இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum
இயல் 1
உயிரினும் ஓம்பப் படும்
• செய்யுள் - இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம்
• உரைநடை - தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு. நடராசன்
• செய்யுள் - தன்னேர் இலாத தமிழ் (தண்டியலங்காரம்) - தண்டி
• துணைப்பாடம் - தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார்
• இலக்கணம் - தமிழாய் எழுதுவோம்
இயல் 1
செய்யுள்
இளந்தமிழே!
-சிற்பி பாலசுப்பிரமணியம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது
அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி
இ) ங மட்டும் சரி
ஈ) க, ங. இரண்டும் சரி
[விடை : ஈ) க, ங. இரண்டும் சரி]
குறுவினா
1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
சிறுவினா
1. ‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்' தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
• கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
• ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
• கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.
2. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
- நன்னூல்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
- சிற்பி பாலசுப்பிரமணியம்
நன்னூல்
• பழையவற்றை ஒதுக்கி புதியவற்றைப் புகுத்த வேண்டும்.
• தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் காலமாறுதலுக்கு ஏற்ப புதிய சொல், பொருள், வழக்கம் தேவை.
சிற்பி பாலசுப்பிரமணியம்
• பழமை செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும்.
• தமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா.
நெடுவினா
1. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.
• செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
• உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய்க் காணப்படுகிறது.
• இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
• பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
• தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
• பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
• உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
• கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
• குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.
கற்பவை கற்றபின்
தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
வேதன் : எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை.
மதன் : சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும்?
வேதன் : இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.
மதன் : அது இடமாற்றம் இல்லை. ஒதுக்கப்படுவதும் இல்லை.
வேதன் : நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா?
மதன் : அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்ப தெய்வங்களை வணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம்.
வேதன் : தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.
மதன் : வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
வேதன் : மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம்?
மதன் : மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் - என்பார்.
வேதன் : அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா?
மதன் : நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது.
வேதன் : நன்றி மதன்.
மதன் : நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம்.
இயல் 1
உரைநடை உலகம்
தமிழ்மொழியின் நடை அழகியல்
- தி. சு. நடராசன்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
[விடை : இ) தொல்காப்பியம்]
2. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
[விடை : இ) இரண்டு கருத்தும் சரி]
3. பொருத்துக.
அ) தமிழ் அழகியல் - 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - 2. தி. சு. நடராசன்
இ) கிடை - 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
[விடை: ஈ) 2, 3, 4, 1]
குறுவினா
1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
• நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
• கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
• மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.
2. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” - இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
ஓசை நயமிக்கச் சொற்கள்:
படாஅம் ஈத்த, கெடாஅ நல்லிசை, கடாஅயானை, நல்லிசை.
இலக்கணக் குறிப்புகள் :
படாஅம், கெடாஅ, கடாஅ - செய்யுளிசையளபெடைகள்
ஈத்த - பெயரெச்சம்
நல்லிசை - பண்புத்தொகை
3. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.
சிறுவினா
1. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.
• எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
• சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
• இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.
கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
• உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.
சான்று :
'படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்' - இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.
நெடுவினா
1. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
கவிதையின் நடையைக் கட்டமைப்பன:
பாட்டு அல்லது நடைஅழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.
கவிதை - நடையியல்:
மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் - 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.
ஒலிக்கோலங்கள்:
தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் - பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.
சான்று: "கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”
இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை
கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் - 145)
இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.
சொற்புலம் :
சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.
தொகைநிலை :
சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு.
அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.
சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.
தொடரியல் போக்குகள் :
ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.
கவிதை மறுதலைத்தொடர் :
தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்:
"இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் - 239)
இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ - புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.
இறுதியாக :
நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக - பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.
கற்பவை கற்றபின்
1. கவிஞர் பாரதிதாசனின் அழகின்சிரிப்பு - குன்றம் - ஒளியும் குன்றும் பாடலில் இடம்பெற்றுள்ள நடைச்சிறப்பினைத் தொகுத்து உரையாக வழங்குக.
ஒளியும் குன்றும்
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடிப் பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
எருதின்மேல் பாயும் வேங்கை
நிலவுமேல் எழுந்த மின்னல்
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பாரடா நீ
- பாரதிதாசன்
இயற்கை வருணனையைப் பாரதிதாசன் செம்மைப் படுத்துவதில் வல்லவர்.
இப்பாடலில், வானுயிர்ந்த மலையின் அழகை தனக்கே உரித்தான நடையில் உருவகப்படுத்துகிறார்.
• மலையினின்று விழும் வெண்மையான அருவிகள் மலையாகிய பெண்ணின் காதில் அணிந்திருக்கும் வைரத்தாலான தொங்கலாக உள்ளது.
• மலையில் அடர்த்தியாகப் படாந்திருக்கும் பசுமையான கொடிகள் அப்பெண் உடுத்தியிருக்கும் பச்சைப் பட்டாடையாகக் காணப்படுகிறது.
• மலையில் காணப்படும் குருவிகள் சூரிய ஒளியின் காரணமாகக் தங்கக் கட்டிகளாகக் காணப்படுன்றன.
• பூத்திருக்கும் பூக்கள் நவமணிகள் ஆகக் காட்சியளிக்கின்றன.
• எருதின் மேல் பாயும் வேங்கைக் காட்சிகள், முன்வைக்கப்படுகிறது.
• நிலவின்மேல் ஓடுகின்ற மின்னலின் வரிகள் விழுந்து கிடக்கும் சருகுகள் ஒளியின் பிரகாசத்தால் தங்கத்தகடுகளாகக் காட்சியளிக்கின்றன.
2. தமிழின் சொல்வளத்தை வெளிப்படுத்தும்படியாக யானை / மலர் குறித்த பல சொற்களை அகராதியில் கண்டு பட்டியலிடுக.
யானை
வேழம், களிறு, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், கரி, தும்பி, ஆனை, களபம், கயமுனி, கைம்மலை, குஞ்சரம், வல்விலங்கு, துங்கல், வாரணம், கடகம், துடியடி, கடகம்.
மலர்
அரும்பு, போது, நளை, முகிழ், புஷ்பம், நறுவி, மெகெகுள், செம்மலர், பொதும்பர், அலர், மகரந்தம், பொம்மல், வீதி.
இயல் 1
செய்யுள்
தன்னேர் இலா தமிழ்
(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ”மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடிமோனை
[விடை : இ) அடி எதுகை, சீர் மோனை]
சிறுவினா
1. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
பொருள் :
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.
கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அக இருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.
கற்பவை கற்றபின்
1. வேற்றுமை அணி பயின்று வரும் இரு பாடல்களை விளக்கத்துடன் எழுதி வருக.
பாடல் :1
அங்கண் விசும்பின் அகனிலாப் பாறிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமருத்து
தெய்வர் ஒரு மாசுறின்.
- நாலடியார்
இப்பாடலில், திங்களுக்கும் சான்றோருக்கும் முதலில் ஒப்புமைக்கூறி பின்னர் வேறுபடுத்தப்பட்டுள்ளது.
அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
விளக்கம்:
திங்கள் தேயும், சான்றோன் தேயார் (மனநிலை மாறார்) என்பதேயாகும்.
பாடல்: 2
அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று :
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு - குறட்பா
பொருத்தம்:
தீயினால் உண்டான புண் உள் ஆறிவிடும்.
நாவினால் உண்டான புண் உள்ளத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.
2. ‘தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை உருவாக்குக.
அனைவருக்கும் வணக்கம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பழமையும், பெருமையும் கொண்டது. இலக்கண, இலக்கியங்கள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம், தொகை, பாட்டு, ஆற்றுப்படை என எண்ணிலடங்கா நூல்கள் உருவாகி தமிழின் சிறப்பை உலகே தொழும் வகையில் அமைந்துள்ளது.
முதல் இடை கடைச்சங்கம் கொண்டது. தன்னிகரில்லா தன்மொழியாக விளங்கியது. தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது, பிறமொழி உதவி இல்லாமல், இடர்ப்பாடுகள் இல்லாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் கொண்ட என் தமிழின் உதவியில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இயங்க முடியாது. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத மொழியாய் விளங்குகிறது.
நன்றி! வணக்கம்!
இயல் 1
துணைப்பாடம்
தம்பி நெல்லையப்பருக்கு
- பாரதியார்
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
மொழிப்பற்று :
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று :
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். “ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
2. “சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.
சொல்லோவியங்கள்
கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம் : அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்.
நாள் : 19.06.2019, புதன்கிழமை.
நேரம் : பிற்பகல் 3 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து : மாணவர்கள்
வரவேற்புரை : திரு. ச. செந்தில்குமார்
(தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்)
நூல் அறிமுக உரை : தி.ப. பிறைசூடன் அவர்கள் (எழுத்தாளர்)
நூல் வெளியிட்டு வாழ்த்துரை : திருமிகு. வ. சரவணன் அவர்கள்,
(மாவட்டக் கல்வி அலுவலர், விழுப்புரம்)
முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவர் : திருமிகு. தா. அண்ணாமலை அவர்கள் (தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்)
ஏற்புரை : திரு. கவிஞர். த. தமிழரசன் அவர்கள்
(முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்.)
நன்றியுரை : திரு. இரா. கேசவன்
(உதவித் தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்)
தேசிய கீதம்
நன்றியுரை
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று”
என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.
எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.
இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி. எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி, இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி! வணக்கம்!
கற்பவை கற்றபின்
1. பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.
2. காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தகாரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.
உனது பொன் எழுத்துகளால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய்.
ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.
தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.
என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.
நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.
இப்படிக்கு,
பாரதிநேசன்.
இயல் 1
இலக்கணம்
தமிழாய் எழுதுவோம்
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
[விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது]
2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
[விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்]
3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
முடிந்தால் தரலாம் :
முடிந்தால் - கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.
முடித்தால் தரலாம் :
முடித்தால் - செயல் முடிந்த பின்
தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.
வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.
4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
• எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
• இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
• வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.
• கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. மயங்கொலி எழுத்துகள் (ண, ந, ன, ல, ழ, ள, ர, ற) அமைந்த சொற்களைத் திரட்டி, பொருள் வேறுபாடு அறிந்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
மாணவச் செல்வங்களே,
இன்று உங்களுக்கு மயங்கொலி எழுத்துகள் அமைந்த சொற்களையும், அதன் பொருள் வேறுபாட்டினையும் கற்பிக்கப் போகிறேன்.
ராமு : ணகர னகர வேறுபாடுகளை விளக்குங்கள் ஐயா.
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - உணவு / சோறு
ட - பக்கத்தில் வரும் ண - இதை டண்ணகரம் என்று அழைப்பதுண்டு.
அன்னத்தில், ற - பக்கத்தில் வரும் ன - இதை றன்னகரம் என்று அழைப்பதுண்டு.
சோமு : ஐயா இதன் பயன்பாடுகள் பற்றிக் கூறுங்கள் ஐயா.
இதன் பயன்பாடுகள் : ட – ண வும், ற - பக்கத்தில் ன வும் வரும் எனப்புரிந்தால் எழுத்துப்பிழைகள் மிகக் குறையும்.
மன்றம் - அவை
மண்டபம் - மக்கள் கூடுமிடம்
குன்று - சிறிய மலை
குண்டு - உருண்டை (வடிவம்)
இவை போன்று வேறுபாடு கண்டு பிழைகளைக் களையலாம்.
ராமு : இன்னுமொரு விளக்கம் தேவை. ல-ழ வேறுபாடுகள் பற்றியும் விளக்கம் தேவை ஐயா.
ல-ழ வேறுபாடு
கலை - நுட்பம் / அறிவு
கழை - மூங்கில்
மலை- குன்று
மழை - வான்மழை
தலை - உடல் உறுப்பு
தழை - வளர் / இலை
விலை - மதிப்பு
விழை - விருப்பம்
இவ்வாறான மயங்கொலிச் சொற்களை பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம்.
ராமு : மிக்க நன்றி ஐயா, தெளிவாகப் புரிந்து கொண்டேன் ஐயா.
ர-ள மயங்கொலிச் சொற்களுக்கு எ.கா. தாருங்கள் ஐயா.
ர - ற வேறுபாடு
மரம் - தாவரம்
மறம் - வீரம்
அரம் - கருவி
அறம் - தருமம்
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம்.
சோமு : ஐயா, கடைசியாக லகர னகர வேறுபாட்டையும் கூறுங்கள் ஐயா. ல ள வேறுபாடு
கலை – அறிவு / நுட்பம்
களை - பயிரின் நடுவே வளர்வது / ஆடை களைதல்
கோல் - குச்சி
கோள் - செவ்வாய் (கோள்)
வலம் - வலப்புறம்
வளம் - செழிப்பு
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம் மாணவர்களே.
மாணவர்களே மற்றொரு வகுப்பில் சந்திக்கலாம்.
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ந) வள்ளல்களைத் தந்தது
அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி
இ) ந மட்டும் சரி
ஈ) க, ந இரண்டும் சரி
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனை
ஈ) சீர்எதுகை, அடிமோனை
4. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
5. பொருத்துக.
அ) தமிழ் அழகியல் - 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - 2. தி. சு. நடராசன்
இ) கிடை - 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
குறுவினா
1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
2. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” - இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
4. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
சிறுவினா
1. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் –விளக்குக.
2. 'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்' தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
3. 'ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
4. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே. – நன்னூல்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! - சிற்பி பாலசுப்பிரமணியம்
நெடுவினா
1. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
4. 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர் உடனே 'அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி' என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். 'சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.
'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.
வினாக்கள்:
1. 'எல்லி' என்பதன் பொருள் என்ன?
2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்?
3. ஆழி, கால் பொருள் தருக.
4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை?
5. பெற்றவர் - இலக்கணக்குறிப்புத் தருக.
6. விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? “நாவலர்' என்ற பட்டத்தை யார் வழங்கினார்?
8. 'வந்திருந்தார்' இரு பொருள்படும்படி வாக்கியம் அமைக்க.
விடைகள்:
1. சூரியன்.
2. 24 நிமிடம்.
3. ஆழி - மோதிரம், கடல்.
கால் - உடல் உறுப்பு, காற்று.
4. 'வசனநடை கைவந்த வள்ளலார்' எனப் புகழப்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
5. பெற்றவர் - வினையாலணையும் பெயர்.
6. பெர்சிவல் பாதிரியார்.
7. இயற்பெயர் - ஆறுமுகம்.
நாவலர் பட்டம் - திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியதாகும்.
8. வந்திருந்தார் : உடல் நலம் சரியில்லாத என் தந்தையைக் காண என் மாமா நீண்ட நாள் கழித்து வந்தார்.
வந்து இருந்தார் : பொதுக்கூட்டம் காண பல மைல் தூரம் நடந்த குமரன் கால் வலியால் வந்து இருந்தார்.
இலக்கியம் நயம் பாரட்டுக
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
முன்னுரை :
இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
திரண்ட கருத்து :
தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புலவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!
தொடை நயம் :
மோனை :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.
சான்று:
முச்சங்கங் முதுபுலவர்
அச்சங்கத் அளப்பரிய
சொற்சங்க சுவைமிகுந்த
அற்புதங்க அமைத்த
எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.
சான்று:
முச்சங்க அச்சங்க
சொற்சங்க அற்புதங்க
இயைபு:
கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.
சான்று:
பெருமாட்டி
கவிகூட்டி
பொருள்கூட்டி
தமைக்கூட்டி
அணி நயம்:
அணியற்ற பாக்கள்
பிணியுள்ள வணிதை
தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.
சந்த நயம் :
சந்தம் தமிழுக்குச் சொந்தம்
ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.
சுவை நயம்:
நா உணரும் சுவை ஆறு
மனம் உணரும் சுவை எட்டு
என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.
முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
தமிழாக்கம் தருக
1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
2. A new language is a new life. (Persian Proverb).
புதிய மொழி புதிய வாழ்க்கை.
3. If you want people to understand you, speak their language. (African Proverb).
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.
4. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).
மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.
5. The limits of my language are the limits of my world. (Willgenstin).
என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.
- மொழி வரலாறு (மு.வரதராசனார்)
வினாக்கள் :
1. மக்கள் படைத்துக் காத்துவரும் அரிய கலை எது? அது ஆற்றும் செயல் யாது?
2. தாயின் முதல் விருப்பம் என்ன?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?
4. மொழியை வளர்ப்பவரும், மொழியால் வளர்பவரும் யார்?
5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல.
1. தாமரை இலை நீர் போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.
இவ்வுலக ஆசைகளின்மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.
2. கிணற்றுத் தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை.
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.
3. எலியும் பூனையும் போல - எதிரிகளாக.
ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.
4. அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி.
நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.
5. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படையாக, தெளிவாக.
தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.
பயிற்சி எண்ணங்களை
1. பசுமரத்தாணி போல - எளிதாக
2. மடைதிறந்த வெள்ளம் போல - வேகமாக
3. அடியற்ற மரம் போல - வலுவிழந்து
4. கல்மேல் எழுத்து போல - அழியாமல்
5. நகமும் சதையும் போல - இணை பிரியாமை
6. அடுத்தது காட்டும் பளிங்கு போல - வெளிப்படுத்த
7. இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்
8. அலை ஓய்ந்த கடல் போல - அமைதி
9. இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்
10. கயிறற்ற பட்டம் போல - தவித்தல், வேதனை
ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய் மொழியே துணை நிற்கும் - இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை - கற்கும் திறன் - பயன் - இன்றைய நிலை.
முன்னுரை :
“தாய்மொழி கண் போன்றது
பிறமொழி கண்ணாடி போன்றது”
நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழியால்தான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தாய்மொழிக் கல்வியின் தேவை :
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்க பட வேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்ப்படுத்துகின்றது.
தாய்மொழிச் சிந்தனை :
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.
அறிஞர்கள் பார்வை :
உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி.இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது, டி.எஸ்.கோத்தாரி குழுவும் (1964) தேசியக்கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.
கற்கும் திறன் :
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே, தாய்மொழி வழியாகக் கற்கும் போது சிந்தனைத்திறன் அதிகமாகும்.
தாய்மொழிக் கல்வியின் பயன் :
“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சிப் பெற்று ஒலிகளைக் கேட்கிறது” என்கின்றனர். மருத்துவ அறிஞர்கள், குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அக்குழந்தைகள் தாய்மொழிவழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கல்விக் கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள்.
இன்றைய நிலை :
இன்று தாய்மொழி வழியில் கல்விச் கற்பதைக் கௌரவக் குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களுள் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.
முடிவுரை :
மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று. ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக
கண்ணால் கண்டவற்றைக் கையால்
கலைவடிவமாக்கி
காண்பவர் கண்களுக்குக்
காட்சி தரும் விருந்தாக்கி
காலங்கள் கடந்தாலும் கண்களை
விட்டு அகலா ஓவியமாக்கி
கல்லைச் சிலையாக்கும் சிற்பியே
காலங்காலமாய் நிற்பாய் என்றும்!
அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.
குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி
உயிரின் ஒலியே தாயின் அரவணைப்பு
அரவணைக்கும் அவளையே அகத்தில் எண்ணுவோமே!
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.
எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் - கவிமணி.
1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
விடை : மறைமலை அடிகள்
2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
விடை : தமிழ் ஒளி
3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்
விடை : புதுமைப்பித்தன்
4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்
விடை : கோதை
(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)
செய்து கற்போம்
தமிழறிஞர்கள் எழுதிய கடிதங்களுள் ஏதேனும் மூன்றினைத் திரட்டி வகுப்பறையில் வழங்குக.
நிற்க அதற்குத் தக
கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி/தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும் தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் குறிப்பிடுக.
Subscription - உறுப்பினர் கட்டணம்
Fiction - புனைவு
Biography - வாழ்க்கை வரலாறு
Archive - காப்பகம்
Manuscript - கையெழுத்துப் பிரதி
Bibliography - நூல் நிரல்
அறிவை விரிவு செய்
• பாரதியின் கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
• இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர் பொற்கோ
• தமிழ் அழகியல் - தி.சு. நடராசன்
• பாரதி கட்டுரைகள்
• பாரதி கதைகள்
• காட்டுவாத்து - ந. பிச்சமூர்த்தி
• நெல்லூர் அரிசி - அகிலன்
• சுவரொட்டிகள் - ந. முத்துசாமி