மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாளையங்களின் தோற்றம் | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt
பாளையங்களின் தோற்றம்
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர். இதையொட்டி மதுரை நாயக்கர் பாளையக்காரரை நியமித்தார். 1529இல் விஸ்வநாதர் மதுரை நாயக்கரானார். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை . அதனால் அவரது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529இல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார். அதன்மூலம் நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார். இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது இராணுவம் மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர். பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த செலவிற்கு வைத்துக்கொண்டனர்.