அரசியல் கொள்கைகள் - தாராளவாதம் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I
தாராளவாதம்
நவீன அரசியல் கோட்பாட்டின் மிக முக்கிய கொள்கையாக உள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சம கால உலகில் பெருமளவில் உலக நாடுகளால் தாராளவாதம் பின்பற்றப்படுகிறது. இலத்தீன் மொழியில் "Liber" என்றால் விடுதலை என்று பொருளாகும். தாராளவாதத்தின் ஆங்கிலச் சொல்லான "Liberlism" இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் அரசியல் அமைப்பை ஆதரித்தவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தாராளவாதத்தை அரசியலிலும், பொருளாதாரத்திலும் பின்பற்றுகின்றன.
தாராளவாதம் வரலாற்றில் மூன்று வகைகளாகப் காணப்படுகின்றது. முதலாவதாக 1930-ஆம் ஆண்டு வரையில் இது 'எதிர்மறைத் தாராளவாதம்' என அழைக்கப்பட்டது. இரண்டாவதாக, உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பின் 'நேர்மறைத் தாராளவாதம்' என அழைக்கப்பட்டது. மூன்றாவதாக, 1970- களுக்குப் பின்னர் இது 'சமகாலத் தாராளக் கொள்கை' என அழைக்கப்படுகிறது.
அ) எதிர்மறைத் தாராளவாதம்
எதிர்மறைத் தாராளவாதம் பாரம்பரிய தாராளவாதம், Laissez Faire (பிரெஞ்சு மொழியில்) என்றும் அழைக்கப்படுகிறது. ஜான் லாக் என்ற அரசியல் சிந்தனையாளர் 'சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்' (Two Treaties of Civil Government) என்ற தனது நூலில் எதிர்மறைத் தாராளவாதத்தை எடுத்துரைத்தார்.
ஜான் லாக், பாரம்பரியத் தாராளவாதத்தின் தந்தை. உயிர், விடுதலை, தனிச் சொத்துகள் சமஉரிமை.
தாமஸ் பெயின், மாண்டெஸ்க்யூ, பெந்தம் ஆகியோரும் எதிர்மறைத் தாராளவாதத்தை ஆதரித்தனர். பொருளாதாரப் பாடத்தில் ஆதம் ஸ்மித் 'தேசங்களின் செல்வங்களைப் பற்றிய ஓர் ஆய்வு’ (An Inquiry Into the Nature and Causes of Vealth of Nations) என்ற நூலில் எதிர்மறைத் தாராளவாதத்தை ஆதரித்தார்.
எதிர்மறைத் தாராளவாதம் மனிதனைப் பகுத்தறிவு உள்ள, திறமையான, சுதந்திரமான தன்மைகளை உடையவன் என்று கூறுகிறது. எல்லா மனிதர்களும் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் தனது தேவையை அறிந்து இருக்கிறான். சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பு ஆகும். மனிதனின் வாழ்க்கையில் தலையிடுவதற்கு அரசிற்கோ, சமூகத்திற்கோ அதிகாரம் இல்லை. அரசு ஒரு அவசியமான தீமை ஆகும். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு அரசு தேவைப்படுகிறது. ஏனென்றால் அது மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடும்.
அரசு எதிர்மறை அரசு ஆகும். ஏனென்றால் முன்னேற்றத் திட்டங்களை அது கொண்டு வரக் கூடாது. அரசை Laissez Faire அரசு என்று அழைக்கிறோம். பிரெஞ்சு மொழியில் இதனுடைய பொருள், 'தனியே விடு' என்பதாகும். அதாவது அரசு மனிதனை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். அவனது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது. சட்ட ஒழுங்கைப் பராமரிப்பது, சட்டப்பூர்வமாக உருவான ஒப்பந்தங்களை அமல்படுத்துவது அரசின் பணிகள் ஆகும்.
பொருளாதாரத்தில் எதிர்மறைத் தாராளவாதம் தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் இயங்கும்.சந்தைப் பொருளாதார நடவடிக்கைளை அரசு கட்டுப்படுத்தக் கூடாது. அரசானது கிரிக்கெட் விளையாட்டின் நடுவரை போன்றது. விளையாட்டில் நடுவர் பங்கேற்கமாட்டார். வீரர்கள் விதிகளுக்குட்பட்டு விளையாடுகிறார்களா என்று கண்காணிப்பார். அதைப்போல அரசு சந்தையைக் கண்காணிக்க வேண்டும். சந்தையின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது.
எதிர்மறைத் தாராளவாதம் இயற்கை உரிமைகள் கோட்பாட்டை ஆதரிக்கின்றது. இயற்கை அன்னை மனிதனை படைத்து அவனது முன்னேற்றத்திற்காக உரிமைகளை வழங்கியுள்ளது. இந்த இயற்கை உரிமைகளை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை .
மூன்று இயற்கை உரிமைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகும்.
1) வாழ்க்கை உரிமை
2) சுதந்திர உரிமை
3) சொத்துரிமை
இவைகள் மனிதனுக்கு அவசியமானவைகள் ஆகும். சொத்துரிமை எதிர்மறை தாராளவாதத்தின் மிக முக்கிய உரிமை ஆகும். சொத்துக்களை வாங்கவும், விற்கவும், அனுபவிக்கவும் மனிதனுக்கு உள்ள உரிமையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது.
ஆ) நேர்மறைத் தாராளவாதம்
20- ஆம் நூற்றாண்டில் எதிர்மறைத் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதமாக மாற்றப்பட்டது. எதிர்மறைத் தாராளவாதம் மேற்கத்திய நாடுகளின் வளத்தைப் பெருக்கியது. ஆனால் சாதாரண மக்களுக்கு கடுமையான துன்பங்களை அளித்தது. மக்களிடையே விரும்பத்தகாத ஏற்றத் தாழ்வுகள், நகரங்களில் பெருகி ஆரோக்கியமற்ற குடிசைப் பகுதிகள், தொழிலாளர்களைச் சுரண்டுவது போன்ற துன்பங்கள் மக்களை வாட்டியது. ஜான் ரஸ்கின் போன்ற மனித நேய சிந்தனையாளர்கள் எதிர்மறைத் தாராளவாதத்தை விமர்சித்தனர்.
இரண்டு காரணி்களால் தாராளவாதம் நேர்மறைத் தாராளவாதமாக மாறியது. அவைகள் 1) மக்களாட்சி 2) மார்க்சியம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி மேற்கத்திய நாடுகளில் பரவியது. மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மக்கள் எதிர்மறைத் தாராளவாத கொள்கையை மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். மேலும் புரட்சிகர சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் தனது பொதுவுடைமைவாதம் பற்றிய சிந்தனையை எடுத்துரைத்தார். மார்க்சியமும் மக்களாட்சியும் கொடுத்த அழுத்தத்தால் எதிர்மறைத் தாராளவாத கொள்கை நேர்மறைத் தாராளவாதக் கொள்கையாக மாறியது.
உலக பொருளாதார மந்தநிலை மேற்கத்திய நாடுகளை 1928-முதல் பாதித்தது. அமெரிக்காவின் அதிபரான பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுப்பதற்காக "New' Deal" என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தினார். அவருடைய பொருளாதார ஆலோசகரான ஜே.எம்.கீன் நேர்மறைத் தாராளவாதத்தை அமல்படுத்த ஆலோசனை வழங்கினார். டி.எச்.கிரின், ஹரால்டு லஸ்கி, எல். டி.ஹார்டு ஹவுஸ் ஆகியோரும் நேர்மறைத் தாராளவாத கொள்கையை ஆதரித்தனர்.
"நான் உங்களுக்கு உறுதி மொழியளிக்கிறேன், எனக்கும் உறுதி மொழியளிக்கிறேன், அமெரிக்க மக்களின் புதிய ஒப்பந்தத்தின் பேரில்". - பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
நேர்மறைத் தாராளவாத கொள்கை சமூக நலஅரசு என்ற புதிய சிந்தனையை உருவாக்கியது. அரசானது மக்களின் நலனுக்கான ஒரு கருவி ஆகும். மக்களுக்கு சேவை ஆற்றுவதே அரசின் முக்கிய பணி ஆகும். கல்விக் கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் அடிப்படை கூட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். அரசு என்பது சமூக மக்களாட்சி அரசு ஆகும். நேர்மறை தாராளவாதம், சமூக நலனுக்கும் மக்களாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மிக நீண்ட காலங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு அருமையாக பணியாற்றினார். பொருளாதார மந்த நிலையில் இருந்து தனது புதிய ஒப்பந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவை மீட்டெடுத்தார். கோடிக்கணக்கான மக்கள் இன்றைக்கும் அவரால் ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர் போலியோ நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ஆவார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் 1932-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களிடையே வாக்குகளை சேகரிப்பதற்காக அவர் உணர்ச்சிகரமாக பேசினார். சக்கர நாற்காலியில் வரும் நான் மீண்டும் அமெரிக்காவை முன்னேற்றம் என்னும் சக்கரத்தில் அமர்த்துவேன் என்று கூறினார். வாழ்க்கையில் இன்னல்களை சமாளித்து வெற்றிச் சிகரங்களை தொடுவது எப்படி என்பதற்கு இலக்கணமாக ரூஸ்வெல்ட் இன்றைக்கும் விளங்குகிறார்.
மக்களின் உரிமைகளை சமூக நலத்திற்காக அரசு கட்டுப்படுத்தலாம். மக்கள் நலஉரிமைக் கோட்பாட்டை நேர்மறைத் தாராளவாதம் ஆதரிக்கின்றது. உரிமைகள் இருந்தால் கடமைகளும் இருக்கும். விடுதலை என்பது நேர்மறையானது ஆகும். எதிர்மறைத் தாராளவாதம் அரசிடம் இருந்து மனிதனுக்கு விடுதலை கோரியது. நேர்மறைத் தாராளவாதம் அரசின் மூலமாக மனிதனுக்கு விடுதலை கோருகிறது. அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் தான் மனிதனுக்கு விடுதலையைக் கொடுக்கும்.
அரசு பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மக்களை எதிர்பாராத பொருளாதார ஏற்றம் மற்றும் மந்த நிலைகளில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும். மக்கள் நல திட்டங்களுக்காக முற்போக்கான வரி விதிப்பை மேற்கொள்ளலாம். வங்கிகளை தேசியமயமாக்குதல், தொழில்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்குதல் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்கள் நலஅரசு கொண்டு வரலாம்.
நேர்மறைத் தாராளவாதம் 1930- களில் இருந்து மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்பட்டது. ஆனால் மெல்ல மெல்ல தத்துவ ஞானிகளும், அரசியல் தலைவர்களும் நேர்மறைத் தாராளவாதத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன என குற்றம் சாட்டப்பட்டது. பொருளாதாரத் திறமையின்மை, குறைந்து போன உற்பத்தி திறன், ஊழல், பொருளாதார மந்த நிலை, பறிபோன மக்கள் உரிமைகள் போன்ற தீமைகளுக்காக நேர்மறைத் தாராளவாதம் விமர்சிக்கப்பட்டது.
இ) சமகாலத் தாராளவாதம் (புதியத் தாராளவாதம்)
தற்போதைய தாராளவாதம் சமகாலத்திய தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது மேற்கத்திய நாடுகளில் 1970-இல் தொடங்கி உலகம் முழுவதும் தற்போது பரவி வருகிறது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ரொனால்டு ரீகன் அந்நாட்டில் சமகாலத்திய தாராளவாதத்தைக் கொண்டு வந்தார்.
சமூகம் என்று ஒன்று கிடையாது. தனி ஆண்கள், பெண்கள் மற்றும் குடும்பங்கள் மட்டுமே உள்ளன. - மார்கரெட் தாட்சர்
பல அரசியல் அறிஞர்கள் சமகாலத் தாராளவாதத்தை ஆதரித்துள்ளனர். பிரெட்ரிக் ஹேயக். ஆல்பெர்ட் ஜே.நாக், மில்டன் ஃபிரிட்மென், எம்.ஓக்ஸாட், காரல் பாப்பர், நாஸிக் போன்றவர்கள் முக்கியமான ஆதரவாளர்கள் ஆவர்.
சம காலத்திய தாராளவாத கொள்கை, பழைய எதிர்மறைத்தாராளவாத கொள்கையை 20-ஆம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் அமல்படுத்துகிறது. தனிமனிதனின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் இது ஆதரிக்கின்றது. தனிப்பட்ட சுயாட்சிக் கருத்து சமகாலத் தாராளவாதத்தின் முக்கிய சிந்தனை ஆகும். இதன்படி, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் விரும்பியதை செய்யும் விடுதலை உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அரசானது சட்ட ஒழுங்கை மட்டுமே பாராமரிக்க வேண்டும். நாசிக் என்ற சிந்தனையாளர் "குறைந்த அதிகார அரசு எழுச்சியுட்டுகிறது, சரியானதும் ஆகும்" என்று முழங்கினார். மற்றொரு சிந்தனையாளர் எம்.ஓக்ஸாட் "அரசாங்கம் அமைதியை மட்டுமே கண்காணிக்கிறது" என்று கூறினார்.
இந்த உலகில் மக்களை சமமாக பார்ப்பதற்கும், மக்களை சமமாக ஆக்குவதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. - பிரெட்ரிக் ஹேயக்
இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரான மார்க்ரெட் தாட்சர், சமகால தாராளவாதத்தை ஆதரித்தார். சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபரான மைக்கேல் கோர்பசேவ் மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை (Glasinost) ஆகியவைகள் மூலம் சோவியத் ரஷ்யாவில் சமகால தாராளவாதத்தை அமல்படுத்தினார்.
மற்றொரு சிந்தனையாளர் எம்.ஒக்.ஸாட் "அரசாங்கம் அமைதியை மட்டுமே கவனிக்கிறது" என்று கூறினார்.
முன்னேற்றம், சமூக நலன் என்ற பெயரில் அரசின் அதிகாரங்கள் அதிகரித்தால் மனிதனின் தனி நபர் உரிமைகள் பறிபோகிவிடும் என்று சமகால தாராளவாதம் வாதிடுகின்றது.
ஆல்பெர்ட் ஜேநாக் தனது புத்தகத்திற்கு "அரசு, நமது எதிரி" என்று பெயர் சூட்டினார்.
உங்களுக்குத் தெரியுமா?
காரல் பாப்பர், பிளாட்டோவை வெளிப்படையான சமூகத்தின் முதல் எதிரி என்று 'Open Society and its Enemies' என்ற தனது நூலில் விமர்சித்தார்.
கொள்கையின் முடிவு
சில அரசியல் சிந்தனையாளர்களும், அரசியல் சமூகவியலாளர்களும் 1950-களில் கொள்கையின் முடிவு என்ற கருத்தை கொண்டு வந்தனர். டேனியல் பெல் "கொள்கையின் முடிவு", என்ற நூலை எழுதினார். அவரும், அரசியல் சமூகவியலாளரான மார்டின் லிப்செட்டும் இக்கருத்தை ஆதரித்தனர்.
சமூக நல அரசு அல்லது தாராள மக்களாட்சி அரசு தோன்றியதால் மனிதனின் அரசியல் பொருளாதார தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது. மனித வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நலஅரசு, அதிகார பரவல், கலப்புப் பொருளாதாரம் மற்றும் போட்டி அரசியல் கட்சிகள் அமைப்பு ஆகியவைகள் பின்பற்றப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்த அருமையான சமூக அரசியல் தன்மைகளைப் பெற்றுள்ளன. ஆகவே, தாராளவாதத்திற்கும், பொதுவுடைமைக்குமான போட்டி முடிவு பெற்றது. மக்களாட்சிதான் உன்னதமான ஆட்சி முறை ஆகும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நல்ல ஆட்சியை வழங்குவதற்கும் மக்களாட்சி பொருத்தமானது என்று பாராட்டுகிறார்கள்.
ஆனால் "புதிய இடது சாரிகள்" என்ற சிந்தனையாளர்கள் கொள்கை முடிவு கருத்தை நிராகரிக்கின்றனர். இவர்கள் பொதுவுடைமையில் சில மாற்றங்கள் செய்து அதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். சீரமைக்கப்பட்ட பொதுவுடைமைவாதம் தாராள மக்களாட்சியை விட சிறப்பானது என்று இவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் சில சிந்தனையளார்கள், கொள்கையின் முடிவை விட தாராளவாதத்தின் பொருள் வேட்கையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
வராலாற்றின் முடிவு
அமெரிக்கா அரசியல் சிந்தனையாளர் பிரான்சிஸ் புக்கியோமோ "வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்" என்ற நூலை எழுதினார். பனிப்போர் முடிவடைந்ததால் வரலாறே முடிவடைந்தது என்று அவர் கூறினார். மனிதனின் வரலாறே சரியான அரசியல் சமூக பொருளாதார முறையை பெறுவதற்கான மனிதனின் தேடுதல் ஆகும். பனிப்போருக்கு பின் தாராளவாதம் பொதுவுடைமையை வெற்றி கண்டுள்ளது. தாராள அரசும், பொருளாதாரமும் உருவான பின் மனிதனின் வரலாற்றுத் தேடுதல் முடிவுக்கு வருகின்றது என்று புக்கியோமா கூறினார்.
"வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்"
- பிரான்சிஸ் புக்கியோமா
வரலாற்றின் முடிவு என்ற கருத்தை பல அறிஞர்கள் ஏற்கவில்லை. டெரிடா என்ற அறிஞர் தாராள மக்களாட்சி உன்னதமானது என்ற கருத்தை மறுக்கிறார். வன்முறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல், பஞ்சம் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை தாராள மக்களாட்சி விட வேற எந்த அமைப்பிலும் மனித இனம் காணவில்லை என்று கூறினார்.
நாகரிகங்களின் மோதல்
அமெரிக்கா அரசியல் அறிஞரான சாமுவேல் ஹண்டிங்டன் நாகரிகங்களின் மோதல் என்ற கோட்பாட்டை வரலாற்றின் முடிவு என்ற கருத்துக்கு எதிராக கொண்டு வந்தார். பனிப்போர் முடிவடைந்ததால் எல்லா போர்களும் முடிவடைந்தன என்று கூற முடியாது. தற்போது உலகத்தில் ஒரு புதிய போர் அல்லது மோதல் தோன்றியுள்ளது. உலகின் மிக பெரிய நாகரிகங்களான மேற்கத்திய நாகரிகமும், இஸ்லாமிய நாகரிகமும் தற்பொழுது மோதுகின்றன. இந்த நாகரிகப் போரில் இதர உலக நாகரிகங்களும் வருங்காலத்தில் பங்கேற்கும். நாகரிகப் போர் வருங்கால வரலாற்றைத் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.
நமது நாட்டில் 1991-ஆம் ஆண்டு புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார்மயமாதல், தாராளமயமாதல் மற்றும் உலகமயமாதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொருளாதார சமூக நடவடிக்கைகளில் இருந்து அரசு தற்போது பின்வாங்கியுள்ளது. "குறைவான அரசாங்கம் சிறந்த ஆட்சி" என்ற முழக்கம் இந்திய அரசை வழிநடத்தி வருகிறது. புதிய தாராளவாதத்தால் ஐந்தாண்டுத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் திட்டக் கொள்கைக்கு பதிலாக குறியீட்டு திட்டமிடல் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் (National Institution for Transforming India, NITI Aayog) உருவாக்கப்பட்டுள்ளது.