Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | வல்லரசுகளின் போட்டி

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - வல்லரசுகளின் போட்டி | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

வல்லரசுகளின் போட்டி

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பிய சக்திகள் உலகின் ஏனைய பெரிய, சிறிய நாடுகளைக் காலனியப்படுத்தி, தங்களின் நலனுக்காக அவற்றைச் சுரண்டின.

வல்லரசுகளின் போட்டி

ஐரோப்பா

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பிய சக்திகள் உலகின் ஏனைய பெரிய, சிறிய நாடுகளைக் காலனியப்படுத்தி, தங்களின் நலனுக்காக அவற்றைச் சுரண்டின. 1880 காலப்பகுதியில் பெரும்பாலான ஆசிய நாடுகள் காலனிமயமாக்கப் பட்டுவிட்டன. ஆப்பிரிக்கா மட்டுமே விடுபட்டிருந்தது. 1881-1914ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆப்பிரிக்காவும் கைப்பற்றப்பட்டு, பிரிக்கப்பட்டு, காலனிகளாக ஆக்கப்பட்டது. ஐரோப்பாவில் 1870ஆம் ஆண்டிற்குப் பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் காலனியாதிக்கப் போட்டியில் கலந்துகொண்டன.

வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள்

தொழில் வளர்ச்சியில் முதன்மை இடத்தை வகித்தாலும் பரந்துவிரிந்த பேரரசைக் கட்டுப்படுத்தினாலும் இங்கிலாந்திற்கு மனநிறைவு ஏற்படவில்லை. இங்கிலாந்து ஜெர்மனியோடும் அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது. ஏனெனில் அந்நாடுகள் விலைமலிவானப் பண்டங்களை உற்பத்தி செய்து அதன்மூலம் இங்கிலாந்தின் சந்தையையும் கைப்பற்றின. நாடுகளுக்கிடையிலான இப்போட்டி, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வல்லரசுகளுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படக் காரணமாயிற்று.

ஆசியா: ஜப்பானின் எழுச்சி

ஆசியாவில், ஜப்பான் இக்காலப்பகுதியில் (மெய்ஜி சகாப்தம் 1867-1912), மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றிப் பலதுறைகளில் அவற்றுக்கு நிகராக மாறியது. ஜப்பான் தொழில் துறையில் சிறந்த நாடாகவும் அதேசமயத்தில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாகவும் ஆகியது. ஆட்சியாளர்கள் நிலமானியமுறை சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் ஜப்பான் மேலைநாட்டுக்க ல்வியையும் இயந்திரத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டது. நவீன இராணுவம், கப்பற்படை ஆகியவற்றுடன் தொழில் துறையில் முன்னேறிய நாடாக ஜப்பான் மேலெழுந்தது. 1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது. இச்சீன-ஜப்பானியப் போரில் (1894-1895) சீனாவைச் சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது. தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக்கொண்டது. இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்ப்பித்தது.

ஐரோப்பிய அரசுகள் கொடுத்த அதிகமான அழுத்தத்தின் காரணமாக ஜப்பான் ஆர்தர் துறைமுகத்தின் மீதான தனது கோரிக்கையை விட்டுக்கொடுத்தது. இச்சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ரஷ்யா பெரும்படையொன்றை மஞ்சூரியாவுக்குள் அனுப்பியது. 1902இல் இங்கிலாந்துடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்ட ஜப்பான், ரஷ்யா தனது படைகளை மஞ்சூரியாவிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ளக் கோரியது. ரஷ்யா ஜப்பானைக் குறைத்து மதிப்பிட்டது. இரு நாடுகளுக்குமிடையே 1904இல் போர் தொடங்கியது. இந்த ரஷ்ய ஜப்பானியப் போரில் ரஷ்யாவைத் தோற்கடித்த ஜப்பான், அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆர்தர் துறைமுகத்தை மீண்டும் பெற்றது. இப்போருக்குப் பின் ஜப்பான் வல்லரசுகளின் கூட்டணியில் நுழைந்தது.

ஜப்பானின் முரட்டு அரச தந்திரமும் விவேகமும்

1905க்குப் பின்வந்த ஆண்டுகளில் கொரியாவின் உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை ஜப்பான் கட்டுப்படுத்தியது. ஜப்பானியத் தூதரக உயர் அதிகாரி கொல்லப்பட்டதைக் காரணமாகக் கொண்டு 1910இல் கொரியாவை ஜப்பான் இணைத்துக்கொண்டது. 1912இல் மஞ்சு அரசவம்சம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து சீனாவில் நிலவிய குழப்பம் மறுபடியும் விரிவாக்கத்திற்கான வாய்ப்பை ஜப்பானுக்கு அளித்தது. சீனாவில் ஷான்டுங் பகுதியின் மீது ஜெர்மனி கொண்டிருக்கும் உரிமைகள் தனக்கு மாற்றி வழங்கப்படவேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்தது. இவ்வலிய அரசியல் விவேகம் ஜப்பான் சீனாவோடும் ஐரோப்பிய நாடுகளோடும் பகையை மூட்டிவிட்டது. ஆனால் ஜப்பானை எதிர்க்கும் நிலையில் யாரும் இல்லை.

காலனிகள் அமைக்கப்படுதலும், அதன் விளைவுகளும்

1876இல் ஆப்பிரிக்காவின் பத்து சதவீதப் பகுதிகள் மட்டுமே ஐரோப்பாவின் ஆட்சியின் கீழிருந்தன. 1900இல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் காலனியாக ஆக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் கண்டத்தை தங்களுக்குள்ளே பகிர்ந்துகொண்டன. ஒரு சில இடங்கள் ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் விட்டுத்தரப்பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகியன சீனாவில் தங்களுக்கென 'செல்வாக்கு மண்ட லங்களை’ (Spheres of influence) நிறுவின. ஜப்பான் கொரியாவையும் தைவானையும் தன்வசப்படுத்திக் கொண்டது. இந்தோ-சீனாவை பிரான்ஸ் கைப்பற்றிக்கொண்டது. ஸ்பெயினிடமிருந்து பிலிப்பைன்ஸை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. இங்கிலாந்தும் ரஷ்யாவும் ஈரானைப் பிரித்துக்கொள்ளச் சம்மதித்தன.


ஆப்பிரிக்காவில் காலனிகளை நிறுவ ஐரோப்பியர் மேற்கொண்ட தொடக்ககால முயற்சிகள் ரத்தக் களரியான போர்களில் முடிந்தன. அல்ஜீரியாவையும் செனகலையும் கைப்பற்ற பிரான்ஸ் ஒரு நெடிய, கடுமையான போரைச் செய்யவேண்டியதாயிற்று. இங்கிலாந்து 1879இல் ஜூலுக்களாலும் 1884இல் சூடான் படைகளாலும் தோற்கடிக்கப்பட்டது. இத்தாலியப்படை 1896ஆம் ஆண்டு அடோவா போர்க்களத்தில் எத்தியோப்பியப் படைகளிடம் பெருத்த சேதத்துடன் கூடிய தோல்வியைச் சந்தித்து இருந்தபோதிலும் ஐரோப்பியப் படைகளே இறுதியில் வெற்றி பெற்றன.



Tags : Outbreak of World War I and Its Aftermath | History முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Rivalry of Great Powers Outbreak of World War I and Its Aftermath | History in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : வல்லரசுகளின் போட்டி - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்