Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | பொதுவுடைமைவாதம் (Communism) : விளாடிமர் லெனின்

அரசியல் கொள்கைகள் - பொதுவுடைமைவாதம் (Communism) : விளாடிமர் லெனின் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I

   Posted On :  03.10.2023 10:20 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I

பொதுவுடைமைவாதம் (Communism) : விளாடிமர் லெனின்

புரட்சிகர சிந்தனையாளராகிய லெனின், 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை நடத்தினார். இது பொதுவுடைமைவாத புரட்சி ஆகும்.

பொதுவுடைமைவாதம் (Communism)

விளாடிமர் லெனின்


புரட்சிகர சிந்தனையாளராகிய லெனின், 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை நடத்தினார். இது பொதுவுடைமைவாத புரட்சி ஆகும். லெனின் USSR என்ற 15 குடியரசுகளைக் கொண்ட சோவியத் சோசியலிஸ்ட் குடியரசுகள் யூனியன் ("Union of Soviet Socialist Republics") என்ற நாட்டையும் உருவாக்கினார்


பொதுவுடைமைவாத கட்சி

பொதுவுடைமைவாத கட்சிக் கோட்பாட்டை லெனின் உருவாக்கினார். "செய்ய வேண்டியது என்ன?" (What is to be done?) என்ற தனது நூலில் பொதுவுடைமைவாதக் கட்சியைப் பற்றி விளக்கினார். பொதுவுடைமைவாதக் கட்சி பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கருவியாக செயல்படும்.

கட்சியின் கிளைகள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உருவாக வேண்டும். கட்சியின் உறுப்பினர்கள் புரட்சிகர மார்க்சியத்தைப் புரிந்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் கடமை, தியாகம், கட்டுப்பாடு, கடின உழைப்பு ஆகிய குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் புரட்சிக்காக மக்களைத் தயார்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னணியில் பொதுவுடைமைவாதக் கட்சி செயல்படும்.

உங்களுக்குத் தெரியுமா?


விளாடிமர் லெனின் 1924-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய உடல் இரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்றுவரை பதனிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பூத உடல் இரசாயனப் பொருள்கள் மூலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், உடல் பாதுகாப்புக்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 1991-ஆம் ஆண்டு லெனின் உருவாக்கிய நாடான USSR உடைந்த பிறகு பொதுமக்களின் நன்கொடையால் உடல் பாதுகாக்கப்படுகிறது. அவருடைய பூத உடலை, அவருடைய அன்னையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று சிலர் கோருகின்றனர்.

அமைப்பு ரீதியாக ஒரு புதிய கோட்பாட்டை பொதுவுடைமைவாத கட்சிக்கு லெனின் வழங்குகிறார். இதற்கு மக்களாட்சி மத்தியத்துவம் என்பது பெயராகும். பொதுவுடைமைவாத கட்சிக்கு இரண்டு அமைப்பு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று, மக்களாட்சி, இரண்டாவது மத்தியில் அதிகார குவிப்பு. பொதுவுடைமைவாத கட்சியின் கீழ்நிலையில் உள்ள கிளைகள் தங்களுக்கு மேல் நிலையில் உள்ள கட்சிக் கிளைகளை மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமப்புற கிளைகள் பொதுவுடைமைவாத கட்சியின் மாவட்டக் கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டக் கிளைகள் மாநிலக் கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவுடைமைவாத கட்சியின் மாநில கிளைகள் மத்தியக் கிளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியக் கிளை பாலிட்பியுரோவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாலிட்பியுரோட் பொது செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே மக்களாட்சி கோட்பாடாகும்.

அதிகார குவியல் அதாவது அதிகார மத்தியத்துவம் பொதுவுடைமைவாத கட்சியில் காணப்படுகிறது. மேல்நிலையில் உள்ள கட்சி கிளைகள் சொல்வதை கீழ்நிலையில் உள்ள கட்சி கிளைகள் கண்டிப்பாக கேட்க வேண்டும். கட்சியின் மத்திய கிளையின் முடிவுகளை மாநிலக் கிளைகள் கேட்க வேண்டும். மாநிலக் கிளையின் முடிவுகளை மாவட்டக் கிளைகள் கேட்க வேண்டும். மாவட்டக் கிளையின் முடிவுகளை கிராமக் கிளைகள் கேட்க வேண்டும். இதுதான் மத்தியத்துவம் அல்லது மக்களாட்சி மத்தியத்துவக் கோட்பாட்டின்படி, பொதுவுடைமைவாத கட்சியில் கீழ் கிளைகளில் இருந்து மேல் கிளைகளுக்கு மக்களாட்சியும், மேல் கிளைகளில் இருந்து கீழ் கிளைகளுக்கு அதிகாரக் குவியலும் அமைப்பு ரீதியாக காணப்படுகிறது.



ஏகாதிபத்தியம்

ஐரோப்பிய நாடுகள், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை இராணுவ பலம் மூலம் அடிமையாக்கி சுரண்டிய முறையே ஏகாதிபத்தியம் ஆகும். லெனின், "ஏகாதிபத்தியம்; "முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்" (Imperialism: The Highest Stage of Captalism) என்ற தனது நூலில் ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் உள்ள தொடர்பை விவரிக்கின்றார். முதலாளித்துவம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்று காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு காரணம் ஏகாதிபத்தியம் ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் மூலமாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அவைகளின் செல்வங்களைக் கொள்ளை அடித்து தங்கள் நாடுகளுக்கு முதலாளித்துவம் எடுத்துச் சென்றது. கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை தங்கள் நாட்டின் தொழிலாளிகளுக்கு முதலாளித்துவம் வழங்கியது. இவ்வாறு தான் முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. உலகில் இரண்டு வகை புரட்சிகள் நடைபெற வேண்டும். முதலாவதாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். இரண்டாவதாக மேற்கத்திய நாடுகளில் உள்ள தொழிலாளிகள் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். இந்த இரண்டு புரட்சிகள் மூலமாக ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் அழிக்கப்படும். சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் சர்வதேச அளவிலும் மேலைநாடுகளிலும் பொதுவுடைமைவாத சமுதாயம் மலரும் என்று லெனின் கூறினார்.


ஜோசப் ஸ்டாலின்


"உருவத்தில் தேசியவாதம் அமைப்பில் சமதர்மவாதம்" - ஜோசப் ஸ்டாலின்

லெனினுடைய காலத்திற்கு பின் 1953 வரை சோவியத் ரஷ்யாவின் தலைவராகவும் பொதுவுடைமைவாத கட்சியின் பொது செயலாளராகவும் ஜோசப் ஸ்டாலின் இருந்தார். "ஒரு நாட்டில் சமதர்மவாதம்" என்ற புதிய கருத்தை மார்க்சியத்தில் உருவாக்கினார். பொதுவுடைமைவாத கோட்பாட்டாளரான நிகோலை புக்காரின் இக்கருத்தை முதலில் தோற்றுவித்தார்.

மார்க்சியம் தேசியவாதத்தை நிராகரித்தது, சர்வதேசவாதத்தை ஆதரித்தது. காரல் மார்க்ஸ் தேசியவாதத்தை முதலாளிகளின் கருத்து என்று விவரித்தார். பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலமாக உலக சமுதாயத்தை உருவாக்குவது காரல் மார்க்சின் அடிப்படை நோக்கமாகும். தொழிலாளிகளுக்கு சொந்த நாடு இல்லை" என்று கூறினார். லெனின் அவர்களும் இக்கருத்தை ஆதரித்தார். ரஷ்யாவின் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி உலகப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று லெனின் கூறினார்.

ஆனால் ஒரு நாட்டில் சமதர்மவாதம் என்ற கருத்தின் மூலம் ஸ்டாலின் பெரிய மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றார். "ஐரோப்பிய ஐக்கிய நாடுகளுக்கான முழக்கம்" என்ற உரையின் மூலம் லெனினே இக்கருத்தை வலியுறுத்தினார் என்று ஸ்டாலின் கூறினார். ரஷ்யாவில் மட்டுமே சமதர்மவாதம் இருந்தால் தற்பொழுது போதும், உலக நாடுகளுக்கு சமதர்ம புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை என்பது தான் இக்கோட்பாட்டின் அடிப்படை கருத்தாகும். சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாதம் முதலாளித்துவ எதிரிகளால் சூழப்பட்டு இருக்கிறது. சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாதத்தை தற்பொழுது காப்பாற்றுவது தான் முக்கிய கடமையாகும் என்று ஸ்டாலின் கூறினார். சோவியத் ரஷ்யாவும் சர்வதேச பொதுவுடைமைவாத நிறுவனமும் ஸ்டாலினின் கொள்கையை ஏற்றுக்கொண்டன.

லியோன் ட்ராட்ஸ்கி ஸ்டாலினின் சமதர்மத்தை நிராகரித்தார். நிரந்தர உலகப் புரட்சி, காரல் மார்க்ஸ் கூறியதை போல வேண்டும் என்றார். சோவியத் ரஷ்யா தனது பொதுவுடைமைவாதத்தை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலேயே பொதுவுடைமைவாதம் மறைந்து விடும் என்று ட்ராட்ஸ்கி எச்சரித்தார்.


மாவோ

பொதுவுடைமைவாதத்தின் மிகப்பெரிய கொள்கைவாதிகளில் ஒருவராக மாவோ உள்ளார். அவர் சீன பொதுவுடைமைவாதக் கட்சியைத் தோற்றுவித்து 1949-ஆம் ஆண்டு பொதுவுடைமைவாத புரட்சியை நிகழ்த்தினார்.


எல்லா அரசியல் அதிகாரமும் துப்பாக்கியின் பீப்பாயில்  இருந்து வருகிறது மாவோ


பொதுவுடைமைவாதம் சீனமயமாதல்

பொதுவுடைமைவாத கொள்கையில் சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை மாவோ கொண்டு வந்தார். இதற்கு பொதுவுடைமைவாத சீனமயமாதல் என்பது பெயராகும்


விவசாயிகள் தலைமையில் புரட்சி

காரல் மார்க்ஸ் தொழிற்சாலைகள் நிறைந்த, தொழிலாளர்கள் நிறைந்த, மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் பொதுவுடைமைப் புரட்சிக்கு சாத்தியம் இருந்ததாகக் கூறினார். புரட்சியை தொழிலாளர்கள் தான் நடத்துவார்கள் என நம்பினார். ஆனால் 1940 களில் சீனா ஒரு பின்தங்கிய விவசாய நாடு ஆகும். தொழிற்சாலைகளோ, தொழிலாளிகளோ அதிகம் இல்லை. மாவோ விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பொதுவுடைமைவாதப் புரட்சியை நடத்தினார். சீனாவில் மாவோவின் வெற்றி விவசாய நாடுகளான ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு ஊக்கத்தை வழங்கியது


மக்கள் முன்னணி

லெனின், பொதுவுடைமைவாத கட்சியின் முன்னணியில் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார். மாவோ புரட்சியின் முன்னணியில் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். பொதுவுடைமைவாத கட்சியின் கொள்கையிலும், போராட்டத்திலும் மக்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள். "மக்களிடம் இருந்து மக்களுக்காக" என்பது மாவோவின் பொதுவுடைமைவாத கட்சியின் வழிகாட்டுக் கோட்பாடாக இருந்தது


மக்கள் போர், கொரில்லா போர்

சுரண்டலுக்கு எதிரான பொதுவுடைமைப் புரட்சியில், மக்களுக்கு முக்கியத்துவத்தை மாவோ வலியுறுத்துகிறார். பல கோடிகணக்கான மக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்த மாவோ வாதிட்டார். ஏகாதிபத்தியமும், நிலப்பிரபுக்கள் முறையும் மக்களின் எதிரிகள் என்று கூறினார். கிராமப்புற விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரங்களை கைப்பற்ற வேண்டும் என்பது மாவோவின் உத்தி ஆகும்.

மாவோ கொரில்லா போர் முறையைப் பின்பற்றினார். இந்த உத்தியில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் நிலையில், பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள். இரண்டாம் நிலையில், பொதுவுடைமைவாத கட்சியினர் இராணுவ மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். மூன்றாம் கட்டத்தில், ஒரு வழக்கமான இராணுவமாக மாறி பொதுவுடைமைவாத கட்சி கிராமங்களையும், நகரங்களையும் வெற்றிகொள்ளும். தேவைக்குத் தகுந்தவாறு இந்த மூன்று நிலைகளை பொதுவுடைமைவாத கட்சி பின்பற்றலாம்


நூறு மலர்கள் மலரட்டும்

1950-களில் நூறு மலர்கள் மலரட்டும் இயக்கம் சீனாவில் நடைபெற்றது. "நூறு மலர்கள் மலரட்டும், நூறு வகையான சிந்தனைகள் போட்டியிடட்டும்" என்று மாவோ கூறினார்

கருத்துச்சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. நல்ல புதிய கருத்துகள், பழைய, தேவையற்ற கருத்துக்களைத் தோற்கடிக்கும் என மாவோ கூறினார். தொடக்கத்தில் பொதுவுடைமைவாத அரசாங்கம் இந்த இயக்கத்தை நடத்தியது. பின்னர், பொதுவுடைமைவாத கட்சிக்கு எதிராக கருத்துக்கள் தோன்றியதால் இந்த இயக்கம் கைவிடப்பட்டது.



கலாச்சாரப் புரட்சி

உங்களுக்குத் தெரியுமா?

கலாச்சாரப் புரட்சி


1960 களில் மாவோ தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக புதிய புரட்சிகர இயக்கத்தைத் தொடங்கினார். மாணவர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள் ஆகியோரைக் கொண்டு சிவப்பு காவலர்களை உருவாக்கினார்.

மாவோ பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியை 1965-66ஆம் ஆண்டு அமல்படுத்தினார். பழைய கருத்துக்கள், பழைய பழக்கங்கள், பழைய கலாச்சாரம், பழைய வழக்கங்கள் ஆகிய "நான்கு 'பழையவைகள்' நீக்கத்திற்காக இப்புரட்சியைக் கொண்டு வந்தார். பொதுவுடைமைவாத கட்சி அரசாங்கம், இராணுவம், கலாச்சாரத்தில் தேவையில்லா கருத்துகள் புகுந்துவிட்டன. அவைகளை அகற்றி பொதுவுடைமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். தொழில்மயம் ஆக்குவதையும், நிலம் மற்றும் தொழில் கூட்டுவாதத்தையும் அமல் படுத்தி விரைவாக சீனாவை சமதர்ம அமைப்பாக மாற்ற மாவோ முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது நடவடிக்கைகள் கொடிய பஞ்சத்தைக் கொண்டுவந்தது. பொதுவுடைமைவாத அரசைக் காப்பாற்ற, பொதுவுடைமையின் எதிரிகளை வீழ்த்துவதற்கு சிவப்பு காவலர்கள் உருவாக்கப்பட்டனர்


புதிய மக்கள் ஆட்சி

மாவோ புதிய மக்களாட்சி என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். அரசு ஏழைகளைச் சுரண்டும் பணக்காரர்களின் ஆயுதம் என்ற மார்க்ஸிய கருத்தை மாவோ சிறிது மாற்றியமைத்தார். விவசாயிகள், தொழிலாளிகள், சிறிய முதலாளிகள், தேசிய முதலாளிகள் என்ற நான்கு வர்க்கங்களுக்காக புதிய மக்களாட்சியை உருவாக்கினார். புதிய மக்களாட்சிக்கு மக்கள் மக்களாட்சி சர்வாதிகாரம் என்ற பெயரையும் அவர் சூட்டினார், இம்முறையில் தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிறிய முதலாளிகளும், பெரிய முதலாளிகளும் அரசின் இளைய பங்குதாரர்களாகக் கருதப்பட்டனர். இந்த நான்கு வகை வர்க்கங்களுக்கும் அரசு மக்களாட்சியாக செயல்பட்டது. மற்ற வர்க்கங்கள் அரசின் எதிரிகளாகக் கருதப்பட்டனர். அவர்களை 'ஏகாதிபத்தியத்தை இயக்கும் நாய்கள்' என்று மாவோ கடுமையாக வர்ணித்தார்.


'பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமல்ல, அது எலியை பிடித்தால் போதும்'. - டெங் ஜியாபெங்

இருபத்தியோராவது நூற்றாண்டில் கூட மாவோயிசம் பல மாற்றங்களுடன் சீனாவில் பின்பற்றப்படுகிறது. சீனாவின் தேசிய தலைவரான டெங் ஜியாபெங் 1978 ஆம் ஆண்டிற்கு பிறகு சீனப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். தாராளமயமாதல் சீனப் பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும் அரசியலில் சீனப் பொதுவுடைமைவாதக் கட்சி எல்லையற்ற ஆதிக்கத்தைத் தொடர்ந்து பெற்றிருக்கிறது


ஆண்டனியோ கிராம்சி

இத்தாலிய மார்க்சியவாதியான கிராம்சி மேலாதிக்கம் என்ற புதுக்கருத்து மூலம் முதலாளித்துவ அரசின் செயல்பாடுகளை விவரித்தார். மேலாதிக்கம் என்றால் அறிவுசார், தார்மீக தலைமை என்பது பொருளாகும். அரசு மக்களுடைய ஆதரவை தனக்குச் சாதகமாக அறிவுசார் தார்மீக தலைமையின் மூலம் உருவாக்குகின்றது. பிரச்சாரத்தின் மூலம் தனக்கு ஆதரவாகப் பொய் எழுச்சி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.

அரசின் எண்ணங்கள், நோக்கங்கள் மக்களின் மனதில் திரும்பத்திரும்ப பதியப்படுகின்றன. மக்களின் மனதை மயக்க முடியாத போதுதான வன்முறையை அரசு பயன்படுத்துகிறது. முதலாளித்துவ அரசை வீழ்த்துவதற்கு உயிரோட்டமான அறிவு ஜீவிகளும் பொதுவுடைமைவாத கட்சியும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அறிவு ஜீவிகள் அரசைப்பற்றி யோசித்து எவ்வாறு அதை தோற்கடிப்பது என்று கூறுவார்கள். பொதுவுடைமைவாத கட்சி அதன் பின் புரட்சியை நடத்தி பொதுவுடைமையை நிறுவும் என்று கிராம்ஸி கூறினார்.


எல்லா மனிதர்களும் அறிவு ஜீவிகளே ஆனால் சமூகத்தில் அறிவு ஜீவிகளின் பணியை எல்லோரும் செய்வது இல்லை. - ஆண்டனியோ கிராம்ஸி


புது மார்க்சியம்

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் சமூக ஆய்வு நிறுவனத்தின் தத்துவஞானிகள் புது மார்க்சியம் அல்லது விமர்சனக் கோட்பாடு என்பதை உருவாக்கினர்.

இவர்கள் அனைவரும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்த்தவர்கள், ஆதிக்கத்தின் வேர்களை புரிந்துகொள்ள முயற்சித்தவர்கள். புரட்சிகர மாற்றத்திற்காக மக்களின் உண்மை விழிப்புணர்வைத் தட்டியெழுப்பினார்கள். ஆதிக்கம் சார்ந்த சமூக கலாச்சாரத் தன்மைகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்கள். இவர்களுடைய கருத்துகள் மக்களின் விடுதலைக்கான கருத்துகளாகவும், ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு கலாச்சாரமாகவும் இருந்தன.

செயல்பாடு

பொதுவுடைமையின் பல சிந்தனையாளர்களை தற்பொழுது மாணவர்கள் படித்துள்ளார்கள். காரல் மார்க்சின் அரசில்லா சமூகம் சாத்தியமானதா என்று விளக்கம் கூறவும்.


கருவி மார்க்சிசம்

ரால்ஃப் மிலிபன்ட், கருவி மாக்ஸிசம் எனும் கருத்தை வலியுறுத்தினார். அரசை இவர் கருவியாக பார்க்கிறார். பணக்காரர்களும் அரசாங்கத்தின் அதிகாரிகளும் ஒரே சமூக வர்க்கத்தில் இருந்து தோன்றுகிறார்கள். அரசு அதிகாரிகள்  பணக்காரர்களின் சொந்தக்காரர்களாக உள்ளனர். இந்த தனிப்பட்ட உறவினால் அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டுவதற்கும் மேலாதிக்கம் செய்வதற்கும் அரசானது துணை போகிறது என்று ரால்ஃப் மிலிபன்ட் கூறினார்.

உங்களுக்குத் தெரியுமா?

கிராம்சி நவீன அரசியல் சிந்தனையாளர்களில் மிகுந்த சிந்திக்கும் திறன் கொண்ட ஒருவராவார். இத்தாலியின் பாசிச அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்தது. 20 ஆண்டுகளுக்கு இவரது மூளையின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. சிறையில் கையில் கிடைத்த காகிதத்தில் தனது கருத்துக்களை கிராம்சி எழுதினார். பின்னர் சிறையில் இருந்து அந்த குறிப்புகள் வெளி உலகத்திற்கு கடத்தி வரப்பட்டன. ஆகவே அவரது புத்தகத்திற்கு 'சிறைச் சாலை குறிப்பேடுகள்' (Prision Notebooks) எனப் பெயரிடப்பட்டது.


கட்டுமான மார்க்சிசம்

பிரான்சு நாட்டின் தத்துவ ஞானியான லூயிஸ் அல்துசர், நிகோஸ் போலன்ட்ஸ்சாஸ் கட்டுமான மார்க்சியம் என்ற கருத்தை 1970களில் வலியுறுத்தினர். இவர்கள் கருவி மார்க்சிய கருத்தை நிராகரித்தனர். அல்துசருக்கும். மிலிபேன்ட் அவருக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது. அதிகாரிகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு முக்கியம் இல்லை . அதிகாரிகளின் தனிப்பட்ட சமூக உறவுகள் அரசின் தன்மையை பாதிப்பது இல்லை. அரசு எப்பொழுதுமே பணக்காரர்களால், ஏழைகளை சுரண்டும் கருவியாக செயல்படும் என்று கட்டுமான மார்க்சிசம் கூறுகிறது


லூயி அல்துசர்

மார்க்சியத்தின் அரசு கோட்பாட்டில் புதிய கருத்துகளை இவர் கொண்டு வந்தார். முதலாளித்துவ அரசு ஏழைகளை அடக்குவதற்கு 2 வகையான கருவிகளை பயன்படுத்துகிறது.

1. கொள்கை அரசு கருவிகள் 

2. அடக்குமுறை அரசு கருவிகள்

கொள்கை அரசு கருவிகளில் குடும்பம், பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள் போன்றவைகள் அடங்கும். அரசானது, கொள்கைகருவிகள் மூலமாகபிரச்சாரங்களைச் செய்து, மக்களின் மனதை மயக்கி தனது நலனுக்கு தகுந்தவாறு மாற்றுகிறது.

அடக்குமுறை அரசுக் கருவிகளில், காவல்துறை, இராணுவம் போன்றவைகள் அடங்கும். அரசானது, கொள்கை அரசு கருவிகளால் செயல்பட முடியாவிட்டால், அடக்குமுறை அரசு கருவிகளை பயன்படுத்தும். வன்முறை, மிரட்டல் போன்ற நடவடிக்கைகளை பயன்படுத்தி மக்களை அடக்கும் என்று அல்துசர் கூறினார்.


"வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு மனிதர்களை உருவாக்கி, மாற்றி, தயார்படுத்துவதற்கு கொள்கை இன்றியமையாதது" - லூயி அல்துஸர்

Tags : Political Ideologies அரசியல் கொள்கைகள்.
11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I : Communism (Vladimir Lenin) Political Ideologies in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I : பொதுவுடைமைவாதம் (Communism) : விளாடிமர் லெனின் - அரசியல் கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I