மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வேலூர் கலகம் (1806) | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt

   Posted On :  08.06.2023 08:42 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி

வேலூர் கலகம் (1806)

நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர். இதனால் அனைவரும் துயரமடைந்து ஆங்கிலேயரை வெறுக்கவும் செய்தனர்.

வேலூர் கலகம் (1806)

நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர். இதனால் அனைவரும் துயரமடைந்து ஆங்கிலேயரை வெறுக்கவும் செய்தனர்.


வேலூர் கோட்டையானது பெரும்பாலான இந்திய வீரர்களைக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியினர் அப்பொழுதுதான் 1800இல் நடைபெற்ற திருநெல்வேலி பாளையக்காரர் கிளர்ச்சியில் பங்கு பெற்றவர்களாகவும் இருந்தனர். மேலும் பல்வேறு பாளையங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற வீரர்கள் ஆங்கிலப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எனவே வேலூர் கோட்டை தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது.

1803இல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார். அவரது காலத்தில் (1805-1806) சில கட்டுப்பாடுகள் இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிப்பாய்கள் அதனை தங்களை அவமானப்படுத்த ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனக்கருதினர்.

கலகத்திற்கான காரணங்கள்

•கடுமையானகட்டுப்பாடுகள், புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் என அனைத்தும் சிப்பாய்களுக்கு புதிதாக இருந்தன.

•தாடி, மற்றும் மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

•சமய அடையாளத்தை நெற்றியில் அணிதல், காதுகளில் வளையம் (கடுக்கன்) அணிதல் ஆகியன தடைசெய்யப்பட்டன.

•ஆங்கிலேயர்கள், இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் சிப்பாய்களிடையே இன பாரபட்சமும் காட்டினர்.

உடனடிக் காரணம்

ஜூன் 1806இல் இராணுவத் தளபதி அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது பிரபலமாக அக்னியூ தலைப்பாகை' என அழைக்கப்பட்டது. இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் ஒன்றாக இதனை எதிர்த்தனர். இதனால் வீரர்கள் ஆங்கிலேயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

கலகத்தின் போக்கு

இந்திய வீரர்கள் ஆங்கில அலுவலர்களைத் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்தனர். திப்பு குடும்பத்தினரும் இதில் பங்கெடுத்துக் கொண்டனர். திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்றார். இதற்கிடையில் ஜூலை 10ஆம் நாள் விடியற்காலை, முதலாவது மற்றும் 23 வது படைப்பிரிவுகளைச் சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர். படையை வழிநடத்திய கர்னல் பான் கோர்ட் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியானார். கோட்டையின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. அப்பொழுது கிளர்ச்சியாளர்கள் பதே ஹைதரை தங்களின் புதிய ஆட்சியாளராக அறிவித்தனர். வேலூர் கோட்டையில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி ஏற்றப்பட்டது.

கலகம் அடக்கப்படுதல்

கோட்டையின் வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் இராணிப்பேட்டைக்கு விரைந்து கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தார். கர்னல் கில்லெஸ்பி உடனடியாக வேலூர் கோட்டையை அடைந்தார். அவர் கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கினார். வேலூரில் அமைதி ஏற்படுத்தப்பட்டது. கலகத்தில் மொத்தம் 113 ஐரோப்பியர்கள் மற்றும் சுமார் 350 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். குறுகிய காலத்திற்குள் கலகம் அடக்கப்பட்டது. எனினும் தமிழக வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுள் இதுவும் ஒன்றாக திகழ்ந்தது.

வேலூர் கலகத்தின் விளைவுகள்

•புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

•முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.

•வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்

•இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.

•கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை.

•ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.

1806இல் நடந்த வேலூர் கலகத்தை , 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என V.D.சவார்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
Tags : People’s Revolt | Chapter 4 | History | 8th Social Science மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 4 : People’s Revolt : Vellore Revolt (1806) People’s Revolt | Chapter 4 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி : வேலூர் கலகம் (1806) - மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : மக்களின் புரட்சி