ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - ஒலி உருவாதல் | 8th Science : Chapter 6 : Sound

   Posted On :  28.07.2023 03:27 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

ஒலி உருவாதல்

ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் அதிர்வு எனப்படும்.

ஒலி உருவாதல்

ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் அதிர்வு எனப்படும். இந்த முன்னும் பின்னுமான இயக்கம் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களை அதிர்வுறச் செய்கின்றது. அதிர்வுகள் எந்தப் பொருளின் வழியே கடத்தப்படுகிறதோ அது ஊடகம் என அழைக்கப்படுகிறது. ஒலி ஒரு ஊடகம் வழியாக ஒலிமூலத்திலிருந்து கேட்பவருக்கு நகர்கிறது. ஒலியின் உருவாக்கத்தை சில செயல்பாடுகளின் உதவியுடன் நாம் புரிந்து கொள்ள முடியும்.


செயல்பாடு 1

ஒரு வெற்றுத் தீப்பெட்டியின் அட்டையை எடுத்து, அதைச் சுற்றி ஒரு நெகிழிப் பட்டையைக் கட்டவும். பின்னர், நீட்டப்பட்ட நெகிழிப் பட்டையை உங்கள் ஆள்காட்டி விரலால் இழுத்து விடவும். நீங்கள் என்ன  உணர்கிறீர்கள்? ஏதேனும் ஒலி கேட்கிறதா?


நெகிழிப் பட்டையை இழுத்து விடும்போது அது அதிர்வுறத் தொடங்கும். நெகிழிப் பட்டை அதிர்வுறும் வரை லேசான (ஹம்மிங்) ஒலியை நீங்கள் கேட்கலாம். நெகிழிப் பட்டை அதிர்வுறுவது நின்றவுடன் ஹம்மிங் ஒலி நின்றுவிடுகிறது. அதிர்வுறும் துகள்களால் ஒலி உருவாகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கித்தார் மற்றும் சித்தார் போன்ற இசைக் கருவிகளில் இந்த வகையான அதிர்வுகளை நீங்கள் உணரலாம்.

செயல்பாடு 2

ஒரு உள்ளீடற்ற உலோகப் பாத்திரத்தை எடுத்து, எதையும் தொடாத வகையில் வசதியான இடத்தில் அதைத் தொங்க விடவும். இப்போது, அதை ஒரு குச்சியால் தட்டவும். உங்கள் ஆள்காட்டி விரலால் மெதுவாக பாத்திரத்தைத் தொடவும். அதிர்வுகளை நீங்கள் உணர்கிறீர்களா? குச்சியால் மீண்டும் அதைத் தட்டி, உங்கள் கைகளால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் ஒலியைக் கேட்கிறீர்களா?


அதிர்வுறும் பாத்திரம் ஒலியை உருவாக்குகிறது என்பதை இந்தச் செயல்பாடு காட்டுகிறது. பாத்திரத்தைத் தொடுவதன் மூலம் அதிர்வுகளை நாம் உணர முடியும். ஆனால் சில வேளைகளில் அதிர்வுகளைக் காணவும் முடியும்.

செயல்பாடு 3

ஒரு உலோகத் தட்டை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். அதன் விளிம்பில் கரண்டியால் தட்டவும். ஏதேனும் ஒலி கேட்கிறதா? மீண்டும் தட்டைத் தட்டி அதைத் தொடவும். தட்டு அதிர்வுறுவதை நீங்கள் உணர முடிகிறதா? இப்பொழுது நீரின் மேற்பரப்பைப் பாருங்கள். நீரின் மேற்பரப்பில் ஏதேனும் அசைவைக் காண்கிறீர்களா? இப்போது, தட்டைக் கையில் பிடிக்கவும். நீரின் மேற்பரப்பில் என்ன மாற்றத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள்?


ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது அது ஒலியை உருவாக்குகிறது என்பதை மேற்கண்ட செயல்பாடுகள் காட்டுகின்றன. அதிர்வுறும் மூலம் உருவாகும் ஒலி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பரவுகிறது. அது நம் அடையும்போது நாம் ஒலியைக் கேட்கிறோம்.

Tags : Sound | Chapter 6 | 8th Science ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 6 : Sound : Production of Sound Sound | Chapter 6 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : ஒலி உருவாதல் - ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்