Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம் | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  22.07.2022 12:04 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்வி

கவிதைப் பேழை

திருவிளையாடற்புராணம்

- பரஞ்சோதி முனிவர்நுழையும்முன்

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புச் செய்வது தமிழ்கூறும் நல்லுலகம். அரசரும் புலவருக்குக் கவரி வீசுவர்; கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களைப் புலவருக்குக் கொடை கொடுத்து மகிழ்வர்; இறைவனும் அறிவைப் போற்றுபவன்; அறிவாய் நிற்பவன்; அறிவிற் சிறந்த புலவருக்காகத் தூது சென்றவன்; புலவரது அறிவுப் பெருமையை உணர்த்துபவன்.


காண்டம் : திரு ஆலவாய்க் காண்டம்(3)

படலம் : இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் (56)

படலச் சுருக்கம்

பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேசபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான். கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர், தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிருஆலவாயில் சென்று தங்கினார். இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான். இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.

 

இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்

மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல். (2615)

சொல்லும் பொருளும்: கேள்வியினான் - நூல் வல்லான், கேண்மையினான் – நட்பினன்

 

மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்

2. சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்

நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்

பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்

சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.  (2617)

சொல்லும் பொருளும்: தார் - மாலை, முடி – தலை

3. என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை

தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது என்னா

முன்னை மொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான்

அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி. (2619)

சொல்லும் பொருளும்: முனிவு – சினம்

 

இறைவன் கோவிலைவிட்டு நீங்குதல்

4. போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்

ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத்து உமையாம் நங்கை யோடும்

வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோவிலின்நேர் வடபால் வையை

ஆனந்தித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ. (2620)

சொல்லும் பொருளும்: அகத்து உவகை - மனமகிழ்ச்சி

 

கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல்

5. அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ

தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ

இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! எந்தாய்!. (2629)

சொல்லும் பொருளும்: தமர் - உறவினர்

 

இறைவனின் பதில்

6. ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா. (2637)

சொல்லும் பொருளும்: நீபவனம் - கடம்பவனம்

 

மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல்

7. பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்

புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ

எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே. (2638)

சொல்லும் பொருளும்: மீனவன் - பாண்டிய மன்னன்

 

மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்

8. விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம்

புதியதோர் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்

கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ

மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி. (2641)

சொல்லும் பொருளும்: கவரி - சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)

 

மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

9. புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.* (2644)

சொல்லும் பொருளும்: நுவன்ற - சொல்லிய, என்னா - அசைச் சொல்

 

பாடலின் பொருள்

1. 'குலேசபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன்’ எனக் கற்றோர் கூறக் கேட்டார் இடைக்காடனார் என்னும் புலவர். கலைகளை முழுவதும் உணர்ந்த நண்பர் கபிலனின் மேல் அன்பு கொண்ட அப்புலவர், மிகவும் இனிய தேன் ஒழுகும் வேப்பமாலையினை அணிந்த பாண்டியனின் அவைக்குச் சென்று, தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.

2. இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திரு ஆலவாயிலில் உறையும் இறைவனே! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக் கேட்டு, அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

3. இடைக்காடனார் இறைவனிடம், "பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார். அவரது சொல் வேற்படை போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.

4. கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார் இறைவன். ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்குச் சென்று இருந்தார்.

5. "இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல்ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்" என்று வேண்டினான் பாண்டிய மன்னன்.

6. இறைவன் மன்னனிடம், "சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம். இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்" என்றார்.

7. வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன், "உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா?" என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டிப் போற்றினான்.

8. மன்னனது மாளிகை, வாழையும் கமுகும் சாமரையும் வெண்ணிற மேல்விதானமும் விளக்கும் உடையது; அன்றலர்ந்த மலர்களால் தொடுத்த மாலை பூரண கும்பம் கொடி ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது; போற்றத்தக்க ஒளியுடைய மணிகள் பதிக்கப் பெற்றது. அங்குள்ள புலவர்கள் சூழ அறிவை அணிகலனாகப் பூண்ட இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.

9. பாண்டியன், "புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று பணிந்து வணங்கினான். நுண்ணிய கேள்வியறிவுடைய புலவர்களும், "மன்னா, நீ கூறிய அமுதம்போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" என்றனர்.

 

இலக்கணக் குறிப்பு

கேள்வியினான் - வினையாலணையும் பெயர்

காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை

 

பகுபத உறுப்பிலக்கணம்

தணிந்தது – தணி + த்(ந்) + த் + அ + து

தணி - பகுதி, த் - சந்தி

த்(ந்) - ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- சாரியை, து - படர்க்கை வினைமுற்று விகுதி

சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்

ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார். களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்; அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர். உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார். அப்பாடல் இதோ...

“மாசற விசித்த வார்புறு வள்பின் ..." புறம் 50

 

நூல் வெளி

திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது; பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

 

கற்பவை கற்றபின்...

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தை நாடகமாக்கி வகுப்பில் நடித்துக் காட்டுக.

 

 

Tags : by Paranjothi muniver | Chapter 5 | 10th Tamil பரஞ்சோதி முனிவர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Poem: Thiruvilayadar puranam by Paranjothi muniver | Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி