Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: இளந்தமிழே

சிற்பி பாலசுப்பிரமணியம் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: இளந்தமிழே | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  31.07.2022 09:36 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

செய்யுள்: இளந்தமிழே

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : செய்யுள்: இளந்தமிழே - சிற்பி பாலசுப்பிரமணியம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

மொழி - க 

இளந்தமிழே!

- சிற்பி பாலசுப்பிரமணியம்



நுழையும்முன்

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம். தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்களின் அவா.



செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!

தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்

தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்

விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்

வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்

ஏற்றதுணை வேறுண்டோ ? இயம்பி டாயே!


மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்

முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்

பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!

பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்

குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!


இலக்கணக் குறிப்பு

செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி - பண்புத்தொகைகள்

சிவந்து - வினையெச்சம் 

வியர்வைவெள்ளம் - உருவகம் 

முத்துமுத்தாய் - அடுக்குத்தொடர் 


உறுப்பிலக்கணம்

(I) சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்

சாய் – பகுதி

ப் – சந்தி

ப் - எதிர்கால இடைநிலை

ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

(II) விம்முகின்ற = விம்மு + கின்று + அ 

விம்மு - பகுதி 

கின்று - நிகழ்கால இடைநிலை 

அ - பெயரெச்ச விகுதி 

(III) வியந்து = விய + த் (ந்) + த் + உ

விய - பகுதி 

த் - சந்தி, (ந் ஆனது விகாரம்),

த் - இறந்தகால இடைநிலை 

உ - வினையெச்ச விகுதி

(IV) இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய் 

இரு - பகுதி 

த் – சந்தி (ந் ஆனது விகாரம்),

த் - இறந்தகால இடைநிலை 

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


புணர்ச்சி விதி

செம்பரிதி = செம்மை + பரிதி 

விதி : ஈறு போதல் - செம் + பரிதி – செம்பரிதி.

வானமெல்லாம் = வானம் + எல்லாம் 

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வானமெல்லாம்.

உன்னையல்லால் = உன்னை + அல்லால் 

விதி : இஈஐ வழி யவ்வும் - உன்னை + ய் + அல்லால் 

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்.

செந்தமிழே = செம்மை + தமிழே 

விதி : ஈறு போதல் - செம் + தமிழே 

விதி : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே.


நூல்வெளி

இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்; மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்; மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.



Tags : by Shirpi Balasubrahmanyam | Chapter 1 | 12th Tamil சிற்பி பாலசுப்பிரமணியம் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Poem: Elanthamile by Shirpi Balasubrahmanyam | Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : செய்யுள்: இளந்தமிழே - சிற்பி பாலசுப்பிரமணியம் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்