Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி

இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  21.07.2022 11:56 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்வி

உரைநடை உலகம்

மொழிபெயர்ப்புக் கல்வி



நுழையும்முன்

ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடு செய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும். மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு. கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரவவேண்டும். நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு.


"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவை முஸ்தபா.

"ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்கிறார் மு.கு. ஜகந்நாதர்.

 

மொழிபெயர்ப்பு - தொடக்கம்

மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதுவும் பிறமொழிக் கருத்துக்களை, கதைகளைத் தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

 

மொழிபெயர்ப்பு - தேவை

மொழி பெயர்ப்பு, எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது; ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது; பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

மொழிபெயர்ப்பின் தேவையை உணர்த்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். உலகப் போரின் போது அமெரிக்கா, "சரண் அடையாவிடில் குண்டு வீசப்படும்" என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், 'மொகு சாஸ்ட்டு' என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹீரோஷிமாவில் குண்டுவீசியது என்று சொல்கிறார்கள். அந்தத் தொடருக்குப் பொருள், 'விடைதர அவகாசம் வேண்டும்' என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள், 'மறுக்கிறோம்' என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர். இது உண்மை எனில், மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் களங்கம் நேர்ந்தது எனலாம்.

 

பாரதியின் மொழிபெயர்ப்பு

Exhibition - காட்சி, பொருட்காட்சி

East Indian Railways - இருப்புப் பாதை

Revolution - புரட்சி

Strike - தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

 

மொழிபெயர்ப்பு - கல்வி

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்; பல அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்; வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்; நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஓருலகத்தன்மையைப் பெறமுடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இலக்கிய இறக்குமதி

பிற மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொது நிலை பெறு கிறது. அத்தகைய பொது நிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான நூல்கள் என்று பார்த்தால் சிலதான் எஞ்சும். இதே போலத் தமிழ் நூல்களும் பிற மொழிகளுக்கு அறிமுகமாயின. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான்.

மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது; ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது; கம்பன் இருந்திருக்க முடியாது. இரவீந்திரநாத தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

நேரடி மொழிபெயர்ப்பாக பிரஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் இன்று கிடைக்கத் தொடங்கியிருப்பது நல்ல பயனை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம். இன்றுள்ள புதிய திறனாய்வு முறைகளை எல்லாம் நாம் ஆங்கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம்.

பிற மொழி இலக்கியங்கள், இலக்கிய வடிவங்கள் பலவும் தமிழுக்கு அறிமுகமாகி அது போன்ற முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பலவகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

 

தெரிந்து தெளிவோம்

மொழிபெயர்ப்பு

எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு.

எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு, 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு, 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு, 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு.

சா. கந்தசாமி

 

மொழிபெயர்ப்பு - செம்மை

Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறு பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும். அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.

Camel என்பதற்கு வடம் (கயிறு), ஒட்டகம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை 'ஊசி காதில் ஒட்டகம் நுழையாது’ என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம். இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும் (அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே). மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூலமொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

'Underground drainage’ என்ற தொடரை மொழிபெயர்ப்பதில் தடுமாற்றம் வந்தது. பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர். தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர். அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.

Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலை நோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழி பெயர்க்கப்பட்டன. இதற்கு DIMNH, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல் , உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழி பெயர்க்கவில்லை. இவ்வாறு இடம்பார்த்து மொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேண்டும்.

 

பல்துறை வளர்ச்சி

இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழி பெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படு கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன. இதனால் புதுவகையான சிந்தனைகள் மொழிக்கூறுகள் பரவுகின்றன.

 

மொழிபெயர்ப்பு - பயன்

இது மொழிபெயர்ப்புக் காலம். காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது. இரவு தொலைக்காட்சியில் காணும் கேட்கும் செய்திகளும் மொழிபெயர்ப்பு மூலமே கிடைக்கின்றன. இடையில் நம் பணிகள் பலவற்றிலும் மொழிபெயர்ப்பின் துணை இருந்துகொண்டே இருக்கிறது.

இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க - அரசியலை உருவாக்க - பொருளியலை உருவாக்க - சமூகவியலை உருவாக்க - இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது. மொழிபெயர்ப்பு, மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது; காலத்தால் இடத்தால் மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது; கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் அது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது; பல மொழிகளிலும் காணப்படும் சிறப்புக் கூறுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து அனைவருக்கும் பொதுமையாக்குகிறது. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது. அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது; பிறமொழி இலக்கிய அறிவு கிடைக்கிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது. உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

 

மொழிவளர்ச்சி

நல்ல மொழிபெயர்ப்பாளன் சில மொழி மீறல்களைச் செய்வான். இதன்மூலம் புதிய இலக்கண விதிகளின் தேவையை உருவாக்குவான். செய்யுளையே தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது தமிழ், ஆங்கிலத் தொடரமைப்புகளையும் கூறுகளையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு இத்தகைய மொழிப் பிரச்சினைகளைக் கடந்து, அதன் தீர்வாக மொழியில் புதுக்கூறுகளை உருவாக்கி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

 

எதை மொழிபெயர்ப்பது?

எந்த மொழிபெயர்ப்பாக இருப்பினும் எதை மொழிபெயர்ப்பது என்ற முன்னுரிமை வேண்டும். ஒரு மொழியின் குப்பைகள் இன்னொரு மொழிக்குப் போய்விடக் கூடாது. பழைய நூல்களையே அறிமுகப்படுத்தும் போக்கை விட்டுப் புதுப்புது நூல்களையும் அறிமுகப்படுத்தும் நிலை வளர வேண்டும். ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் ஆப்பிரிக்க மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை குலோத்துங்கன்,

"காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

பேசி மகிழ் நிலை வேண்டும்"

என்று குறிப்பிடுகிறார்.

 

செய்ய வேண்டுவன

மொழிபெயர்ப்பு நிறுவனங்களை அமைப்பதும் மொழிபெயர்ப்பைக் கல்வி ஆக்குவதும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்குவதும் ஒரு மொழியின் சிறப்புக் கூறுகளுக்கு இணையான சமன்பாடுகளை உருவாக்குவதும் பட்டறைகள் நடத்துவதும் நூல் வெளியிடுவதும் செய்யப்பட வேண்டும். சாகித்திய அகாதெமி நிறுவனமும் தேசிய புத்தக நிறுவனமும் பல மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்துள்ளன. வெவ்வேறு படைப்புகள் மட்டுமன்றி, துறைசார்ந்த நூல் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழில் பல நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

என்று பாரதி கூறுவதைத் தமிழுலகம் செயல்படுத்த வேண்டும். அங்கிருந்து கொணர்ந்து சேர்ப்பதோடு அவர் கூறுவது போல, "தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்."

செப்புமொழிகள் பலவாக இருப்பினும் சிந்தனை ஒன்றுடையதாக உலகம் ஆக்கப்பட வேண்டும். இதற்கு மொழிபெயர்ப்புக் கல்வி இன்றியமையாதது...

 

எத்திசையும் புகழ் மணக்க.....

பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும்

பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள."

- தனிநாயக அடிகள்

 

கற்பவை கற்றபின்...

1. தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றையும் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் நூலகத்தில் படித்து எழுதி வருக.

2. மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றைப் படித்து அதன் கதைச்சுருக்கத்தையும் உங்கள் கருத்துகளையும் வகுப்பறையில் கூறுக.

 

Tags : Chapter 5 | 10th Tamil இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Prose: Mozhipeyarpu kalvi Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி - இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி