Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: புதிய நம்பிக்கை

கமலாலயன் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: புதிய நம்பிக்கை | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  22.07.2022 12:14 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

துணைப்பாடம்: புதிய நம்பிக்கை

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : துணைப்பாடம்: புதிய நம்பிக்கை - கமலாலயன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்வி

விரிவானம்

புதிய நம்பிக்கை

- கமலாலயன்நுழையும்முன்

வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள்; சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப் பாதையிட்டு அதையே பெருஞ்சாலையாக ஆக்குகிறார்கள்; பலரின் பயணங்களுக்கு வழிவகுக்கிறார்கள்; கல்வி அறிவற்ற இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையை அறிவது கல்வி வரலாற்றை அறிவதாகும்.


ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணி அவர்கள் விழித்து எழும் நேரம். அவர்களுக்குப் பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள் இருந்தன. ஒரு நாளில் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது.

பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்ஸி மட்டும் வீட்டிற்குத் திரும்புவாள், தனது குடும்பத்தினருக்கு உணவு சமைக்க . உணவு தயாரானதும் "பசியார வாங்க செல்லங்களே" ஓங்கிக் கூப்பிடுவார், வீட்டு வாசலிலிருந்து. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு உயரமுமாக இருந்த அந்தக் குடும்பத்தார் வயல்வெளியிலிருந்து வியர்வை சொட்டச் சொட்ட வீட்டினுள் நுழைவர்.

''ஓ.. மேரி.. மெதுவா மெதுவா.. மற்றவர்களை முந்திக்கொண்டு அவள் வீட்டு வாசலைத் தொட்டு விட்டாள். மேரியின் தந்தை சாம் சிரித்துக்கொண்டார். தனது பிள்ளைகளில் மேரிஜேன் மிகவும் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாள் என்பதைப்பற்றி அவர் எண்ணிக் கொண்டார்.

அந்தக் குடும்பம் உணவு உண்டு முடித்ததும் மறுபடியும் வயலுக்குத் திரும்பியது. மேரி தனது வேலையை முடித்துவிட்டுப் பாட்டியிடம் ஓடினாள். அவளுக்கு மாலைப்பொழுதில் மிக மகிழ்ச்சி நிறைந்தது இந்த நேரம்தான். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுவதும் பிரார்த்தனை செய்வதும் இந்த நேரத்தில்தான்.

மேரியின் மென்குரல், சூரிய வெப்பத்தை ஊடறுக்கும் குளிர் நீரோடையைப் போல் சன்னமாக ஒலிக்கும். அவள், தானே பேசிக் கொள்வாள். "பருத்திச் செடி வளர்வதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது?"

பருத்திச் செடிகளை அவள் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. பருத்திச் செடியில் அரும்புகின்ற முதல் பூ மொட்டைப் பார்க்கிற முதல் ஆளாக, தானே இருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் அது.

முதல் பூவை மேரி பார்த்துவிட்டாள்! ஒரு கணம் திகைத்தாள்.

ஹே..ய்! முதல் பூ, முதல் பூ.. இங்கே .. இங்கே !

"எங்கே ...? எங்கே ..?" "

நான்தான் முதலில் பார்த்தேன்.

நான்தான், நான்தான்!" என்று கத்தினாள். எல்லோரும் அந்த முதல் பூவைப் பார்க்க ஓடிவந்தார்கள். அவர்களுக்குத் தெரியும். இனி மூன்றே வாரங்களில் பருத்திப் பூக்களின் செந்நிறத்தினால் வயல்கள் பூராவும் சிவப்பாகிவிடும். அடுத்த ஆறு வாரங்களில் புதுப் பருத்தி நிறைந்துவிடும்.


மேரி இந்தக் கோடைக் கால இரவுகளை மிகவும் விரும்பினாள். தெளிந்த நிர்மலமான வானம். பருத்திப் பூக்களைப் பார்த்துக் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவற்றைப் பார்த்தவாறே சும்மா இலக்கற்றுச் சிந்தித்தபடி இருப்பது அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது!

அடுத்த நாள், காலை உணவு முடிந்தது. மேரியின் அம்மா பாட்ஸி துவைத்துத் தேய்த்த துணிகள் நிரம்பிய கனத்த கூடையைத் தலையில் தூக்கிக் கொண்டார். மேரியும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டாள். புழுதி படிந்த சாலையில் வெள்ளை முதலாளிகளின் வீடுகளை நோக்கி இருவரும் நடந்தனர்.

அந்த மாளிகை வீடு பென் வில்ஸனு டையது. பாட்ஸியும் மேரியும் பின் கதவுப் பக்கமாகச் சென்றனர். கருப்பின மனிதர்களுக்கு முன்புற வாசலில் அனுமதி கிடையாது. கதவு திறக்கப்பட்டது. பாட்ஸி வீட்டினுள் சென்றுவிட்டார். மேரி வெளியிலேயே இருந்தாள்.

சற்றுத் தூரத்தில் மற்றொரு சிறிய வீடு இருந்ததை மேரி கண்டாள். அது வெள்ளைக் குழந்தைகள் சும்மா ஓடி விளையாடுவதற்கென்றே கட்டப்பட்ட ஒன்று.' 'ஹலோ மேரி! உள்ளே வர விரும்புகிறாயா?" ஒரு வெள்ளைச் சிறுமி கேட்டாள். மேரி தயங்கினாள். தயக்கத்தை ஆவல் வென்றபோது அவள் மெதுவாக வீட்டினுள் நுழைந்திருந்தாள். அங்கிருந்த அழகுமிக்க விளையாட்டுப் பொருட்களையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“எங்களோடு சேர்ந்து விளையாட விரும்புகிறாயா..?"

"ஆமாம்.." மேரி பதில் சொன்னாள்.

வீட்டினுள் விளையாடியபடி சுற்றி வந்தபோது ஓர் ஓரத்தில் கிடந்த சிறிய மேசையும் அதன் மீதிருந்த ஒரு பொருளும் மேரியின் கவனத்தை ஈர்த்தன. அந்தப் பொருள் பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகம். மேலட்டை ஓவியத்தையும் அச்சிடப்பட்ட புத்தகத் தலைப்பையும் பார்த்து ஆர்வமுற்ற மேரி அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

அதைப் புரட்டத் துவங்கிய போது வில்ஸனின் இரு பெண் குழந்தைகளுள் சிறுமியாக இருந்தவள், "புத்தகத்தை என்னிடம் கொடு! நீ இதை எடுக்கக்கூடாது! உன்னால் படிக்க முடியாது..!" என்று மேரியிடமிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

முதலில் மேரிக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு

''சும்மா, அதைப் பார்த்து விட்டுத் தருகிறேன். நான் ஒன்றும் அதை சேதப்படுத்தி விடமாட்டேன். பத்திரமாக வைத்திருப்பேன்."

''எனக்கு அது எப்படித் தெரியும்? புத்தகங்கள், படிக்க முடியாதவர்களுக்காக இல்லை! தெரிந்து கொள்...!''

"பத்திரமாக வைத்திருப்பேன்."

"முடியாது"

“அப்படியானால் உன்னால் அதைப் படிக்க முடியுமா..?” மேரி கேட்டாள்.

"நிச்சயமாக நான் படிக்க முடியும். விளையாட்டுச் சாமான்களையும் என்னிடம் கொடு" என்று சொல்லிக்கொண்டே அந்தச் சிறுமி விளையாட்டுச் சாமான்களை மேரியிடமிருந்து பிடுங்கினாள். மேரி மனம் துவண்டாள். நட்புணர்வு அற்ற அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறினாள். கண்ணீர் பொங்கியது. வெளியே தெளிவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த காலை வெளிச்சம் அவளுக்கு ஆதரவாக இருந்தது. அவள் அப்படி என்ன பெரிய தவறைச் செய்துவிட்டாள்...? ஒரு புத்தகத்தைத் தொட்டிருக்கிறாள் ... அவ்வளவு தானே..?அதற்குப் போய் இப்படியா... வெடுக்கென்று பிடுங்கிவிட்டாளே...! மேரி மனம் கசந்தாள். அந்த நாள் முழுவதும் இனி அவள் துயரம் மேலிட்டு இருக்கப் போகிறாள்.

இந்தக் கொந்தளிக்கும் யோசனைகளுக்கு நடுவே மேரி ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். அவள் உதடுகள் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டன.

''ஆம், நான் படிக்க வேண்டும்! நான் வாசிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் எழுதப்படிக்கப் போகிறேன்!"

தனக்குத் தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள். அன்று நாள் முழுவதும் இந்த வார்த்தைகளை எத்தனையோ முறை சொல்லிக் கொண்டாள்.

“அன்பு நிறைந்த கடவுளே! இந்த வயல்களிலிருந்து என்னை வெளியே அழைத்துக்கொண்டு போ... நான் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும்... நான் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது எப்படியாகினும் நடக்க வேண்டும்."

அது உணவுக்கான நேரம். குடும்பம் பருத்திக்காட்டைவிட்டுக் கிளம்பியது. மேரி தனது தந்தையுடன் சேர்ந்துகொள்வதற்கு ஓடிச் சென்றாள்.

''நான் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியுமாப்பா?"

“அடடே! மேரிச்செல்லம் இங்கே நமக்கென்று பள்ளிக்கூடமே கிடையாதேம்மா!'' அப்பாவின் குரல் வருத்தத்தில் தளர்ந்து ஒலித்தது.

“நான் படிக்கணும் அப்பா ..... எழுதப்படிக்கத் தெரிந்துகொள்ளணும்னு விரும்பறேன்.” சாம் மெக்லியோட் பதில் எதுவும் கூறவில்லை .

விரைவில், பருத்தி எடுப்பதற்கான காலமும் வந்தது. இந்த ஆண்டு பருத்தி நல்ல விளைச்சல். நல்ல விலையும் கிடைத்தது. ஆனால், மேரிஜேனுக்கு இந்த முறை அவற்றில் ஈடுபாடு வரவில்லை. காரணம், அவள் ஒரே ஒரு விசயத்தைப் பற்றி மட்டுமே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்ததுதான்: 'எப்படி, எப்போது நான் வாசிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறேன்?'

ஆனால், அங்கே எந்த ஒரு பள்ளியும் கிடையாது. புத்தகங்கள் இல்லை. எந்த ஓர் ஆசிரியரும் இல்லை. அங்கிருந்ததெல்லாம் பருத்தி விளையும் பருவகாலம்தான். ஒரு பருவம் முடிந்து இன்னொன்று. அது முடிந்து மற்றொன்று ... பின் ... இன்னும் ஒன்று!

"நான் படிக்க விரும்புகிறேன். நான் படிக்க விரும்புகிறேன்.' மேரி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.அந்த வார்த்தைகள் எப்பொழுதும் அவளைச் சுற்றிக்கொண்டே திரிந்தன. பதினோரு வயதே ஆன அச்சிறு பெண் வயலிலிருந்து வீட்டை நோக்கிச் சென்று அந்தக் கனமான பருத்திப் பொதியைத் தனது முதுகிலிருந்து இறக்கி வைக்கும் போதுதான், தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு பெண் தன் முன்னால் நிற்பதைக் கண்டாள். அந்தப் பெண் புன்னகைத்தார்.

"நான்தான் மிஸ் வில்ஸன் .."

உன்னைப் போன்ற குழந்தைகள் படித்தாக வேண்டும். உன்னுடைய இந்தப் பருத்தி எடுப்பு வேலைகள் முடிந்த உடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக மேயெஸ்வில்லிக்கு வரவேண்டும். சரியா.. மேரிக்குட்டி.. வருவாய்தானே?"

மேரி பதில் சொல்ல நா எழாமல் வாயடைத்து நின்றாள்.

பருத்தி எடுக்கும் தங்களின் வேலையைத் தொடர்வதற்காக அனைவரும் வயல்களுக்குத் திரும்பிச் சென்றனர். மேரியும் ஓடினாள். "இப்போதே வாருங்கள், சீக்கிரம்..! அதோ அந்த மூலையில்; பிறகு இங்கே, பருத்தியை எடுங்கள். மசமசவென்று நிற்காதீர்கள்... நான் பள்ளிக்கூடத்திற்குப் போயாகவேண்டும்!" எல்லோரையும் அவசரப்படுத்தினாள். திடுமென்று அவள் ஒரு புதிய மனுசியாக ஆகி விட்டதைப் போல மற்றவர்கள் உணர்ந்தனர்.

"அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடு! உன்னால் படிக்க முடியாது!" என்று மேரியின் காதுகளில் இத்தனை நாள் ஒலித்துக் கொண்டிருந்த இந்த வார்த்தைகள் அவளுடைய ஆத்மாவில் இருந்து என்றென்றைக்குமாகத் துடைத்தெறியப்படப் போகின்றன.

புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. மேரி என்றொரு பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே போய் முதன்முறையாகப் படிக்கப் போகிறாள் என்ற நம்பிக்கை! அந்தத் தலைமுறையில் படிக்கப்போகும் முதல் ஆளும் அவள் தான்.

அந்த வீட்டில் ஜன்னல் ஓரமாக கீழ்ப்பக்கம் இருந்த மேசையின்மீது தலைமுறைக் காலமாக பைபிள் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் குடும்பத்தில் எந்த ஒருவரும் எந்தக் காலத்திலும் அதைப் படிப்பதற்கு முடிந்ததே இல்லை . காரணம் யாருக்கும் படிக்கத் தெரியாது.

"இந்த பைபிளையும் இனி படித்துவிடுவேன். எல்லோருக்கும் படித்துக் காட்டவும் செய்வேன்." மேரி தனக்குத்தானே முணுமுணுத்தாள்.

மேயெஸ்வில்லியில் பெரிய கடை அது.

“உனக்கு என்ன வேண்டும் மேரிம்மா..?" சாம் அவளைக் கேட்டார்.

"எழுதுவதற்குப் பிரயோசனமான ஏதாவது ஒன்று வாங்கிக் குடுங்கப்பா.'

கடைக்காரர் ஒரு சதுர வடிவ, கடினமான கறுப்புப் பலகை ஒன்றை அவர்களிடம் எடுத்துக் காட்டினார்.

“இதுதான் சிலேட். இந்தச் சிறிய வெள்ளை சாக்பீஸ் துண்டினால் நீங்கள் இந்தப் பலகையின் மீது எழுதலாம்".

இனி சிலேட்டின் மீது வெள்ளை சாக்பீஸைக் கொண்டு அவளால் கோடுகளை, படங்களை வரைய முடியும். பிறகு, எப்படி எழுதுவது என்று அவள் அறிந்துகொண்ட நிமிடத்திலிருந்து அவள் எழுதமுடியும்.. எழுதுவாள்... எழுதுவாள்...!

அப்பாவும், மகளும் வீட்டுக்கு வந்தபோது, அனைவரும் அடுத்து வரப்போகிற நாள் குறித்தே பேசிக்கொண்டிருந்தார்கள். நாளை மேரிஜேன் பள்ளிக்கூடம் செல்லப்போகும் முதல் நாள்....!

மேரியின் சகோதரர்களும் சகோதரிகளும் சொன்னார்கள் :

"நீ எங்களுக்கும் சொல்லித்தர வேண்டும், சரியா?"

"ஓ யெஸ்..! நான் கற்றுக்கொண்டதை எல்லாம் உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்..!" அவள் உறுதியளித்தாள்.

அடுத்த நாள் அதிகாலையில் சீக்கிரமாகவே அவள் புறப்படத் தயாராகி விட்டாள். அப்பாவும் கூடச் சென்றார்.

மேயெஸ்வில்லிக்குப் போய்ச்சேர மேரி நடக்க வேண்டிய தூரம் ஐந்து மைல்கள். அந்தப் புழுதிபடிந்த சாலையில் ஒவ்வொரு நாளும் வீடு திரும்ப மேலும் ஐந்து மைல்கள் அவள் நடக்க வேண்டும்.

மேரி ஜேன் தான் பெற்ற புதிய கல்வியினால் முக்கியமான ஒரு நபராக மாறிக்கொண்டிருந்தாள். அவளால் இப்போது கணக்குப் பார்க்கமுடியும். அவளுடைய அக்கம் பக்கத்தவர் கறுப்பின மக்கள் வெள்ளை நிற மக்கள் இருவருமே சம்பளக்கணக்கோ, கொடுக்கல் வாங்கல் குழறுபடியோ எதுவென்றாலும் மேரியிடமே கொண்டுவந்தார்கள்.

கறுப்பர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் உண்மையில் நியாயமான தொகைதானா என்று கூடக் கணக்கிடத் தெரியவில்லை. வெள்ளைக்காரர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்கிக்கொள்ள வேண்டியவர்களாகவே இருந்தார்கள் கறுப்பர்கள்.

மேரி தனது பள்ளியில் மேலும் புதிது புதிதாய்க் கற்றுக்கொண்டு வந்தாள். தனது பாதையில் தான் மெதுவாக உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று மனதில் அசை போடுவாள்...!

பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளித்தல் இருந்தது. இதுதான் தங்கள் வாழ்க்கையில் காணும் முதன் முதல் பட்டமளித்தல் விழா என்பதால் மேயெஸ்வில்லியின் மக்களுக்கு அது மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது டிப்ளொமாக்களை வழங்குவது. மதிப்புமிக்க வெள்ளைத்தாள் சுருள்களில், 'இந்தப் பட்டம் பெறும் மாணவர்கள் எழுதவும் படிக்கவும் கூடியவர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும்.

மேரியின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். மேரி தன்னுடைய டிப்ளொமாவை வாஞ்சையுடன் பெற்றுக்கொண்டாள். பூப்போல அதை ஏந்தி, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். மேஜையிலிருந்த புத்தகத்தை, தான் கையில் எடுத்த போது அதை ஒரு சிறுமி பிடுங்கிக் கொண்ட அந்த நாள் நினைவில் ஆடியது. "உன்னால் படிக்க முடியாது" என்று அவளைத் துயரப்படுத்துவதற்கு இனி எந்த ஒருவராலும் ஒருபோதும் முடியாது என்பதில் அவள் பெருமகிழ்ச்சியடைந்தாள்.

விழா முடிந்தது. இரைச்சலும் சந்தோசமும் நிறைந்த சூழலில் மிஸ் வில்ஸன் மேரிஜேனை தோளோடு அணைத்தபடி

"மேரிஜேன்,

இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?"

"எனக்குத் தெரியவில்லை மிஸ். நான் என்னுடைய படிப்பைத் தொடர விரும்புகிறேன். கருப்பர்கள் எப்போதாகிலும் கல்லூரிக்குப் போயிருக்கிறார்களா..?"

''இல்லை, மிக அபூர்வம் தான். ஆனால், நீ போக முடியும். அதற்கு நீ முதலில் உயர்நிலைப்பள்ளிக்குப் போயாக வேண்டும்..."

மேரி தங்களுடைய சின்னஞ்சிறு வீட்டிற்குத் திரும்பியதும் தனது படிப்பை எப்படியாகிலும் தொடர்ந்தாக வேண்டுமென்று சொல்லிக்கொண்டாள். மேரி இப்போது எழுதப்படிக்கத் தெரிந்தவள்.'' உன்னால் படிக்க முடியாது" என்று யாராவது அவளைப் பார்த்துச் சொன்னால் இப்போது அவள் உடனே அதற்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும். இந்தப் பெருமித உணர்வுடனே மேரி மற்றவர்களுடன் சேர்ந்து பருத்திக்காட்டுக்கு வேலைக்குத் திரும்பினாள்.

நாட்கள் போயின. ஒருநாள், பருத்தி வயல்களை நோக்கி ஒரு பெண் வருவதைத் தூரத்திலிருந்து மேரி பார்த்தாள். " மேரி" அந்த குரலைக் கேட்டதும் தெரிந்துவிட்டது, வந்தவர் மிஸ் வில்சன் என்பது.

''உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன் மேரி. மேற்குப் பகுதியில் வாழ்கிற ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பினக் குழந்தையின் படிப்பிற்காகப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப் போகவேண்டும் தயாராகு" என்றார் வில்ஸன்.

மேரி சந்தோசத்தில் குதித்தாள். வீட்டைப் பார்த்து ஓடினாள். "நான் மேல்படிப்புக்காக டவுனுக்குப் போகப்போகிறேன். பக்கத்து வீடுகளில் எல்லாம் ஓடி ஓடிச் சொன்னாள்.

பருத்தி வயல்களில் மேரிஜேனின் நாட்கள் முடிவுக்கு வந்தன.

அடுத்த பள்ளி ஆண்டின் தொடக்கம் வரப்போகிறது. இன்னும் சில நாட்களே உள்ளன. மேரி தயாரானாள். குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தவரும் மேரியைக் குறித்துப் பெருமிதம் அடைந்தார்கள். அவள் புறப்பட வேண்டிய நாளும் வந்தது.

“வாங்க, சீக்கிரம் ...! ரயிலுக்கு நேரமாகிவிடும்.. நான் தாமதமாகப் போக விரும்பவில்லை ..'' வீட்டின் வாயிற்படியில் பொறுமையிழந்து தவித்து நின்றாள் மேரி. அவர்கள் எல்லோருமாக வீட்டை விட்டுப் புறப்பட்டதும் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தனது பண்ணை வாகனத்துடன் வந்து சேர்ந்தார்.

" வண்டியில் ஏறுங்கள்..!" அவர் அன்புக் கட்டளையிட்டார்.

"இந்த மாதிரி ஒரு முக்கியமான நாளில் நீங்கள் நடந்து போகக்கூடாது..!" பாட்ஸியும் சாமும் இதை எதிர்பார்க்கவேயில்லை. வண்டி புறப்பட்டது. ஒவ்வொரு தெருவிலும் சில பேர் வந்து கூடச் சேர்ந்துகொண்டார்கள். "சாம், கொஞ்சம் பொறு. இதோ நாங்கள் வருகிறோம்." மேலும் சிலர் புறப்பட்டனர். அந்தக் குழு மென்மேலும் பெரிதாகிக்கொண்டே சென்றது. அவர்கள் ரயில் நிலையத்தை அடைந்தபோது அங்கு இன்னும் பலரும் காத்திருந்தார்கள்.

வண்டி போய் நிலையத்தில் நின்றதுதான் தாமதம். மேரி தாவிக் குதித்து இறங்கினாள்.

"மிஸ் வில்ஸன், மிஸ் வில்ஸன்...! இதோ, நான் இங்கே இருக்கிறேன்..!'

மேரியை அணைத்துக்கொண்ட மிஸ் வில்ஸன் அவள் செல்ல வேண்டிய இடம், சந்திக்க வேண்டிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளை விளக்கிச் சொன்னார்.

அந்த கௌரவத்திற்குரிய சிறுமியைச் சுற்றி ஒவ்வொருவரும் கூடி நின்றார்கள். புகைவண்டி வந்து கொண்டிருக்கிறது என்பதை மேலெழுந்து தெரிந்த புகையும் சத்தமும் அவர்களுக்குத் தெரிவித்தன.

"குட் பை மேரி"," குட் பை"

"வெற்றி உண்டாகட்டும்"

"குட் பை மேரி"

வாழ்த்தொலிகள் வந்து கொண்டே இருந்தன. எல்லோருக்கும் கை அசைத்து விடை பெற்றாள். ரயில் வேகமெடுத்தது.

 

நூல் வெளி

புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. 'உனக்குப் படிக்கத் தெரியாது“ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது. உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.

இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

 

முன்தோன்றிய மூத்தகுடி


"கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை"

ஐங்குறுநூறு 188:2


கற்பவை கற்றபின்...

1. கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒற்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் மேரி மெக்லியோட் பெத்யூன். அதுபோலத் தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற்சுடர் ஏற்றியவர்களுள் யாரேனும் ஒருவர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சில படங்களுடன் குறும்புத்தகம் ஒன்றைக் குழுவாக உருவாக்குக.

2. கல்விக் கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி பற்றிய ஒரு தொகுப்பேட்டினை உருவாக்கி வகுப்பறையில் காட்சிப்படுத்துக.

 

 

Tags : by Kamalalayan | Chapter 5 | 10th Tamil கமலாலயன் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Supplementary: Pudhiya nambikai by Kamalalayan | Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : துணைப்பாடம்: புதிய நம்பிக்கை - கமலாலயன் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி