Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: தம்பி நெல்லையப்பருக்கு

பாரதியார் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: தம்பி நெல்லையப்பருக்கு | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  31.07.2022 10:34 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

துணைப்பாடம்: தம்பி நெல்லையப்பருக்கு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : துணைப்பாடம்: தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

மொழி – க

தம்பி நெல்லையப்பருக்கு

- பாரதியார்நுழையும்முன்

உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது. கடித வடிவில் சொல்ல வேண்டியவற்றை வெளியிடும் முறை உண்டு. கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களைத் தந்து அவற்றைப் பொதுவெளிக்கு உரியதாக்குபவர்களும் இருக்கிறார்கள். காலத்தின் குரல்களான அக்கடிதங்களில் மொழி, வீறுபெறுகிறது.


புதுச்சேரி,

19, ஜுலை 1915.

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்பரைப் பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி - மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

**

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை .

**

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்! தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.

**

தம்பி , - நான் ஏது செய்வேனடா!

தம்பி - உள்ளமே உலகம்!

ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ.

பற! பற! - மேலே மேலே! மேலே!

**

தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது.

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.

தமிழ் நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் 

பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன 

கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! என்று பாடு.

தம்பி - நீ வாழ்க!

உனதன்புள்ள,

பாரதிதெரிந்து தெளிவோம்

எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879 இல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சிசெய்த வெங்கடேசுர எட்டப்பருக்கு 6.8.1919 இல் கடிதம் எழுதினார். பல விதமான குற்றங்களையுடைய அந்நூலை நல்ல இனிய தமிழ்நடையில் அமைத்துத் தருவேன் என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. வம்சமணிதீபிகை நூலின் மூல வடிவம் மறுபதிப்பாக இளசை மணி என்பவரால் 2008இல் அப்படியே வெளியிடப்பட்டது.

எட்டயபுர ஜமீனுக்குப் பாரதி எழுதிய கவிதைக் கடிதம்

ஐயநின் அருளே அருங்கதி யென்ன

உய்ய இவண்வந் துற்று என் தந்தையார்

என்னையும் புறமொழிகற்க வென்றி யம்புவர்

என்னை யான் செய்குவ தின்றமிழ் கற்பினோ

பின்னை ஒருவரும் பேணார் ஆதலின்

கன்ன யான் அம்மொழி கற்கத் துணிந்தனன்; எனினும்

கைப்பொருள் அற்றான் கற்ப தெவ்வகை?

தெரியுமா?

பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர். பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.


நூல்வெளி 

மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம் ரா. அ. பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது. பாரதி, பதினைந்து வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம்முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம்வரை அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு. பாரதியாரைவிட ஏழாண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.


Tags : by Bharathiar | Chapter 1 | 12th Tamil பாரதியார் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Supplementary: Thambi nellaiapparuku by Bharathiar | Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : துணைப்பாடம்: தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்