மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பெரும் புரட்சி (1857) | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt
பெரும் புரட்சி (1857)
இந்தியாவில்
ஆங்கிலேயர்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெற்ற ஆரம்பகால கலகங்கள் வெற்றி பெறவில்லை.
எனவே அது 1857ஆம் ஆண்டு புரட்சிக்கு வழிகோலியது. அதன்மூலம் கம்பெனி அதன் நாட்டிற்கு
திரும்பிச் செல்லவும், ஆங்கிலேயர்களின் ஆட்சியை மக்களில் பெரும்பாலானோர் ஏற்கவில்லை
என ஆங்கிலேயர்களை எண்ணவும் செய்தது. 1857ஆம் ஆண்டு புரட்சியானது காலனி ஆட்சியினுடைய
பண்பு மற்றும் கொள்கையின் விளைவாக உருவானதாகும். ஆங்கிலேயரின் விரிவுபடுத்தப்பட்ட கொள்கைகள்,
பொருளாதார சுரண்டல், மற்றும் நிர்வாக ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவே இந்தியாவின் அனைத்து
அரசர்களின் நிலைமையிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
புரட்சிக்கான காரணங்கள்
•ஆங்கிலேயரின்
பொருளாதார ரீதியான சுரண்டல் கொள்கையே, 1857ஆம் ஆண்டு புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் காயப்படுத்தியது. அதிகப்படியான வரிவிதிப்பு
மற்றும் கடுமையான வரிவசூல் முறைகளால் விவசாயிகள் துன்புற்றனர்.
•வாரிசு
இழப்புக் கொள்கை, துணைப்படைத் திட்டம் மற்றும் பல கட்டுப்பாடுகள் ஆகியன மக்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்தும் கூட ஆங்கிலேயரின்
பிரதேச விரிவாக்கக் கொள்கை திருப்தி அடையவில்லை
•கிறித்துவசமய
பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள் மக்களால் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்பட்டது.
மேலும் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்கள் (Maulavis) ஆங்கில ஆட்சிக்கெதிராக
அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
•சதி
ஒழிப்பு பெண்சிசுக்கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்விக்கான ஆதரவு போன்ற
ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் இந்தியர்களின் கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக
கருதப்பட்டது.
•இந்திய
சிப்பாய்கள், ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டனர். ஆங்கில
வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்கள் குறைவான ஊதியம் பெற்றனர். மேலும் இராணுவ பதவி
உயர்வுகள் அனைத்தும் இந்திய வீரர்களுக்கு மறுக்கப்பட்டு ஆங்கில வீரர்களுக்கு மட்டுமே
வழங்கப்பட்டன.
உடனடிக் காரணம்
இராணுவத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரகதுப்பாக்கியே உடனடிக்காரணமாக இருந்தது. இந்த வகைத்
துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையை பற்களால் கடித்து நீக்க
வேண்டும். அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
எனவே இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம் ) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக
கருதினர். ஏனெனில் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும். முஸ்லீம்கள் பன்றியை
வெறுப்பவர்களாகவும் இருந்தனர். ஆகையால் இந்து முஸ்லீம் வீரர்கள் என்பீல்டு துப்பாக்கியைப்
பயன்படுத்த மறுத்து புரட்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
புரட்சிக்கு அடிப்படை மற்றும் உடனடிக் காரணமாயிற்று.
கலகத்தின் தோற்றம்
1857
மார்ச் 29ஆம் நாள் பாரக்பூரில் (கொல்கத்தா அருகில்) உள்ள வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த
மங்கள் பாண்டே என்ற இளம் சிப்பாய் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து
தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்றார். அதனால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்
பின் தூக்கிலிடப்பட்டார். இச்செய்தி பரவியதால், பல சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
புரட்சியின் போக்கு
1857
மே 10ஆம் நாள் மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சிறைச்சாலையை
உடைத்து, தங்களது சக படைவீரர்களை விடுவித்ததன் மூலம் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் உடனே 11 ஆவது மற்றும் 20 ஆவது உள்ளூர் காலாட்படையினருடன் இணைந்தனர், மேலும்,
சிலர் ஆங்கில அலுவலர்களைக் கொலை செய்ததுடன், டெல்லிக்கும் விரைந்தனர். டெல்லிக்கு வந்த
மீரட் சிப்பாய்கள் மே 11ஆம் நாள் இரண்டாம் பகதூர்ஷாவை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர்.
அதன் மூலம் டெல்லி பெரும் புரட்சியின் மையமாகவும் பகதூர்ஷா அதன் அடையாளமாகவும் விளங்கினார்.
புரட்சி
மிக வேகமாக பரவியது. லக்னோ , கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத் மற்றும்
வடஇந்தியாவின் பல பகுதிகளில் கலகங்கள் ஏற்பட்டன. புரட்சியாளர்களுள் பலர், நிழக்கிழார்களிடம்
தாங்கள் கொடுத்த பத்திரங்களை எரிக்க,
மத்திய இந்தியாவில் புரட்சி ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் அவர்களால் வழிநடத்தப்பட்டது. இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் அவரும் ஒருவர். சர் ஹக்ரோஸ் ஜான்சியை ஆக்கிரமித்தார். ஜான்சியிலிருந்து தப்பிய இராணி லட்சுமிபாய், குவாலியரில் படையை தலைமையேற்று வழிநடத்திய தாந்தியா தோபேவுடன் இணைந்தார். ஆனால் ஆங்கிலப் படை ஜூன் 1858இல் குவாலியரை கைப்பற்றியது. போரில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டார். தப்பிய தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி 1857 புரட்சியில் கலந்து கொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் இராணி லட்சுமிபாய் ஆவார்.
இதனை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதினர். ஆங்கில அரசு பலருடைய பட்டங்கள், ஓய்வூதியங்களை நீக்கியதால்
ஆங்கில அரசை பழிவாங்குவதற்காக புரட்சியில் பலர் கலந்துகொண்டனர்.
கலகம் அடக்கப்படுதல்
கவர்னர்
ஜெனரல் கானிங் பிரபு புரட்சியை அடக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அவர் சென்னை ,
பம்பாய், இலங்கை மற்றும் பர்மாவிலிருந்து படைகளை வரவழைத்தார். மேலும் அவரது சொந்த முயற்சியால்
சீனாவிலிருந்த ஆங்கிலப் படைகளை கல்கத்தாவிற்கு வரவழைத்தார். விசுவாசமான சீக்கிய படைகளை
உடனடியாக டெல்லிக்கு விரைந்து செல்லுமாறு ஆணையிட்டார். இதன்மூலம் ஆங்கிலேயர் தாங்கள்
இழந்த பகுதிகளை உடனே மீட்டனர்.
1857
செப்டம்பர் 20இல் படைத்தளபதி நிக்கல்சனால் டெல்லி மீண்டும் கைப்பற்றப்பட்டது. எனவே,
இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் 1862இல் இறந்தார்.
கான்பூர்
மீட்பு இராணுவ நடவடிக்கைகள், லக்னோ மீட்பு நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தது.
சர் காலின் கேம்பெல் கான்பூரை கைப்பற்றினார். கான்பூரில் புரட்சியை வழிநடத்திச் சென்ற
நானா சாகிப் தோற்கடிக்கப்பட்டார். தோற்ற நானா சாகிப் நேபாளத்திற்கு தப்பியோடினார்.
அவரது நெருங்கிய நண்பர் தாந்தியா தோபே மத்திய இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். தப்பிய
அவர் தூங்கும் பொழுது கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இராணி லட்சுமிபாய் போர்களத்தில்
கொல்லப்பட்டார். கன்வர்சிங், மற்றும் கான் பகதூர் கான் ஆகிய இருவரும் போரில் இறந்தனர்.
அயோத்தியின் பேகம் ஹஸ்ரத் மகால் நேபாளத்தில் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இவ்வாறாக புரட்சி முழுவதும் அடக்கப்பட்டது. 1859ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் அதிகாரம்
மீண்டும் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டது.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்
கலகத்தின்
தோல்விக்கு பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன.
•சரியான
ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை,
நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
•கலகத்தில்
ஈடுபட்டவர்கள், ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. மேலும் இராணி லட்சுமிபாய்,
நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோர் தைரியமானவர்கள், ஆனால் சிறந்த தளபதிகளாக
இல்லை.
•வங்காளம்,
பம்பாய், சென்னை மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து
கொள்ளவில்லை.
•நவீனக்
கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டுமே இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்த
முடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
•சீக்கியர்கள்,
ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர்
பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.
•ஆங்கிலேயர்கள்
சிறந்த ஆயுதங்கள், சிறந்த தளபதிகள் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருந்தனர்.
கலகத்தின் விளைவுகள்
•1857ஆம்
ஆண்டு கலகம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அது நிர்வாக முறை
மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வழிகோலியது.
•1858ஆம்
ஆண்டு வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் மூலம் இந்தியாவின் நிர்வாகம்
கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கில (பாராளுமன்றத்திற்கு) அரசுக்கு மாற்றப்பட்டது.
•கவர்னர்
- ஜெனரல், அதன் பிறகு வைசிராய் என அழைக்கப்பட்டார்.
•இயக்குநர்
குழு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட
செயலரின் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபை (கவுன்சில்) ஏற்படுத்தப்பட்டது.
•இந்திய
இராணுவம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதிகப்படியான ஆங்கிலேயர்கள், இராணுவத்தில்
பணியமர்த்தப்பட்டனர்.
•’பிரித்தல்
மற்றும் எதிர் தாக்குதல்’ என்ற கொள்கை ஆங்கில இராணுவக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தியது.