Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | இயற்பியல் இயக்க விதிகள் : பாடச்சுருக்கம்
   Posted On :  14.11.2022 12:48 am

11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்

இயற்பியல் இயக்க விதிகள் : பாடச்சுருக்கம்

இயற்பியல் : இயக்க விதிகள்

பாடச்சுருக்கம்

·  இயக்கம் பற்றிய அரிஸ்டாட்டிலின் கூற்று: பொருள் தொடர்ந்து இயங்க ஒரு விசை தேவைப்படுகிறது. 

·  இயக்கம் பற்றிய கலிலியோவின் கூற்று : பொருள் தொடர்ந்து இயங்கவிசை தேவையில்லை 

·  நிறை என்பது ஒரு பொருளின் நிலைமத்தின் அளவாகும். 

·  நியூட்டனின் முதல் விதிப்படி, புறவிசை ஒன்று பொருளின் மீது செயல்படாதவரை அப்பொருள் தன் நிலையிலேயேத் தொடர்ந்து இருக்கும். 

·  நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, பொருளின் உந்தத்தினை மாற்ற, அப்பொருளின் மீது ஒரு புறவிசை ஒன்று செயல்படவேண்டும்.

· கணிதவியல் படி என இதனை வரையறுக்கலாம். 

· நியூட்டனின் முதல் விதி மற்றும் இரண்டாம் விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு மட்டுமே பொருந்தும் 

· நிலைமக் குறிப்பாயத்தில் இயங்கும் பொருளின்மீது புறவிசை ஒன்று செயல்படாதவரை, அப்பொருள் மாறாத் திசைவேகத்தில் இயங்கும். 

· நியூட்டனின் மூன்றாம் விதியின்படி, ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான, எதிர்த்திசையில் செயல்படும் ஒரு எதிர் விசை உண்டு. இந்த இணைவிசைகளுக்கு செயல் மற்றும் எதிர்ச் செயல் இணை (action and reaction pair) என்றுபெயர். 

· தனித்த பொருளின் விசைப்படம் வரையும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

விசைப்படம் வரைய வேண்டிய பொருளை மற்ற பொருட்களிலிருந்து தனிமைப் படுத்த வேண்டும். மேலும் அப்பொருளின் மீது செயல்படும் விசைகளைக் கண்டறிய வேண்டும். 

அந்தப்பொருள், மற்ற பொருட்களின் மீது செலுத்தும் விசையை எடுத்துக் கொள்ளக்கூடாது. 

ஒவ்வொரு விசையின் திசையையும் தொடர்புடைய எண்மதிப்புடன் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். 

• ஒவ்வொரு திசையிலும் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த வேண்டும். 

· அமைப்பின் மீது எவ்வித புறவிசையும் செயல்படவில்லை எனில், அமைப்பின் மொத்த உந்தம் ஒரு மாறா வெக்டராகும். 

· அமைப்பில் செயல்படும் அக விசைகள், அமைப்பின் மொத்த உந்தத்தை மாற்றாது. 

· லாமி தேற்றத்தின்படி ஒரு தள விசைகள் பொருளின் மீது செயல்பட்டு, அப்பொருளை சமநிலையில் வைக்கும்போது, ஒவ்வொரு விசை மற்றும் தொடர்புடைய எதிர் கோணத்தின் சைன் மதிப்பு இவற்றின் தகவு ஒன்றுக் கொன்று சமமாகும். 

· பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசை அப்பொருளின் உந்தமாற்றத்திற்கு சமமாகும். மிகக் குறைந்த நேரத்தில் பொருளின்மீது செயல்படும் விசையைக் கணக்கிட இயலாது. ஆனால் கணத்தாக்கு விசையைக் கணக்கிடலாம். 

· ஓய்வுநிலை உராய்வு என்பது ஓய்வுநிலையிலிருந்து பொருள் நகர்வதை எப்பொழுதும் எதிர்க்கும். இதன் மதிப்பு சுழியிலிருந்து µsN வரை உள்ள எந்த மதிப்பையும் பெறலாம். µsN ஐ விட அதிக வெளிப்புற விசை பொருளின் மீது செயல்பட்டால், பொருள் நகரத் தொடங்கும். 

· பொருள் நகரத் தொடங்கிய உடன் பொருளின் மீது இயக்க உராய்வு செயல்படத் தொடங்கும். அப்பொருள் மாறாத் திசைவேகத்தில் இயங்க வேண்டுமானால், பொருளின் மீது வெளிப்புற விசை செயல்பட்டு இயக்க உராய்வினை சமன் செய்ய வேண்டும். இயக்க உராய்வு µkN ஆகும்.

· ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வை விட உருளுதலின் உராய்வின் மதிப்பு குறைவு. இதன் காரணமாகத்தான் கனமான பொருட்களை நகர்த்துவதற்கு அதன் அடியில் உருளும் கட்டைகளைப் பொருத்துகிறார்கள். உதாரணம் உருளும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பயணப்பெட்டி (Rolling suitcase) 

· ஒன்றை ஒன்று தொடும் பரப்பில் உள்ள, அணுக்களின் மின்காந்த விசையே (Electro magnetic interaction) உராய்விற்கு அடிப்படையாக அமைகிறது. 

· வளைவுப்பாதை இயக்கத்தில் வளைவுப் பாதையின் மையத்தை நோக்கி மையநோக்கு விசை செயல்படுகிறது. சீரான வட்ட இயக்கத்தில், வட்டத்தின் மையத்தை நோக்கி மையநோக்கு விசை செயல்படுகிறது. 

· மையநோக்கு விசையானது ஒரு தனித்த இயற்கை விசையல்ல. எந்த ஒரு இயற்கை விசையும் மையநோக்கு விசையாகச் செயல்படலாம். 

· கோள்களின் இயக்கத்தில், சூரியனின் ஈர்ப்புவிசை மையநோக்கு விசையாகச் செயல்படுகிறது. மெல்லிய கயிற்றில் கட்டப்பட்டு சுழல் இயக்கத்தை மேற்கொள்ளும் கல்லின் இயக்கத்தில், கயிற்றின் இழுவிசை மையநோக்கு விசையாகச் செயல்படுகிறது. புவியினைச் சுற்றிவரும் நிலவின் இயக்கத்தில் நிலவின் மீது செயல்படும் புவியின் ஈர்ப்பு விசை மையநோக்கு விசையாகச் செயல்படும். 

· பொருளின் இயக்கத்தினைச் சுழலும் குறிப்பாயத்தில் பகுப்பாய்வு செய்யும்போது மையவிலக்கு விசை தோன்றுகிறது. இது ஒரு போலி விசையாகும். சுழலும் குறிப்பாயத்தில் பொருளின் நிலைம இயக்கம் மையவிலக்கு விசையாகத் தோன்றும். 

· மையநோக்கு விசை மற்றும் மையவிலக்கு விசை இவ்விரண்டின் எண்மதிப்பும் 2r ஆகும். ஆனால் வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை வட்டமையத்தை நோக்கிச் செயல்படும். மேலும் சுழற்சிக் குறிப்பாயத்தைப் பொறுத்து மையவிலக்கு விசை மையநோக்கு விசையின் திசைக்கு எதிர்த் திசையில் செயல்படும்.

11th Physics : UNIT 3 : Laws of Motion : Physics Laws of Motion: Summary in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள் : இயற்பியல் இயக்க விதிகள் : பாடச்சுருக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்