Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: தமிழ்மொழியின் நடை அழகியல்

தி.சு. நடராசன் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழ்மொழியின் நடை அழகியல் | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  31.07.2022 10:15 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

உரைநடை: தமிழ்மொழியின் நடை அழகியல்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : உரைநடை: தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு. நடராசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம் 

மொழி – க 

தமிழ்மொழியின் நடை அழகியல்

- தி.சு. நடராசன்நுழையும்முன்

உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அழகுணர்வு, மலரும் மணமும் போலக் கவிதையுடன் இரண்டறக் கலந்துள்ளது. கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில், உணர்ச்சியைப் பாய்ச்சும் விதத்தில் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழகியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது.


அழகு, இந்தப் பேரண்டத்தின் செய்தி. உண்மையுமாய் ஒளியுமாய் உணர்வையும் அறிவையும் கவர்ந்து உயிரில் கலக்கும் அதன் ஆற்றல் உணர்வு நிலையினையும் அறிவுப்புலனையும் இலக்கியமாக ஆக்குகிறது; அவ்விலக்கியத்தை முன்கொண்டு செல்கிறது. தமிழில் இதனுடைய வழித்தடங்கள் ஆழமாகப் பதிந்துள்ளன. அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருகிற சங்க இலக்கியம், குறிப்பிட்ட சில அழகியல் பரிமாணங்களை வரித்துக்கொண்டுள்ளது.

மொழிசார் கலை

அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம், இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் ஆகும். எழுத்துகள் பற்றிப் பேசுகிறபோதே, செய்யுளின் வழக்கு பேசப்பட்டுவிடுகிறது. எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது. ஏனைய கலைகளிலிருந்து கவிதைக்கலையை வேறு படுத்துகின்ற அதன் முதன்மையான, தனிச்சிறப்பான பண்பு இது. கிரேக்கம், வடமொழி முதலிய பிற மொழிகளைவிட, தமிழ் இதனைத் திட்டவட்டமாகப் புரிந்து வைத்துள்ளது.

பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள், பேசும்போதும் கேட்கும்போதுமான தனிச்சூழல்கள் ஆகியன மட்டுமல்லாது வரலாறு முழுக்க மொழி, மனித நாக்குகளின் ஈரம் பட்டுக்கிடக்கிறது. அதனையே இலக்கியம், தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது. உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை. இலக்கியம் என்ற மொழிசார் கலை, மொழியின் தனித்துவமான பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கிறது. இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான், கவிதைத்தனம் அல்லது இலக்கியத்தனம் (poeticalness/ literariness) என்று பேசப்படுகிறது. இதனால், மொழிசார்ந்த பொருள், மொழிசார்ந்த கலையாக ஆகிவிடுகிறது.

கலை முழுமை

இலக்கியத்தின் 'பயன்' பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு. அறம், பொருள், இன்பமாகவோ அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளாகவோ, இந்தப் பயன் இலக்கிய உருவாக்கத்தில் இடம்பெற வேண்டும். பின்னால் வந்தவர்கள் இதனை இயந்திரப் போக்காகத் தனியாக - ஒட்டாமல் - கூறியுள்ளனர். ஆனால் தொல்காப்பியம் மிகவும் தெளிவாக, இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகையதொரு முழுமைதான், கலை முழுமை (artistic whole) எனப்படுகிறது.

சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளது. அகன் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்து விடுகின்றது. அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து,

அந்நில மருங்கின் அறமுதலாகிய 

மும்முதற் பொருட்கும் உரிய என்ப (தொல். செய். 105)

என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது. 

செவ்வியல் இலக்கியம் கட்டமைக்க விரும்பிய அறம் இது. சமூக - பண்பாட்டு மரபிற்கேற்பவே, கலைப்படைப்பை - அழகியல் நெறியை - பண்பாட்டின் இலச்சினையாகச் (symbol of culture) சித்தரிப்பதற்குத் தமிழ்மரபு முன்வந்திருக்கிறது; முன்மொழிந்திருக்கிறது. தமிழ் அழகியலின் நெடும் பரப்பு, இது.


நடையியல் : விளக்கம்

பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில், ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை. 

‘நடைபெற்றியலும்' (கிளவியாக்கம், 26) என்றும் நடைநவின்றொழுகும் (செய். 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும், 

ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை 

வெண்பா நடைத்தே கலி (செய். 107) 

என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும் அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்துசக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் அவ்வாறே கருதுகின்றன.

ஒலிக்கோலங்கள்

எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்கின்றன.

இதனையே அந்தப் பனுவலின் - பாடலின் - ஒலிப் பின்னல் (sound texture) என்கிறோம்.

எடுத்துக்காட்டாக ஒரு பாடல்:

கடந்தடு தானை மூவிருங்கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே; 

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு; 

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

யாமும் பாரியும் உளமே; 

குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (புறம். 110)

என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்துகொள்ளலாம். இன்னும் சில பாடல் அடிகளை இங்கே இதனடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறிந்துகொள்ளலாம். சிறுசிறு வாக்கியங்கள், பேசுவோரின் அறுதியிட்டுப் பேசும் தன்மையைக் காட்டுகின்றன.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் 

கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் 145) 

புணரின் புணராது பொருளே; பொருள்வயின் 

பிரியின் புணராது புணர்வே (நற். 16) 

நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை (புறம். 290)

இப்படிப் பல. உயிர் ஒலிகள் - குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

சொற்புலம்

சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன; கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கின்றன. சொல் வளம் என்பது, ஒரு பொருள் குறித்துவரும் பல சொல்லாய்ப் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லாய் வருதலும் பல துறைகளுக்கும் பல சூழல்களுக்கும் பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும் உணர்வும் தெளிவும் கொண்டதாய் வருதலும் என்று செழிப்பான தளத்தில் சொல், விளைச்சல் கண்டிருப்பதைக் குறிப்பது ஆகும். சங்க இலக்கியத்தில் இது மலர்ந்தும் கனிந்தும் கிடக்கிறது.

முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. இன்றைய இலக்கியத்தில், இப்படித்தான் கி. ராஜநாராயணன், கிடை' எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார். சொல்வளம், ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது.

சொல்வளம் என்பது, தனிச் சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்; ஒன்றற்கு மேற்பட்ட சொற்கள் கவவுக்கை நெகிழாமல் முயங்கிக் கிடப்பதையும் குறிக்கும்.

தமிழில் சில தொகைமொழிகள் 

வைகுறு விடியல், கன்னி விடியல், புல்லென் மாலை, நள்ளென் யாமம், காமர் வனப்பு, மாண்கவின் காண்டகு வனப்பு, கவினுறு வனப்பு, தீநீர், நெடுநீர், சின்னீர், பனிநீர், ஒலிவெள்ளருவி, பறைக்குரல்எழிலி, பொய்படு சொல், நகைக்கூட்டம், ஓவச் செய்தி... இப்படி ஓராயிரம்.

சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை (Compound words) என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. 'நீர் படுகின்ற - அல்லது நீர்பட்ட - பசுமையான கலம் என்பது, எதுவும் தொகாமல் வருகிற தொடர் மொழி. அதுவே, 'நீர்படு பசுங்கலம்' (நற். 308) என்று ஆகும்போது, தொகைமொழி. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட (Precision) ஒரு வடிவமைப்பு. அது வாக்கிய அமைப்பில், ஒரு சொல் போலவே நடைபெறும்.

தொடரியல் போக்குகள்

ஒலிக்கோலமும் சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. சொல்லுவோருடைய மொழித்திறன், கேட்போர் - வாசிப்போருடைய உளப்பாடாக (purport) மறித்தாக்கம் (transform) பெற வேண்டும். பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் நேர் நடந்தும் ஏறியிறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப் பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்துவருகிறது. கவிதை மறுதலைத் தொடர் (poetic inversion) இது.

முத்தாய்ப்பாக முடியும் பாடலின் இறுதியில் தான் இந்தத் தொடரியல் பிறழ்வு நிலை பெரிதும் காணப்படுகிறது. சான்றாகப் பேரெயின் முறுவலார், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கு, சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடிய பாடல்.

இடுக வொன்றோ, சுடுகவொன்றோ; 

படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே (புறம். 239) 

இந்த இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்திருக்கிறது. ஏனைய 20 அடிகளில், தொடர்கள் வரிசையாகவும் திட்டமிட்டு நேர்படவும் செல்லுகின்றன. 'தொடியுடைய தோள் மணந்தனன்' எனத் தொடங்கி, ஒவ்வோர் அடியும் தனித்தனியே வினைமுற்றுகளோடு, தன்னிறைவோடு முடிகின்றன. இப்படி ஒரு 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வது போல 'ஆங்குச் செய்பவெல்லாம் செய்தனன் ஆதலின்' எனக் கூறிவிட்டுப் போடா போ - புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக்கொள்கிறது. பாடலின் தொடரியல் சார்ந்த வடிவமைப்பு இதற்குத் துணை நிற்கிறது.

நடையியல், வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். அந்தப் பனுவலின் நீண்ட நெடும் இழைகளும் அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஊடுபரவி ஓடும் இழைகளும் கருத்தியல் நிலையிலும் வடிவமைப்பு நிலையிலும் கவன ஈர்ப்பைத் தருகின்றன. மேலும், சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவம் மிக்க சமூக - பண்பாட்டுத் தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாக நிறுவிக்கொண்டு விட்டது என்பதையும் நம்மால் அறியமுடிகிறது.


நூல்வெளி

தி.சு.நடராசன் எழுதிய 'தமிழ் அழகியல்' என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர். திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.


Tags : by thi. su.nadarajan | Chapter 1 | 12th Tamil தி.சு. நடராசன் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Prose: Tamil mozhiyin nadai azhagiyal by thi. su.nadarajan | Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : உரைநடை: தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு. நடராசன் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்