Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | நினைவில் கொள்க, கருத்து வரைபடம்

குறைகடத்தி எலக்ட்ரானியல் | இயற்பியல் - நினைவில் கொள்க, கருத்து வரைபடம் | 12th Physics : UNIT 10a : Semiconductor Electronics

   Posted On :  29.09.2023 07:14 am

12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்

நினைவில் கொள்க, கருத்து வரைபடம்

இயற்பியல் : குறைகடத்தி எலக்ட்ரானியல் : நினைவில் கொள்க, கருத்து வரைபடம்

பாடச்சுருக்கம்

* திண்மங்களில் உள்ள ஆற்றல் பட்டைகள் மூலம் அவை கடத்திகள், காப்பான்கள் மற்றும் குறைகடத்திகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

* N வகை குறைகடத்தியில் எலக்ட்ரான்கள் பெரும்பான்மை ஊர்திகளாகவும் துளைகள் சிறுபான்மை ஊர்திகளாகவும் உள்ளன.

* P வகை குறை கடத்தியில் துளைகள் பெரும்பான்மை ஊர்திகளாகவும், எலக்ட்ரான்கள் சிறுபான்மை ஊர்திகளாகவும் உள்ளன.

* சார்புப்படுத்தப்படாத PN சந்தியில் இயக்கமில்லாப் பகுதி உருவாகின்றது. இங்கு மின்னூட்ட ஊர்திகள் இடம் பெறாது. அதனால், அங்கு இயக்கமில்லா அயனிகள் இருக்கும்.

* PN சந்தி டையோடு முன்னோக்குச் சார்பில் இருக்கும்போது, இயக்கமில்லாப் பகுதி குறைந்து, மின்னழுத்த அரணைவிடச் சார்பு மின்னழுத்தம் அதிகரிக்கும்போது டையோடு மின்னோட்டத்தைக் கடத்தும். அது ஒரு மூடிய சாவியாக செயல்படும்.

* PN சந்தி டையோடு பின்னோக்குச் சார்பில் இருக்கும் போது திறந்த சாவியாகச் செயல்பட்டு மின்னோட்டத்தைக் கடத்தாது. இயக்கமில்லாப் பகுதி அதிகரிக்கும்.

* முன்னோக்குச் சார்பில் உள்ள PN சந்தி டையோடு அலை திருத்தியாகச் செயல்படும். திருத்துதல் என்பது AC மின்னோட்டத்தை DC மின்னோட்டமாக மாற்றும் செயல்முறை ஆகும்.

* அரை அலை திருத்தி உள்ளீடு சைகையின் அரை அலையை மட்டும் திருத்தித் துடிக்கும் வெளியீட்டை உருவாக்கும்.

* முழு அலைதிருத்தியின் பயனுறுதிறன் அரை அலை திருத்தியின் பயனுறுதிறனைவிட இரு மடங்கு ஆகும்.

* பின்னோக்கு மின்னழுத்தத்தை அதிகரிக்கும்போது இரண்டு நிகழ்வுகளின் காரணமாக முறிவு ஏற்படுகிறது. அவை செனார் மற்றும் சரிவு முறிவுகள் ஆகும்.

* மிக வலிமையான மின்புலம் செலுத்தப்படும் போது, செனார் முறிவானது அதிக அளவு மாசூட்டப்பட்ட PN சந்தி டையோடில் நடைபெறுகிறது.

* சரிவு முறிவானது குறைவாக மாசூட்டப்பட்டு மிக அகலமான இயக்கமில்லாப் பகுதியில் நடைபெறுகிறது. வெப்பத்தினால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை ஊர்திகளால் சகப்பிணைப்பு முறிக்கப்படும் போது இது நடைபெறுகிறது.

* செனார் டையோடு என்பது, மிக அதிகமாக மாசூட்டப்பட்டுப் பின்னோக்குச் சார்பில் செயல்படும் pn சந்தி டையோடு ஆகும்.

* ஒளி உமிழ்வு டையோடு என்பது கட்புலனாகும் அல்லது கட்புலனாகாத ஒளியை உமிழும் முன்னோக்குச் சார்பில் அமைந்த குறைகடத்தி சாதனமாகும் பெரும்பான்மை ஊர்திகள் தங்களது பகுதிக்கு நுழையும் சிறுபான்மை ஊர்திகளுடன் மறு இணைப்பு மேற்கொள்வதால் ஆற்றலானது போட்டான் வடிவில் உமிழப்படும்.

* ஒளி நுண்ணுணர்வு கொண்ட பொருளால் செய்யப்பட்டு ஒளி சைகைகளை மின் சைகைகளாக மாற்றும் PN சந்தி டையோடு ஒளி டையோடு எனப்படும்.

* போதுமான ஆற்றல் கொண்ட போட்டான் டையோடுமீது படும்போது, எலக்ட்ரான் துளை சோடியை உருவாக்கும். இந்த எலக்ட்ரான்களும் துளைகளும் மறு இணைப்பு அடைவதற்கு முன்பே, பின்னோக்குச் சார்பினால் ஏற்படுத்தப்பட்ட மின் புலத்தினால் சந்திக்குக் குறுக்கே நகர்த்தப்பட்டு, அதனால் ஒளி மின்னோட்டம் உற்பத்தி செய்யப்படுகிறது.

* சூரிய மின்கலன் என்பது, ஒளி ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்றும் சாதனம். இது ஒளி வோல்டா விளைவின் அடிப்படையில் செயல்படும்.

* இருமுனை சந்தி டிரான்சிஸ்டர் (BJT) என்பது, இருவகைப்பட்ட குறைகடத்தி சாதனமாகும். அவை PNP மற்றும் NPN ஆகும்.

* BJT என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை உமிழ்ப்பான், அடிவாய் மற்றும் ஏற்பான் ஆகும்.

* டிரான்சிஸ்டரைச் செயல்படும் பகுதியில் அமைக்க உமிழ்ப்பான் அடிவாய் சந்தி முன்னோக்குச் சார்பிலும் ஏற்பான் அடிவாய் சந்தி பின்னோக்குச் சார்பிலும் இருக்க வேண்டும்.

* ஒரு BJT-க்கு மூன்று நிலை அமைப்புகள் உள்ளன. அவை பொது அடிவாய், பொது உமிழ்ப்பான் மற்றும் பொது ஏற்பான் ஆகும்

* பொது அடிவாய் நிலை அமைப்பில், மின்னோட்டப் பெருக்கம் a என்பது ஏற்பான் மின்னோட்டம் மற்றும் உமிழ்ப்பான் மின்னோட்டத்தின் தகவு ஆகும்.

* பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பில் மின்னோட்ட பெருக்கம் β என்பது ஏற்பான் மின்னோட்டம் மற்றும் அடிவாய் மின்னோட்டம் ஆகியவற்றின் தகவு ஆகும்.

* பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பிலுள்ள டிரான்சிஸ்டரானது சாவியாக செயல்படும். பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பிலுள்ள டிரான்சிஸ்டரானது, பெருக்கியாகச் செயல்படும். மேலும், பெருக்கப்பட்ட வெளியீட்டுச் சைகைக்கும், உள்ளீடு சைகைக்கும் இடையே 1800 கட்ட வேறுபாடு ஏற்படும்.

* ஒரு தொட்டிச் சுற்று மற்றும் நேர் பின்னூட்டம் இணைந்த ஒரு டிரான்சிஸ்டர் பெருக்கி அலை இயற்றியாகச் செயல்படும்.

* லாஜிக் கேட் என்பது இலக்க முறை சைகைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு எலக்ட்ரானியல் சுற்று ஆகும்.

* அடிப்படை லாஜிக் கேட்டுகள். AND, OR மற்றும் NOT கேட்டுகள் ஆகும்.

* பூலியன் இயற்கணிதத்தின் முக்கியத்துவம் கணினி சுற்றுக்களை வடிவமைப்பதில் உணரப்பட்டது.

* டீ மார்கனின் முதல் தேற்றத்தின்படி, இரு லாஜிக் உள்ளீடுகளின் கூடுதலின் நிரப்பியானது அவற்றின் நிரப்பிகளின் பெருக்கல் பலனுக்கு சமமாகும்.

* டீ மார்கனின் இரண்டாவது தேற்றத்தின்படி, இரு உள்ளீடுகளின் பெருக்கல் பலனின் நிரப்பியானது அதன் நிரப்பிகளின் கூடுதலுக்கு சமமாகும்.



Tags : Semiconductor Electronics | Physics குறைகடத்தி எலக்ட்ரானியல் | இயற்பியல்.
12th Physics : UNIT 10a : Semiconductor Electronics : Summary, Concept Map Semiconductor Electronics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல் : நினைவில் கொள்க, கருத்து வரைபடம் - குறைகடத்தி எலக்ட்ரானியல் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 10a : குறைகடத்தி எலக்ட்ரானியல்