தன்று, அச்சு நாடுகளுக்கு எதிராக (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) போர் செய்துவந்த 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945ஆம் ஆண்டு , ஜூன் 26ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன. இந்தியா அப்போது சுதந்திர நாடாக இல்லையென்பதால் சாசனத்தில் கையெழுத்திடவில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளை பெற்றுள்ளது.


"ஐக்கிய நாடுகள் சபையின் மக்களாகிய நாங்கள் எதிர்கால சந்ததியினரை போரின் துயரங்களிலிருந்துக் காப்போம் என உறுதி கூறுகிறோம். அது நம்முடைய வாழ்நாளில் இருமுறை மனிதகுலத்திற்குச் சொல்லமுடியாத துயரங்களைக் கொண்டுவந்துள்ளது. மேலும் அடிப்படை மனித உரிமைகள், மனிதப்பண்புகளைப் பெற்றுள்ள தனிநபர்களின் கண்ணியம், மதிப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும், சிறிய நாட்டிற்கும் பெரிய நாட்டிற்கும் சம உரிமை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வோம் "... - ஐக்கிய நாடுகள் சபையின் முகவுரையிலிருந்து

பொதுச்சபையும் பாதுகாப்பு அவையும்


ஐக்கிய நாடுகள் சபை ஏறத்தாழ ஏனைய அரசுகளைப் போலவே, அரசுக்குரிய சட்டமியற்றுதல், நிர்வகித்தல், நீதித்துறை போன்றவற்றிற்கு நிகரான அமைப்புகளோடு செயல்படுகிறது. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கொருமுறை கூடும் இவ்வமைப்பில் நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும் முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு சபையானது பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்விரு சபைகளுமே ஒரு சட்டமன்றத்தைப் போலச் செயல்படுகின்றன. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும் மறுப்பாணை அதிகாரம் (Veto power) உண்டு. எடுக்கும் எந்த முடிவையும் இதன் மூலம் தடுத்துவிடலாம். இவ்வதிகாரம் வல்லரசுகளால் குறிப்பாக அமெரிக்காவாலும் ரஷ்யாவாலும் முக்கிய முடிவுகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மிக முக்கியமான அம்சங்களும் முரண்பாடுகளும் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுகின்றன.

நிர்வாக அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும். இதன் பொதுச் செயலாளர் பொதுச்சபையில், பாதுகாப்புச்சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐக்கிய நாடுகள் சபையை நடத்துகிறார். பன்னாட்டு நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக மன்றம் (Economic and Social Council-ECOSOC) ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும். ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வட்டாரங்களின் வளர்ச்சிக்காக (ஆசியா பசிபிக், மேற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா) பல வட்டார பொருளாதார ஆணையங்கள் செயல்படுகின்றன. அவைப் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் (ECOSOC) துணையமைப்புகளாகும். மிக வெற்றிகரமாகச் செயல்படும் இவற்றுக்கு பொருளாதார வல்லுநரான குன்னார் மிர்தால் போன்றோர் தலைமை ஏற்றிருக்கின்றனர்.

ஐ.நாவின் இதர முக்கியத் துணைஅமைப்புகள்

ஐ.நாவின் துணை அமைப்புகள் உலகில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய துறைகளான உணவு, சுகாதாரம், கல்வி, பண்பாடு ஆகியக் களங்களில் செயல்படுகின்றன. அவை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organisation - FAO), உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation -WHO), ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UN Educational Scientific and Cultural Organisation - UNESCO) என்பனவாகும். இவை தவிர்த்து வேறுசில சிறப்பு நிறுவனங்கள் உறுப்பு நாடுகளின் நிதி உதவியுடன் செயல்படுகின்றன. அவற்றில் நன்கு அறியப்பட்ட இரண்டு அமைப்புகளில் முதலாவது ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் (United Nations Children's Fund-UNICEF). இது உலகம் முழுவதிலும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் ஏனைய நலன்களையும் முன்னெடுக்கப் பணிசெய்கிறது. மற்றொன்று ஐ.நா.வளர்ச்சி திட்டம் (United Nations Development Plan - UNDP). இது வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

ஐ.நா.வின் செயல்பாடுகள்

கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐக்கிய நாடுகள் சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது. 1960களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும். மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன. மிகச்சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நாவின் அமைதிப்படை. உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய இராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.

உலக வங்கி

“பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்” எனக் குறிக்கப்படும் உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு ஆகிய இரண்டும் 1944இல் நடைபெற்ற பிரெட்டன் உட்ஸ் மாநாட்டிற்குப் பின் 1945இல் நிறுவப்பட்டன. இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளன. இரண்டுமே சம எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. ஏனெனில் ஒரு நாடு பன்னாட்டு நிதி அமைப்பில் உறுப்பினர் ஆகாமல் உலகவங்கியில் உறுப்பினராக முடியாது.


உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி (International Bank for Reconstruction and Development - IBRD), மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை (International Development Agency - IDA) ஆகும். இவையிரண்டுமே உலகவங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. தொடக்க ஆண்டுகளில் IBRDயின் பணியானது போரினால் சீர்குலைந்துபோன ஐரோப்பிய நாடுகளில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மார்ஷல் திட்டத்திற்கு நிதி வழங்குவதாய் அமைந்தது. பின்னர் இதன் செயல்பாடுகள் ஏழை நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, பல்வேறு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்குவது என விரிவடைந்தது. மேலும் பன்னாட்டு வளர்ச்சி முகமை வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியை அரசுகளுக்குக் கடனாக வழங்கியது. மிகக் குறைந்த வட்டிக்கு 50 ஆண்டு கால அளவிற்கு வழங்கப்பட்ட இக்கடன்கள் "மென் கடன்கள்" (Soft Loans) என்றழைக்கப்பட்டன. பன்னாட்டு நிதி வாரியம் (International Finance Corporation-IFC) எனும் மற்றொரு அமைப்பு வளரும் நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்களுடன் செயல்படுகிறது.

அண்மைக்காலங்களில் இவ்வங்கி ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளை அடையும் சாதனைக்கான ஊக்குவிப்பை வழங்கிவருகிறது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், கல்லாமையை இல்லாமலாக்குவது, பெண்களை வலிமையுள்ளவர்களாக ஆக்குதல், தாய் சேய் நல மேம்பாடு, சூழலியல் மேம்பாடு, எய்ட்ஸ் ஒழிப்பு ஆகியவையே இதன் வளர்ச்சி இலக்குகளாகும்.

பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund – IMF)

பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட், ஜான் மேனார்டு கெய்ன்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும். இவ்வமைப்பு 1945இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பெற்றது. தற்போது 189 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாகும். இதனுடைய முக்கிய நிகழ்ச்சிநிரல் பன்னாட்டளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலாவணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவையாகும். இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனெனில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடிவதில்லை ) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும். ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல், செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளைச் சுமத்துகிறது. இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.

பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள்: உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல், பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, வேலை வாய்ப்பினைப் பெருக்குவது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.


Tags : World War II இரண்டாம் உலகப்போர்.
10th Social Science : History : Chapter 3 : World War II : New International Order World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர் : புதிய பன்னாட்டு ஒழுங்கமைவு - இரண்டாம் உலகப்போர் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்