அரசியல் கொள்கைகள் - பாசிசம் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I
பாசிசம்
பெனிடோ முசோலினி பாசிசம் என்ற சர்வாதிகார கட்சி, இயக்கம் மற்றும் கொள்கையைத் தோற்றுவித்தார். பாசிசம் மூலம் இத்தாலியை 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆட்சி செய்தார். இத்தாலி மொழியில் "பாசி” என்றால் தண்டுகளின் மூட்டை என்பது பொருளாகும். அந்நாட்டின் பண்டையகால வரலாற்றில் ரோமானிய ஆட்சியாளர்களின் சின்னமாக "பாசி" இருந்தது. "தண்டுகளின் மூட்டை" ஒற்றுமை மற்றும் வலிமையைக் குறிக்கிறது. முசோலினி தனது தொண்டர்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக தனது கட்சிக்கு இந்த பெயரை வைத்தார்.
உலகப் போருக்கு பின் இத்தாலியில் நிலவிய சமூக பொருளாதார பிரச்சனைகள்தான் பாசிசம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. முதல் உலக போரின் முடிவில் வெற்றி பெற்ற கூட்டணியில் இத்தாலி இருந்த போதிலும் எந்த வித பலனும் அதற்கு கிட்டவில்லை , ஏமாற்றமே எஞ்சியது. வேலை இல்லாமை, விலை உயர்வு, அரசியல் குழப்பங்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பிரச்சனைகளில் இத்தாலி சிக்கி இருந்தது.
இத்தாலியின் எல்லா வகை பிரிவினரும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெனிடோ முசோலினி தனது பேச்சாற்றலால் பாதிக்கப்பட்ட மக்களை பாசிசக் கட்சிக்கு இழுத்தார். அவர் 1922-ஆம் ஆண்டு தலை நகரில் "ரோம் அணிவகுப்பு" என்பதை நடத்தினார். முசோலினியின் செல்வாக்கை கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் தேசிய பாசிச கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
ஆர்.எம்.மேக்கைவர் பாசிசத்தை கீழ், நடு வர்க்கங்களின் இயக்கம் என்று வர்ணித்தார்.
பாசிசம் தீவிர தேசியவாதத்தை வலியுறுத்தியது. இத்தாலி தான் உலகில் தலை சிறந்த நாடு என கூறியது. இதர நாடுகள் மற்றும் மக்களிடம் பாசிசம் வெறுப்பைக் காட்டியது. கொள்கையிலும் நடவடிக்கையிலும் பாசிசம் ஏகாதிபத்தியத்தை பின்பற்றியது. அது மேற்கொண்ட காலனியாதிக்க நடவடிக்கைகள் ஆப்பிரிக்காவை பாதித்தன. இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன. ஜேவானி ஜேன்டிலா என்ற பாசிச கொள்கைவாதி 'பாசிச கொள்கை (Doctrine of Fascism) என்ற நூலை எழுதினார்.பாசிசஅரசுஎன்றால் அதிகாரத்தையும் பேரரசையும் விரும்பும் கொள்கை என்று கூறினார். பேரரசு என்றால் நிலம், இராணுவம் அல்லது வர்த்தகம் சம்பந்தப்பட்டது அல்ல. அது தார்மீகம் சம்மந்தப்பட்டது. பாசிச பேரரசு உலக நாடுகளை வெல்ல வேண்டும். பாசிச அரசு இத்தாலியின் வரலாற்றில் மூன்றாவது ரோமப் பேரரசு ஆகும். பண்டையகால ரோமானியப் பேரரசு, மறுமலர்ச்சி ரோமானிய ஆதிக்கம் ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக பாசிசம் உள்ளது.
பாசிசம் போரையும், போர் குணத்தையும் தீவிரமாக பாராட்டியது. "பெண்ணுக்குத் தாய்மை முக்கியம் ஆணுக்குப் போர் முக்கியம்" என்று முசோலினி கூறினார். பாசிசம் அமைதியை கோழைத்தனம் என்று வர்ணித்தது. பெண்களை 'தேசத்தின் இனப்பெருக்காளர்கள்' என்று பாராட்டியது.
பாசிசம் குறைவான அதிகார அரசை நிராகரித்தது. ஆர்வத்துடன் சர்வதிகாரத்தையும் கொடுங்கோல் ஆட்சியையும் ஆதரித்தது. "அரசுக்கு உள்ளே எல்லாம், அரசுக்கு வெளியே எதுவுமில்லை, அரசுக்கு எதிராக எதுவும் இல்லை" என்பது முசோலினியின் முழக்கமாகும். புதிய சமூகத்தை படைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்களின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை அரசு நிர்ணயித்தது. இத்தாலியை உலக வல்லரசாக மாற்றுவதற்கும் மக்களை தைரியமானவர்களாக ஆக்குவதற்கும் பாசிசம் முயன்றது.
பொதுவுடைமைவாதத்தை ஜென்ம விரோதியாக பாசிசம் ஒடுக்கியது. இத்தாலியின் பொதுவுடைமைவாதத்தின் சிந்தனையாளரான அண்டனியோ கிராம்சி பாசிசத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். பாசிசம் பொதுவுடைமைவாதத்தின் கட்சி, நூல்கள் ஆகியவற்றைத் தடை செய்தது. பொதுவுடைமைவாத அரசு, சமூக வர்க்கம், புரட்சி போன்ற கருத்துக்களை பாசிசம் நிராகரித்தது. சமூகம், வர்க்கங்களால் பொதுவுடைமைவாதம் கூறியது போல் பிளவுபடவில்லை . சமூகம் ஒற்றுமையாகத்தான் உள்ளது என பாசிசம் கூறியது.
பாசிசம் தொழில்சார் அரசு கொள்கை என்று அழைக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களும் அரசின் அதிகாரமும் பாசிசத்தில் இணைந்துள்ளன. - பெனிடோ முசோலினி
பாசிசம் தொழில்சார் அரசு கோட்பாட்டை ஆதரித்தது. ஒவ்வொறு தொழிலும், வர்த்தகமும், வேலையும் தொழில் சார்ந்த அமைப்பை பெற்றிக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முதாலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை அந்தந்த தொழில் அமைப்புகள் தீர்க்க வேண்டும். தேசத்தின் நலன்களுக்கும், நோக்கங்களுக்கும் எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது. பாசிச அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகவும் குறைவாக நிர்ணயித்தது. தொழில்சார் நிறுவனங்கள் ஊழல் மற்றும் திறமையின்மையால் பாதிக்கப்பட்டன. பாசிச பொருளாதாரத்தின் முதுகெலும்பான தொழில்சார் அரசு தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்தது.
விமர்சனம்
பாசிசம் மனித வரலாற்றில் வந்த மிக மோசமான சர்வாதிகாரம் ஆகும். அது சந்தர்ப்பவாதத்தை பின்பற்றியது. அறிவு ரீதியாக நேர்மை இல்லாமல் இருந்தது. பாசிசமும், நாசிசமும் மனித குலத்தின் மீது அளவற்ற அழிவை இரண்டாம் உலகப் போரில் திணித்தன. நாசிசத்தை விட பாசிசம் கொள்கை ரீதியாக வலுவாக இருந்ததால் 21-ஆம் நூற்றாண்டிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் அரசுகளையும் விமர்சிப்பதற்கு பாசிசம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
பாசிச கொள்கை, மக்களாட்சி, சமதர்மவாதம் மற்றும் பொதுவுடைமைவாதத்திற்கு எதிராக தோன்றியது. மக்களாட்சியும், சமதர்மவாதமும் நவீன காலத்தின் முற்போக்கு சிந்தனையை பிரதிபலித்தன. பாசிசம் இதற்கு எதிராக செயல்பட்டது.