உலோகவியல் | வேதியியல் - உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் | 12th Chemistry : UNIT 1 : Metallurgy
உலோகங்கள் கிடைக்கப் பெறுதல்
பொதுவாக, தூய உலோகங்கள் பளபளப்புத் தன்மை, எளிதில் தகடாக மாற்ற இயலும் தன்மை போன்ற பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், இயற்கையில் காணப்படும் பெரும்பாலான தனிமங்கள் மாறுபட்ட பண்புகளுடன் சேர்மங்களாகக் கிடைக்கின்றன. தாமிரம், சில்வர், தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற மிகக் குறைவான வேதி வினைத்திறனுடைய உலோகங்கள் குறிப்பிடத் தக்க அளவில் அவைகளின் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன. கார உலோகங்களைப் போன்ற வினைத்திறன் அதிகம் உள்ள உலோகங்கள் பிணைந்த நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன. இவைகள் தகுந்த உலோகவியல் செயல்முறைகளைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இயற்கையில் காணப்படும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளானது ஒரு உலோகத்தை அதன் தனித்த நிலையிலேயோ அல்லது அதன் ஆக்சைடு, சல்பைடு போன்ற சேர்ம நிலைகளிலோ கொண்டிருப்பின் அந்தப் பொருள் கனிமம் எனப்படும். பெரும்பாலான கனிமங்களில் தேவைப்படும் உலோகம் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. ஆனால், சில கனிமங்களில் குறிப்பிடத் தகுந்த சதவீதத்தில் உலோகங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக இரும்பானது 800 க்கும் மேற்பட்ட கனிமங்களில் காணப்படுகிறது. எனினும் இரும்பு பிரித்தெடுத்தலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஹேமடைட், மேக்னடைட் போன்றவை அதிகச் சதவீதத்தில் இரும்பினைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதிக சதவீதத்தில் உலோகத்தினைப் பெற்றுள்ள கனிமங்களிலிருந்து எளிதாகவும்,
பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும், உலோகங்களைப் பிரித்தெடுக்க இயலுமாயின் அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அனைத்துத்தாதுக்களும் கனிமங்களாகும். ஆனால் அனைத்துக் கனிமங்களும் தாதுக்கள் அல்ல. மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, பாக்சைட் மற்றும் சைனாக்களி (A12 O3. 2SiO2. 2H2O) ஆகியனவற்றைக் கருதுவோம். இவை இரண்டுமே அலுமினியத்தைக் கொண்டுள்ள கனிமங்களாகும். எனினும், வணிக ரீதியாக அலுமினியத்தை பாக்சைட்டிலிருந்து பிரித்தெடுக்க இயலும். ஆனால் சைனாக்களியிலிருந்து இலாபகரமாகப் பிரித்தெடுக்க இயலாது. எனவே பாக்சைடுக் கனிமமானது அலுமினியத்தின் ஒரு முக்கியத்தாதுவாகும். ஆனால் சைனாக்களி ஒரு தாது அல்ல.
ஒரு தேவைப்படும் உலோகத்தினை அதன் தாதுவிலிருந்துப் பிரித்தெடுத்தலானது பின்வரும் உலோகவியல் செயல்முறைகளை உள்ளடக்கியது.
(i) தாதுக்களை அடர்பித்தல்
(ii) பண்படா உலோகத்தைப் பிரித்தெடுத்தல்
(iii) பண்படா உலோகத்தைத் தூய்மையாக்கல்
அட்டவணை 1.1 சில உலோகங்கள் மற்றும் அவைகளின் பொதுவான தாதுக்கள்