Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  03.08.2022 07:24 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்  


சான்றோர் சித்திரம்


வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர் உடனே 'அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி' என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். 'சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார்.  இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

வினாக்கள்: 

1. 'எல்லி' என்பதன் பொருள் என்ன? 

2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்? 

3. ஆழி, கால் பொருள் தருக. 

4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை? 

5. பெற்றவர் - இலக்கணக்குறிப்புத் தருக. 

6. விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? 

7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? “நாவலர்' என்ற பட்டத்தை யார் வழங்கினார்? 

8. 'வந்திருந்தார்' இரு பொருள்படும்படி வாக்கியம் அமைக்க. 


விடைகள்: 

1. சூரியன். 

2. 24 நிமிடம். 

3. ஆழி - மோதிரம், கடல்.

கால் - உடல் உறுப்பு, காற்று. 

4. 'வசனநடை கைவந்த வள்ளலார்' எனப் புகழப்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிப் புலமை பெற்றவர். 

5. பெற்றவர் - வினையாலணையும் பெயர். 

6. பெர்சிவல் பாதிரியார். 

7. இயற்பெயர் - ஆறுமுகம்.

நாவலர் பட்டம் - திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியதாகும். 

8. வந்திருந்தார் : உடல் நலம் சரியில்லாத என் தந்தையைக் காண என் மாமா நீண்ட நாள் கழித்து வந்தார். 

வந்து இருந்தார் : பொதுக்கூட்டம் காண பல மைல் தூரம் நடந்த குமரன் கால் வலியால் வந்து இருந்தார்.


இலக்கியம் நயம் பாரட்டுக

முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி 

அச்சங்கத் துள்ளே

அளப்பரிய பொருள்கூட்டி 

சொற்சங்க மாகச்

சுவைமிகுந்த கவிகூட்டி 

அற்புதங்க ளெல்லாம் 

அமைத்த பெருமாட்டி!

- கண்ணதாசன் 

முன்னுரை :

இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

திரண்ட கருத்து :

தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புலவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே! 

தொடை நயம் : 

மோனை :

காட்டுக்கு யானை

பாட்டுக்கு மோனை 

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும். 

சான்று: 

முச்சங்கங் முதுபுலவர் 

ச்சங்கத் ளப்பரிய

சொற்சங்க சுவைமிகுந்த

ற்புதங்க மைத்த

எதுகை :

மதுரைக்கு வைகை

செய்யுளுக்கு எதுகை 

முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

சான்று: 

முச்சங்க அச்சங்க

சொற்சங்க அற்புதங்க 

இயைபு: 

கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும். 

சான்று:

பெருமாட்டி 

கவிகூட்டி 

பொருள்கூட்டி

தமைக்கூட்டி 

அணி நயம்:

அணியற்ற பாக்கள் 

பிணியுள்ள வணிதை

தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது. 

சந்த நயம் :

சந்தம் தமிழுக்குச் சொந்தம்

ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல். 

சுவை நயம்:

நா உணரும் சுவை ஆறு 

மனம் உணரும் சுவை எட்டு

என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது. 

முடிவுரை:

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.


தமிழாக்கம் தருக

1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

2. A new language is a new life. (Persian Proverb). 

புதிய மொழி புதிய வாழ்க்கை. 

3. If you want people to understand you, speak their language. (African Proverb). 

பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு. 

4. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon). 

மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம். 

5. The limits of my language are the limits of my world. (Willgenstin).

என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை. 


கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

- மொழி வரலாறு (மு.வரதராசனார்) 

வினாக்கள் : 

1. மக்கள் படைத்துக் காத்துவரும் அரிய கலை எது? அது ஆற்றும் செயல் யாது? 

2. தாயின் முதல் விருப்பம் என்ன? 

3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?

4. மொழியை வளர்ப்பவரும், மொழியால் வளர்பவரும் யார்? 

5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக

தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல. 

1. தாமரை இலை நீர் போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.

இவ்வுலக ஆசைகளின்மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும். 

2. கிணற்றுத் தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை.

இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர். 

3. எலியும் பூனையும் போல - எதிரிகளாக.

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர். 

4. அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி.

நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர். 

5. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படையாக, தெளிவாக. 

தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.


பயிற்சி எண்ணங்களை

1. பசுமரத்தாணி போல - எளிதாக

2. மடைதிறந்த வெள்ளம் போல - வேகமாக 

3. அடியற்ற மரம் போல - வலுவிழந்து

4. கல்மேல் எழுத்து போல - அழியாமல்

5. நகமும் சதையும் போல - இணை பிரியாமை

6. அடுத்தது காட்டும் பளிங்கு போல - வெளிப்படுத்த

7. இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்

8. அலை ஓய்ந்த கடல் போல - அமைதி

9. இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்

10. கயிறற்ற பட்டம் போல - தவித்தல், வேதனை


ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள். 

எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய் மொழியே துணை நிற்கும் - இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. 

தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை - கற்கும் திறன் - பயன் - இன்றைய நிலை. 

முன்னுரை : 

“தாய்மொழி கண் போன்றது 

பிறமொழி கண்ணாடி போன்றது”

நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழியால்தான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

தாய்மொழிக் கல்வியின் தேவை :

மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்க பட வேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்ப்படுத்துகின்றது.

தாய்மொழிச் சிந்தனை :

தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.

அறிஞர்கள் பார்வை :

உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி.இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது, டி.எஸ்.கோத்தாரி குழுவும் (1964) தேசியக்கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.

கற்கும் திறன் :

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே, தாய்மொழி வழியாகக் கற்கும் போது சிந்தனைத்திறன் அதிகமாகும்.

தாய்மொழிக் கல்வியின் பயன் :

“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சிப் பெற்று ஒலிகளைக் கேட்கிறது” என்கின்றனர். மருத்துவ அறிஞர்கள், குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அக்குழந்தைகள் தாய்மொழிவழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கல்விக் கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள். 

இன்றைய நிலை : 

இன்று தாய்மொழி வழியில் கல்விச் கற்பதைக் கௌரவக் குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களுள் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும். 

முடிவுரை :

மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று. ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம். மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக


கண்ணால் கண்டவற்றைக் கையால் 

கலைவடிவமாக்கி 

காண்பவர் கண்களுக்குக் 

காட்சி தரும் விருந்தாக்கி 

காலங்கள் கடந்தாலும் கண்களை 

விட்டு அகலா ஓவியமாக்கி 

கல்லைச் சிலையாக்கும் சிற்பியே 

காலங்காலமாய் நிற்பாய் என்றும்!


அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.

குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல் 

தாயின் குரலில் உயிரின் ஒலி 

உயிரின் ஒலியே தாயின் அரவணைப்பு

அரவணைக்கும் அவளையே அகத்தில் எண்ணுவோமே! 


குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் - கவிமணி. 

1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம். 

விடை : மறைமலை அடிகள்

2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.

விடை : தமிழ் ஒளி 

3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்

விடை : புதுமைப்பித்தன் 

4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்

விடை : கோதை

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)


செய்து கற்போம் 

தமிழறிஞர்கள் எழுதிய கடிதங்களுள் ஏதேனும் மூன்றினைத் திரட்டி வகுப்பறையில் வழங்குக.நிற்க அதற்குத் தக


கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி/தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும் தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் குறிப்பிடுக.படிப்போம் பயன்படுத்துவோம் (நூலகம்) 

Subscription - உறுப்பினர் கட்டணம்

Fiction -  புனைவு

Biography - வாழ்க்கை வரலாறு

Archive - காப்பகம்

Manuscript - கையெழுத்துப் பிரதி

Bibliography - நூல் நிரல்


அறிவை விரிவு செய்

• பாரதியின் கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன் 

• இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர் பொற்கோ  

• தமிழ் அழகியல் - தி.சு. நடராசன் 

• பாரதி கட்டுரைகள்

• பாரதி கதைகள் 

• காட்டுவாத்து - ந. பிச்சமூர்த்தி

• நெல்லூர் அரிசி - அகிலன்

• சுவரொட்டிகள் - ந. முத்துசாமி


Tags : Chapter 1 | 12th Tamil இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Tamil Language Exercise - Questions and Answers Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்