அறிமுகம் | வேதியியல் - உலோகவியல் | 12th Chemistry : UNIT 1 : Metallurgy
அலகு 1
உலோகவியல்
ஹெரால்ட் ஜானன் தாமஸ் எலிங்கம் (1897-1975)
இவர் எலிங்கம் வரைபடத்திற்காக அறியப்படும் ஒரு ஆங்கிலேய இயற் வேதியியல் அறிஞர். எலிங்கம் வரைபடமானது உலோக பிரித்தெடுத்தலோடுத் தொடர்புடைய பல்வேறு விவரங்களை தொகுத்துத் தருகிறது. மேலும், ஒரு தாதுவானது உலோகமாக ஒடுக்கப்படுவதற்கு சாதகமான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகிறது. இவர் பல்வேறு உலோக ஆக்சைடுகளின் வெப்ப நிலைப்புத் தன்மையை ஆய்வு செய்து இவ்வரைபடத்தை உருவாக்கினார். கார்பன் மற்றும் கார்பன் மோனாக்சைடுகளைக் கொண்டு உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்கும் செயல்முறையானது எலிங்கம் காலத்திற்கு முன்னரே நடைமுறையில் இருந்தது. எனினும் இவரது ஆய்வுகள் அதனை அறிவியல் பூர்வமாக விளக்கின.
கற்றல் நோக்கங்கள்
இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர்,
* தாதுக்களை அடர்பிக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை விவரித்தல்.
* பண்படா உலோகத்தைப் பிரித்தெடுப்பதில் உள்ள பல்வேறு முறைகளை விளக்குதல்.
* உலோகவியல் செயல்முறைகளுக்கு வெப்ப இயக்கவியல் கொள்கைகளைப் பயன்படுத்துதல்.
* எலிங்கம் வரைபடத்தைப் பயன்படுத்தி ஒடுக்கச் செயல்முறைகளுக்கு சாதகமான நிபந்தனைகளைத் தீர்மானித்தல்.
* உலோகவியலின் மின்வேதித் தத்துவங்களை விவரித்தல்.
* மின்வேதித் தத்துவங்களை உலோகப் பிரித்தெடுத்தலுக்குப் பயன்படுத்துதல்.
* மின்னாற் தூய்மையாக்கும் செயல்முறைகளில், மின்முனைகளில் நிகழும் வினைகளை விளக்குதல். Al,Zn,Fe,Cu மற்றும் AUஆகியனவற்றின் பயன்களைப் பட்டியலிடுதல்.
அறிமுகம்
உலோகங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடுத் தொடர்புடையது உலோகவியல் ஆகும். இயற்கையில், வெகு சில உலோகங்களே அவைகளின் தனிம நிலையில் கிடைக்கின்றன. பிற அனைத்து உலோகங்களும் பிணைந்த நிலையில் அவைகளின் ஆக்சைடுகள், சல்பைடுகள், சிலிகேட்கள் போன்றவைகளாகக் காணப்படுகின்றன. இயற்கை வளங்களிலிருந்து தூய்மையான உலோகங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறையானது மனித நாகரிக வளர்ச்சியின் வரலாற்றோடுத் தொடர்புடையது. பழங்கால மக்கள் தங்கள் சுற்றுச்சூழலில் கிடைத்த உலோகங்கள், நெருப்பு முதலியவற்றைப் பயன்படுத்தி வந்தனர். புவியின் மேற்பரப்பில் காணப்பட்ட உலோகங்களை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட உலோகவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இன்றைய நவீன உலகில் நாம் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி வருகிறோம். மேலும் சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக நமக்கு தேவைப்படும் பொருட்களை உருவாக்க முனைந்ததன் காரணமாக பல உலோக கலவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில், வீணாகும் மாசுக்க ஆற்றல் திறன் மிக்க சுற்றுசூழலுக்கு ஏற்ற நவீன உலோகவியல் செயல்முறைகளை வடிவமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். உலோகவியலில் ஏற்படும் இத்தகைய முன்னேற்றங்கள் நவீன உலகில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. இப்பாடப்பகுதியில் உலோகங்களை பிரித்தெடுத்தலில் உள்ள பல்வேறு படிநிலைகள் மற்றும் அச்செயல்முறைகளின் வேதித் தத்துவங்களைக் கற்றறிய உள்ளோம்.