மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - எலும்பு மண்டலம் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
எலும்பு மண்டலம்
❖ எலும்பு மண்டலமானது எலும்புகள்,
குருத்தெலும்புகள், மற்றும் மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
❖ தசைகள் இணைக்கப்படுவதற்கு
ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
❖ நடத்தல், ஓடுதல், மெல்லுதல்,
போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது. சில குருத்தெலும்புகள்,
இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவைற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது. இணைப்பு
இழைகள் எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன. தசைநார்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றன.
எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அவை அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்.
அச்சுச்சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது.
அவை
❖ மண்டையோடு
❖ முதுகெலும்புத் தொடர்
(முதுகெலும்பு)
❖ விலா எலும்புக் கூடு
இணையுறுப்புச் சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள்,
கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
செயல்பாடு 1: அமைதியாக அமர்ந்து உங்களின்
உடல் அசைவுகளை கவனிக்கவும். உங்களது இமைகளை நொடிக்கு, நொடி இமைத்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் சுவாசத்தின் போது நிகழும் உடல் அசைவுகளைக் கவனியுங்கள் அந்த அசைவுகளை உங்கள்
குறிப்பேட்டில் எழுதுங்கள். நம் உடலில் உள்ள சில பகுதிகள் எளிதில் அசையும் திறன் கொண்டவை,
சில உறுப்புகள் பல திசைகளில் அசையும் தன்மை கொண்டவை. சில உறுப்புகள் ஒரே ஒரு திசையில்
மட்டும் அசையக்கூடியவை. சில உறுப்புக்களை எல்லாத் திசைகளிலும் அசைக்க முடியாது. அது
ஏன்?
மண்டையோடு
மண்டை ஓட்டில் மண்டை ஓட்டு எலும்புகள் மற்றும் முக எலும்புகள்
உள்ளன. இவை மூளை மற்றும் முகத்தின் உள்ளமைப்பைப் பாதுகாக்கின்றன. வாய்க்குழியின் அடித்தளத்தில்
காணப்படும் ஹயாய்டு எலும்பு மற்றும் செவிச் சிற்றெலும்புகளான சுத்தி எலும்பு, பட்டடை
எலும்பு, அங்கவடி எலும்புகளும் மண்டையோட்டில் அடங்கும். மனிதர்களின் முகத்திலேயே கீழ்த்தாடை
எலும்பு தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.
முதுகெலும்புத் தொடர்
முதுகெலும்புத் தொடர் மண்டையோட்டின் அடிப்புறத்தில் இருந்து
தொடங்குகிறது. இது தண்டுவடத்தைப் பாதுகாக்கின்றது. இது சிறிய முள்ளெலும்புத் தொடர்களால்
உருவாக்கப்பட்டுள்ளது.
விலா எலும்புக் கூடு
விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த, தட்டையான விலா
எலும்புகளைக் கொண்டுள்ளது. அவை மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல்
உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.
கை - கால் எலும்புகள்
மனிதனின் கை - கால் எலும்புகள் இரண்டு இணைகளைக் கொண்டவை, அவை
முன்னங்கை மற்றும் பின்னங்கால் எனப்படும். முன்னங்கை எலும்புகள் பிடித்தல், எழுதுதல்
போன்ற செயல்களுக்கும், பின்னங்கால் எலும்புகள் நடப்பது, அமர்வது போன்ற செயல்களுக்கும்
உதவுகின்றன.
எலும்பு வளையம்
அச்சுச்சட்டகத்துடன் முன்னங்கைகளையும், பின்னங்கால்களையும் இணைப்பதற்கு
முறையே மார்பு வளையம் மற்றும் இடுப்பு வளையமும் உதவுகின்றது.
செயல்பாடு 2: நமது உடலில் எலும்புகள்
இணையும் இடத்திலேயே அசைவுகள் ஏற்படுகிறது என்பதைக் காண்பித்தல்
தேவையான உபகரணங்கள் : மர அளவு கோல் மற்றும் நூல்
செயல்முறை : ஒரு மர அளவுகோலை எடுத்து
உங்களுடைய மேற்கையினையும், முன்னங்கையினையும் சேர்த்துக் கட்டும்படி உங்கள் நண்பரிடம்
கூறுங்கள். (படத்தில் காட்டியபடி) மர அளவுகோல் உங்களின் முன்னங்கையின் மத்தியில் இருக்கட்டும்.
இப்பொழுது நீங்கள் எவ்வளவு முறை முயன்றாலும் உங்களால் உங்களுடைய முழங்கையினை மடக்க
இயலாது.
முடிவு : ஒரு தனி எலும்பு வளையாது, பல்வேறு எலும்புகள் முழங்கையில்
இணைந்து கையை மடக்க உதவுகின்றன.
1.
நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியதுநமது உள்காதில் உள்ள அங்கவடி
(stapes) எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்).
நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
2.
குழந்தைகள் பிறக்கும் பொழுது 300க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள்
வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த
மனிதனின் எலும்புக் கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.