அரசியல் கொள்கைகள் - தேசியவாதம் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I

   Posted On :  03.10.2023 10:20 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I

தேசியவாதம்

ஒரு நாட்டின் மேல் மக்களுக்கு உள்ள பாசம், அன்பு, விசுவாசம் போன்ற உணர்வுகளை தேசியவாதம் என்று கூறுகிறோம்.

தேசியவாதம்


பொருள், தோற்றம் மற்றும் பரவல்

ஒரு நாட்டின் மேல் மக்களுக்கு உள்ள பாசம், அன்பு, விசுவாசம் போன்ற உணர்வுகளை தேசியவாதம் என்று கூறுகிறோம். மக்களிடையே குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் அல்லது மொழிகளுக்கும், விழுமியங்களுக்கும், பாரம்பரியத்திற்கும் பாசம் காட்டுவதே தேசியவாதம் ஆகும். மக்களின் விசுவாசம் எல்லா குழுக்களை விடவும் தேசத்திற்கு முதன்மையாக இருக்க வேண்டும். ஏர்னஸ்ட் கெல்னெர் "தேசமும் தேசியவாதமும்" (Nations and Nationalism) என்ற நூலை எழுதினார். "தேசியவாதம் என்பது அரசியல் தளமும், தேசத் தளமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று முதன்மையாக வலியுறுத்தும் அரசியல் கொள்கை" என்று அவர் கூறினார்.

தேசியவாதம் நவீன காலத்தில் இங்கிலாந்தில் முதன்முதலில் தோன்றியது. பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் பரவியது. வட அமெரிக்க காலனிகள் ஐரோப்பாவிற்கு எதிராக தங்களது தேசியவாதத்தை உருவாக்கின. ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் பின் காலனி ஆதிக்கத் தேசியவாதம் என்ற புதுவகை தேசியவாதத்தை உருவாக்கின. பல காரணிகள் தேசியவாதம் உலகம் முழுவதும் பரவுவதற்கு வழிவகுத்தன. முதலாளித்துவம், பிரெஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, உலகப் போர்கள் மற்றும் காலனி ஆதிக்கம் போன்றவைகள் தேசியவாதத்தை வளர்த்தன.


தேசியவாதம் கோட்பாடுகள் 

தேசியவாதத்தைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன.

) ஆதிகால தேசியவாத கோட்பாடு 

) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு 

) சமூகத் தொடர்பு தேசியவாத கோட்பாடு 

) மார்க்சிய தேசியவாத கோட்பாடு 

) பின் கொள்கை தேசியவாத கோட்பாடு

மேற்கண்ட கோட்பாடுகளை நிரந்தரக் கோட்பாடுகள் மற்றும் நவீன கோட்பாடுகள் எனப் பிரிக்கலாம். முதல் இரண்டுக் கோட்பாடுகள் நிரந்தரக் கோட்பாடுகளாகும். கடைசி மூன்று கோட்பாடுகள் நவீன கோட்பாடுகளாகவும் கருதப்படுகின்றன.

) ஆதிகால தேசியவாத கோட்பாடு

ஆதிகாலத்தில் இருந்து ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்ளும் பாச உணர்வே தேசியவாதம் ஆகும். மொழி, மதம், பகுதி, இனம் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஆதிகாலம் முதல் இணைந்து வசிப்பதால் தேசிய உணர்வு இங்கு வளர்கிறது. அவர்கள் இன உணர்வையும், விசுவாசத்தையும் பெற்று இருக்கிறார்கள். தங்களது சமூக நடவடிக்கைகளில் தினந்தோறும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் இருந்தாலும், பொது வாழ்வில் இன உணர்வுகள் அடிப்படையில் செயல்படுகின்றனர். இன தேசியவாதம் என்ற கொள்கையை இக்கோட்பாடு ஆதரிக்கின்றது

) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு

ஒரு தாய் வழியில் வந்தவர்கள் இடையே காணப்படும் பாச உணர்வே தேசியவாதம் என்று இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு வம்சத்தை சேர்ந்தவர்கள். தேசமே ஒரு விரிவான குடும்பம் ஆகும். தேசியவாதம் என்பது பகுத்தறிவையும் பெற்று இருக்கின்றது. உணர்வுப் பூர்வமாகவும் உள்ளது. இது "பழங்கால மனதையும் நவீன தொழில் நுட்பத்தையும்" கொண்டுள்ளது. தங்கள் சமூகத்தின் வேர்களைக் கண்டறிய வரலாற்றில் தேசியவாதம் பயணிக்கின்றது. ஆனால் அருகில் வசிக்கும் இனக் குழுக்களிடம் பழகும் பொழுது தற்காலத்தில் செயல்படுகின்றது. தம் மக்களிடையே இனப் பாசத்தை காட்டுகின்றது. இதர மக்களிடையே இன வெறுப்பை தேசியவாதம் விதைக்கின்றது

) பின் கொள்கை தேசியவாத கோட்பாடு

இக்கோட்பாட்டை பல்வேறு அறிஞர்கள் ஆதரித்து உள்ளனர். அந்தோணி கிடன்ஸ், மைக்கல் மான், பால் பிராஸ் ஆகியோர் முக்கிய ஆதரவாளர்கள் ஆவர். அரசு தான் தேசியவாதத்தை கொண்டு வந்தது என்று இக்கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தேசங்களும், தேசிய உணர்வுகளும் இடைக்கால வரலாற்றில் இருந்த போதிலும், நவீன அரசு வந்த பிறகுதான் தேசியவாதம் முழுமையாக வளர்ந்தது என்று இவர்கள் கூறுகிறார்கள். அந்தோணி கிடன்ஸ் பிரெஞ்சு புரட்சியால் தான் ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதம் உருவானது என கூறுகிறார்..

மைக்கல் மான் சமூக சக்திக்கு நான்கு ஆதாரங்கள் உள்ளன என கூறினார். அவைகள் (1) கொள்கை சக்தி, (2) பொருளாதார சக்தி, (3) இராணுவ சக்தி, (4) அரசியல் சக்தி. இந்த நான்கு சக்திகளும் வரலாற்றில் ஒன்று சேர்ந்து தேசியவாதத்தை உருவாக்கின என்று கூறினார். கொள்கை சக்தி காரணி 16-ஆவது நூற்றாண்டில் இங்கிலாந்தில் தேசியவாதத்தை உருவாக்கியது. பொருளாதார சக்தி பின்னர் மேற்கு ஐரோப்பா முழுவதும் தேசங்களையும் தேசியவாதத்தையும் உருவாக்கியது. பின்னர், இராணுவ சக்தியும், அரசியல் சக்தியும் தேசியவாதத்தையும் வளர்ச்சிப் பெற வைத்தன.

பின் கொள்கை தேசியக் கோட்பாட்டார்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் எல்லோரும் நவீன அரசும், வர்த்தக முதலாளித்துவமும் தேசியவாதத்தை வளர்த்தன என்று கூறுவதில் ஒற்றுமையுடன் உள்ளனர்.

) சமூகத் தொடர்பு தேசியவாத கோட்பாடு

காரல் டியூட்ச், பெனிடிக்ட் ஆண்டர்சன் தகவல் தொடர்பு தேசியவாத கோட்பாட்டை பிரபலப்படுத்தினார்கள். டியூட்ச் தேசத்தை இவ்வாறு விளக்கினார். "மற்றவர்களை விட தங்களுடைய குழு உறுப்பினர்களுடன் திறமையாகவும், உணர்வுப் பூர்வமாகும் தகவலை பகிர்ந்துகொள்ளும் மக்கள் குழுவே தேசம்". அவர் பொருளாதாரம், வரலாறு,மக்கள் தொகையியல் ஆகிய பாடங்களைப் படித்து ஒரு முடிவிற்கு வருகிறார். தேசம் மற்றும் தேசியவாதம் தோற்றத்தில் தகவல் தொடர்புதான் பெற்றோராக பங்காற்றியுள்ளது. மக்களிடையே உள்நாட்டு தகவல் தொடர்பு தார்மீக மற்றும் அரசியல் அடையாளத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தது.

பெனிடிக்ட் ஆண்டர்சன் தேசத்தை கற்பனை சமுதாயம் என்றும், தேசியவாதத்தை கற்பனை சமுதாயத்தின் உயிர் சக்தி என்றும் கூறினார். அவர் கற்பனை சமூகங்கள்' (Imagined Communities) என்ற நூலை எழுதினார். தேசம் என்பது மனிதனின் எண்ணத்தில், கற்பனையில் இருக்கின்றது. ஒரு தேசத்தின் உறுப்பினர்கள், எல்லா உறுப்பினர்களுடன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை. இருந்தபோதிலும் எல்லோரையும் தம்முடைய மக்களாக பார்க்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலும், தொலைக்காட்சி முன்பும் அமர்ந்திருக்கும் கோடிகணக்கான மக்கள் தங்கள் தேசிய அணி வெற்றி பெற்றால் ஆனந்தம் கொள்கிறார்கள். தங்கள் தேசிய அணி தோல்வியுற்றால் தாங்களே தோற்றதாக வருத்தப்படுகிறார்கள். பல நாடுகளில், மறைந்த பெயர் தெரியாத ராணுவ வீரரின் கல்லறை உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட வீரரின் பெயர் தெரியாவிட்டாலும் அந்த கல்லறை மீது மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.

ஆண்டர்சன் முதலாளித்துவமும், அச்சகமும் தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய பங்கை ஆற்றின என்று கூறினார். அச்சகம் கண்டுபிடிக்க பட்டவுடன் பல ஆயிரக்கணக்கான நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் அச்சு அடிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்புத்தகங்களை மக்கள் திரும்ப திரும்ப படிப்பதால் ஒரே மாதிரியான எண்ணங்கள் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன. நாம் எல்லாம் ஒரே சமூகம் என்ற உணர்வு பிறந்தது. முதலாளித்துவமும் கற்பனை சமூகத்தை ஊக்கப்படுத்தியது. முதலாளிகள் இலாபத்தை மனதில் வைத்து, நூல்களை அச்சிட்டு அதிகம் விற்பனை செய்தார்கள். ஆகவே அச்சக முதலாளித்துவம் (அச்சகமும் முதலாளித்துவமும்) இணைந்து கற்பனை சமூகத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தன.

"மிகச்சிறிய நாட்டில்கூட ஒருவரையொருவர் மக்கள் தெரிந்திருப்பதில்லை, சந்திப்பதில்லை, கேள்விப்படுவதில்லை. இருந்தபொழுதிலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் சமூகத்தின் நினைவுகள் இருக்கின்றன. சமூகங்களை உண்மை - பொய் என்று வேறுபடுத்த வேண்டியதில்லை. எவ்வாறு மக்கள் எண்ணத்தில், மனதில் நினைக்கப்பட்டு இருக்கின்றன என்பதுதான் முக்கியம்."பெனடிக்ட்ஆண்டர்சன்


) மார்க்சிய தேசியவாத கோட்பாடு

மார்க்சியம் தேசியவாதத்தை முதலாளித்துவத்தின் குழந்தையாக கருதுகின்றது. ஏழைகளைச் சுரண்டுவதற்காக பணக்காரர்கள் தேசியவாதத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று இக்கோட்பாடு கூறுகின்றது. முதாலளித்துவ வர்க்கம் தனியார் சொத்துக்களைக் கொண்டுள்ளதோடு ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தேசியவாதத்தை தொழிலாளி வர்க்கத்தின் உணர்சிகளை ஊக்கப்படுத்தி தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியது. "தேசியவாத உணர்வு சுரண்டலை சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் நீடிக்க வைப்பதற்கும் பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட உணர்வாகும்". காரல் மார்க்ஸ் "பாட்டாளிகளுக்கு தந்தைநாடு இல்லை" என்று கூறினார். ஆகவே தான் கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ என்ற தனது நூலில் 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், புரட்சி செய்து புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள்' என்று கூறினார். காரல் மார்க்ஸ் தேசியவாதத்தை நிராகரித்தார். சர்வதேசிவாதத்தை ஆதரித்தார்.

மைக்கல் எக்டர், டாம் நரின் ஆகியோரும் தேசியவாதத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்தனர்.


இந்திய தேசியவாதம்

இந்திய தேசியவாதம் 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் தோன்றியது. மதம், மொழி, பகுதி, இன வேறுபாடுகளை கடந்து இந்தியர்கள் தேசிய உணர்வைப் பெற்றனர். இரண்டு வகையான காரணிகள் இந்திய தேசியவாதத்தை வளர்த்தன. அவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகள் ஆகும்.

உள்நாட்டுக்காரணிகளை பொருத்தமட்டில் பல நூற்றாண்டுகளாக நாம் இந்தியர் என்ற உணர்வு மக்கள் மனதில் மலர்ந்து வந்துள்ளது. அரசியல் பிளவுகளைத் தாண்டி கலாச்சார ரீதியாக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்துள்ளனர். பண்டைகாலம் முதலே 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருத்து இந்திய பாரம்பரியத்தில் தழைத்து வந்துள்ளது. நவீன இந்திய தேசியவாதம் விதைகள் பல நூற்றாண்டு கால கலாச்சார பூமியில் வளர்ந்து வந்துள்ளது.

வெளிக்காரணிகளைப் பொருத்தமட்டில் ஆங்கிலேய காலனி ஆதிக்கம் தேசியவாதத்தைத் தட்டி எழுப்பியது. முக்கிய காரணிகள் கீழ்க்கண்டவைகளாகும்.

1. காலனி ஆதிக்கம், அரசியல், நிர்வாக, பொருளாதார, தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை இந்தியாவில் உருவாக்கியது. அரசியலிலும், நிர்வாகத்திலும் ஏழுநூறுக்கும் மேற்பட்ட இந்திய அரசுகளை காலனியாதிக்கம் ஒருங்கிணைத்தது. முன்னர், இந்தியா கிராமப் பொருளாதாரத்தைப் பின்பற்றியது. ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைக் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒருங்கிணைத்தது. இரயில்கள், தந்தி, சீரான அஞ்சல் முறை ஆகியவைகளை அறிமுகப்படுத்தி தகவல் தொடர்புத்துறையில் இந்தியாவை ஒருங்கிணைத்தது. ஆகவே தேசியவாதம் வளர்வதற்கான சூழல் தோன்றியது

2. காலனியாதிக்கம் மேற்கத்திய கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாம் நவீன அரசியல் கருத்துக்களான விடுதலை, சமத்துவம், இறையாண்மை போன்ற கருத்துக்களை அறிந்து கொண்டோம். இந்திய தாய்திருநாடு இக்கருத்துக்களை பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

3. ஆங்கில மொழி இந்தியாவின் தொடர்பு மொழியாக காலனி ஆதிக்கத்தால் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மொழிகளை நாம் பேசுவதால் தொடர்பு கொள்வதில் சிரமம் இருந்தது. ஆங்கிலப் பயன்பாட்டால் தேசியவாதிகள் இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்து தேசியவாதத்தை வளர்த்தனர்

4. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்வேறு சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இராஜா ராம் மோகன்ராயின் 'பிரம்ம சமாஜமும்' மகாராஷ்ட்ராவின் "பிரார்த்தனசமாஜமும்" முக்கியமானவைகள் ஆகும். இந்தியாவில் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்களை இவைகள் கொண்டுவந்தன. இந்திய சமுகத்தின் தீமைகளான சதி, சாதி முறை மற்றும் தீண்டாமையை இவை எதிர்த்தன. பழங்கால இந்தியாவின் நல்ல தன்மைகளை மீண்டும் தழைக்க இவை வழிவகுத்தன

5. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இனவெறியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. ஆங்கிலேயர்களின் வெள்ளை மனிதனின் கடமை / சுமை என்ற கருத்து நிறவெறியைக் காட்டியது. வெள்ளையர்கள்தான் இந்த உலகில் வளர்ச்சியிலும் நாகரிகத்திலும் முன்னணியில் உள்ளவர்கள். இந்தியர்களுக்கு நாகரிகத்தை வழங்கவே வெள்ளையர்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று வெள்ளை மனிதனின் கடமை அல்லது சுமைக் கருத்துக் கூறியது. இதன் மூலம் வெள்ளையர்களின் நிறவெறி இந்தியர்களுக்குப் புரிந்தது. இதை எதிர்த்து இந்திய தேசியவாதம் வளர்ந்தது

6. ஆங்கிலேய கவர்னர் ஜெனரலான லிட்டன் பிரபுவின் தலைக்கன ஆட்சியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. இவர், இந்திய பத்திரிக்கைகள் மீது தேவையற்ற தடைகளை விதித்தார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆர்வம் காட்டினார். இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முட்டுகட்டைப் போட்டார். இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் வாடியபோதிலும் நிவாரண முயற்சிகளை அவர் மேற்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானுடன் தேவையில்லாமல் போர் தொடுத்ததால், பல ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் மாண்டு போயினர். இக்காரணிகளால் இந்திய தேசியவாதம் வளர்ந்தது

7. ரிப்பன் பிரபு ஒரு தலை சிறந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஆவார். அவரது ஆட்சியில் இல்பர்ட் என்ற ஆட்சிக் குழுவின் சட்ட உறுப்பினர் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினர். ஐரோப்பியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்று இம் மசோதா கூறியது. இனவெறி பிடித்த ஐரோப்பியர்கள் இந்திய நீதிபதிகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். இவர்களின் எதிர்ப்பால் ரிப்பன் பிரபுவும் இந்த மசோதாவை கைவிட்டார். இந்தியத் தலைவர்கள் இப்பிரச்சனையின் மூலம் ஐரோப்பிய இனவெறியை உணர்ந்தனர். மேலும் மக்கள் விரும்பாத அரசாங்கத் திட்டங்களை எதிர்ப்பதன் மூலமும், போராட்டங்கள் மூலமும் திரும்ப பெற வைக்கலாம் என்ற அரசியல் வித்தையை இந்திய தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.

மேற்கண்ட காரணிகளால் 19-ஆம் நூற்றாண்டில் இந்திய தேசியவாதம் வளர்ந்தது


தேசியத்திற்கு எதிரான சவால்கள்

சமகாலத்தில் தேசியவாதம் பல்வேறு சவால்களை சந்திகின்றது. சில சவால்கள் தேசத்திற்கு உள்ளேயும், சில சவால்கள் தேசத்திற்கு வெளியேயும் தோன்றுகின்றன, செயல்படுகின்றன. இவைகளில் பிரிவினை வாதமும், உலகமயமாதலும் முக்கியமானவைகளாகும்


உள்நாட்டுக் காரணிகள்


பிரிவினைவாதம்

தேசியவாதத்தின் மிக முக்கிய எதிரி பிரிவினைவாதம் ஆகும். இது உள்தேசிய வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. கனடா நாட்டில் குயூபக் போராட்டம், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் இயக்கம், சீனாவில் உய்கர் இயக்கம், ஸ்பெயினின் கடலன் இயக்கம் ஆகிய முக்கிய பிரிவின வாத இயக்கங்கள் உலகில் காணப்படுகின்றன.


நிகழ் ஆய்வு

உய்கர் பிரிவினைவாதம்

சின்ஜியாங் சீனாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். சீன மொழியில் சின்ஜியாங் என்றால் புது எல்லை என்பது பொருளாகும். இங்கு வசிக்கும் பூர்வகுடி மக்கள் உய்கர் முஸ்லிம்கள் ஆவர். சீன அரசாங்கம் தங்களுக்கு எதிரான அரசியல் பொருளாதார பாகுபாட்டைக் பின்பற்றுவதாக இம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன பெரும்பான்மை மக்களான ஹன்ஸ் இன மக்கள் உய்கர் மாநிலத்தில் குடியேறிவருகின்றனர். பூர்வகுடிகளின் அளவு குறைந்து வருகின்றது. இம்மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த ஹன்ஸ் மக்கள் தற்பொழுது 40 சதவீதமாக அதிகரித்துவிட்டனர். மேலும் மத ரீதியாகவும் சீன அரசாங்கம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று பூர்வகுடி மக்கள் கூறுகின்றனர். தாடி வளர்க்கக்கூடாது, வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று அரசாங்கம் மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை திணிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த பிரிவினைவாதத்திற்கு எதிராக சீன அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.


வெளிநாட்டுக் காரணிகள்

பல வெளிநாட்டுக் காரணிகளும் தேசியத்திற்கு எதிராக உள்ளன. உலகமயமாகுதல் ஒரு முக்கிய காரணியாகும். பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நுட்பம், கலாச்சாரம்மற்றும் அமைப்புகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்புகளுக்கு உலகமயமாகுதல் என்பது பொருளாகும். உலகமயமாகுதல் நாடுகளுக்கு இடையிலான தடைகளை உடைத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக, பெரிய தொழில் நிறுவனங்கள் நாடுகளை கடந்து செயல்படுகின்றன, செல்வாக்கைப் பெற்றுள்ளன.


உலகமயமாதல்


உலக வர்த்தக நிறுவனம் உலகமயமாதலை வளர்க்கிறது. 'தடைகள் இல்லா வர்த்தகம்' என்பது இதன் இலட்சியமாகும். இது பல்வேறு ஒப்பந்தங்களை 1995 முதல் உருவாக்கி சர்வதேச வர்த்தகத்தில் இருந்த தடைகளை நீக்கியுள்ளது. வர்த்தகத் தடைகள் தான் முன்பு தேசியவாதம் வேர்களாக இருந்தன.

உலகம் முழுவதும் படித்த திறமையான மக்கள் நாடு விட்டு நாடு குடிபெயர்ந்துள்ளனர். முக்கியமாக ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

சர்வதேச மண்டல அமைப்புகளும் தேசியவாதத்தை பாதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் 27 ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்துள்ளது. இந்த நாடுகளின் தேசியவாதத்தின் வலுவிழந்துள்ளது. ஐரோப்பிய கண்டம் தேசியவாதம் தொட்டில் என்ற நிலையில் இருந்து உலகளாவியத்தின் ஒளிவிளக்கு என்று மாறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சியும் தேசியவாதம் பிடிப்பைத் தளர்த்தியுள்ளது. தேசியவாதம் மறைந்து உலக அரசாங்கம் தோன்றுவதற்கு தற்பொழுது வாய்ப்புகள் பெருகியுள்ளது

தீவிரவாதக் கொள்கைகள் தேசியவாதத்தை பலவீனப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, தூய இஸ்லாம் என்ற முழக்கத்துடன் இஸ்லாமிய அரசு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் கலீஃபா முறையை 2014-இல் கொண்டு வந்தது. தேசியவாதத்தை அது நிராகரித்தது. இஸ்லாமிய மக்கள் அனைவரும் கலீஃபா ஆட்சிமுறையில் இருக்க வேண்டும் என்று கூறியது. சுற்றுசூழல் சீர்கேடுகள் தேசியவாதத்தை பாதிக்கின்றன. பருவநிலை மாற்றம், அமில மழை, ஓசோன் அழிதல் போன்ற சீர்கேடுகள் நாடுகளை கடந்து பாதிப்புகளை உருவாக்குகின்றன. உலக சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது உலக மக்களின் கடமையாகும். எனவேதான் பல உலக மாநாடுகள் நடத்தப்பட்டன. தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் தேசியவாதத்தைப் பாதித்துள்ளன. வளைதளம், அலைபேசி, சமூக ஊடகங்கள் பல சமயங்களில் தேசியவாதத்தைப் பாதிக்கின்றன, உலகமயமாதலை ஊக்குவிக்கின்றன.

இருந்தபோதிலும் 21-ஆம் நூற்றாண்டிலும் தேசியவாதம் வலுவாக உள்ளது. தேசியவாதம் மறையும் காலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லை. சர்வதேச நடவடிக்கைகளை இன்றைக்கும் தேசியமும், தேசநலன்களும்தீர்மானிக்கின்றன. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவதும், பாரிஸ் பருவநிலை (United Nations Framework Conference on Climate Change) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் இதற்கு சான்றுகளாகும்


Tags : Political Ideologies அரசியல் கொள்கைகள்.
11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I : Nationalism Political Ideologies in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I : தேசியவாதம் - அரசியல் கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I