அரசியல் கொள்கைகள் - நாசிசம் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I
நாசிசம்
அடால்ஃப் ஹிட்லர் நாசிசம் என்ற சர்வாதிகார கொள்கையைத் தோற்றுவித்தார். ஜெர்மனி நாட்டை இரண்டு உலகப் போர்களுக்கு இடையில் நாசிசம் மூலமாக ஹிட்லர் ஆட்சி செய்தார். நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ பெயர் 'தேசிய சமதர்ம ஜெர்மானிய தொழிலாளர்கள் கட்சி' என்பதாகும். 1920ஆம் ஆண்டு தீவிர 25 அம்சத் திட்டதின் மூலமாக நாசி கட்சியை ஹிட்லர் தோற்றுவித்தார். பெரிய தொழிற்சாலைகளை தேசியமயமாக்குதல், போர்க்கால இலாபங்களைப் பறித்தல், கந்துவட்டியிலிருந்து மக்களை விடுவித்தல் போன்ற திட்டங்களை நாசிசக்கட்சி ஆதரித்தது. தனது பேச்சாற்றல் மூலம் ஜெர்மனியின் அனைத்து வகுப்பினரையும் நாசிக் கொள்கைகளுக்கு ஹிட்லர் கவர்ந்திழுத்தார். ‘ஒவ்வொரு வயிறுக்கும் உணவு, ஒவ்வொரு உடலுக்கும் ஆடை, ஒவ்வொரு கைக்கும் வேலை, எல்லோருக்கும் எல்லாம்’ என்பது ஹிட்லரின் அணுகுமுறையாக இருந்தது. இரத்தம் சிந்தாமல் அரசியல் சாசன, நாடாளுமன்ற வழிமுறைகளைத் தந்திரமாகப் பயன்படுத்தி 1933-ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வந்தார்.
தோற்றத்தின் காரணம்
ஜெர்மனியில் நாசிசத்தின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக முதலாம் உலகப் போருக்குப் பின் பாரிஸ் நகரத்தில் கையெழுத்திடப்பட்ட ‘1919 வெர்செயில்ஸ் ஒப்பந்தம்’ இருந்தது. ஹிட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அரசியல், பொருளாதார, இராணுவ அவமானங்களை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி மக்களைக் கவர்ந்தார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘எனது போராட்டம்’ (மெயின் கேம்ப்) ஆகும்.
நாசிசம் கொடுங்கோல் ஆட்சியை ஆதரித்தது. ஜெர்மானிய சிந்தனையாளரான பிரெட்ரிக் ஹெகல் என்பவர் உருவாக்கிய முழக்கமான ‘அரசு பூமியில் கடவுளின் அணிவகுப்பு’ என்பது நாசிசத்தின் ஆணிவேராக இருந்தது. அரசிற்கு மக்கள் முழுமையாக அடிபணிய வேண்டும் என்றும் நாசிசம் வலியுறுத்தியது.
நாசிசம் போர்க்குணமுள்ள கொள்கையாகும். ஹிட்லர், ‘போர் நிரந்தரமானது, போர் உலகளாவியலானது, போர்தான் வாழ்க்கை, போர்தான் எல்லாவற்றின் தொடக்கம்’ என்று சூளுரைத்தார். நாசிசத்தின் இந்த போர்க்குணம் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
நாசிசத்தின் மிக முக்கியமான, பிரச்சனைக்குரிய நம்பிக்கை அதனுடைய இனவெறிக் கொள்கையாகும். அது ஆரிய இன மேன்மையையும் தூய்மையையும் வலியுறுத்தியது. ஆரிய இனத்தை உலகின் முதல் இனமாக, மனித குலத்தின் முதலாளியாக அது கருதியது. ஜெர்மனிக்கு அருகில் வசிக்கக்கூடிய ஸ்லாவ்மற்றும் யூதஇனங்களை அது வெறுத்தது. ஆரிய இனத்தின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக 1934-ஆம் ஆண்டு நுரம்பர்க் சட்டங்களை நாசிசம் தோற்றுவித்தது. ஆரிய மக்களுக்கும் இதர இன மக்களுக்கும் இடையிலான திருமணங்களை அது தடை செய்தது.
நாசிசம் யூதர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. ஜெர்மானிய தேசத்தின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று நாசிசம் கூறியது. ஜெர்மனிய மக்களின் குருதியை உறிஞ்சி யூதர்கள் வாழ்வதாக அவர்களை வெறுத்தது. சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதனை யூதர்களின் பேரழிவு என்று யூதமக்கள் அனுசரிக்கிறார்கள்.
நாசிசம் ஜெர்மனியின் எல்லைகளைப் பரப்ப விரும்பியது. இதர நாடுகளை ஜெர்மனியின் காலனிகளாக அடிமையாக்க முயற்சித்தது. ஜெர்மனியின் மக்களை காலனி நாடுகளில் குடியேற்ற முயற்சித்தது. இங்கிலாந்தை விட மிகப்பெரிய காலனியாதிக்க சக்தியாக ஜெர்மனி வரவேண்டுமென்று நாசிசம் முயன்றது. நாசிசம் இதர கொள்கைகளான பொதுவுடைமைவாதம், தாராளவாதம், மற்றும் சர்வதேசவாதம் ஆகியவற்றை வெறுத்தது. இவைகளைப் பின்பற்றும் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் பிற தேசங்களையும் அது எதிர்த்தது.
நாசிசம் நாயகன் வழிபாட்டை ஆதரித்தது. 'ஹிட்லர்தான் ஜெர்மனி, ஜெர்மனிதான் ஹிட்லர்' என்ற கருத்தை மக்களிடையே திணித்தது. மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை அது நிராகரித்தது. ஹிட்லர் ஜெர்மானிய மொழியில் Fuehrer, அதாவது தலைவர் என அழைக்கப்பட்டார். ஜெர்மனி நாடே தலைவர் நாடு என்று அழைக்கப்பட்டது.
நாசிசம் பகுத்தறிவு வாதத்தை கடுமையாக எதிர்த்தது. மக்களுடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. ஒரு கட்சி ஆட்சிமுறையை அது ஆதரித்தது. நாசி கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒடுக்கப்பட்டன. நாசிச கட்சியின் அமைப்பு படிநிலைக் கோட்பாட்டின் படி உருவாக்கப்பட்டது. கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் ஹிட்லரிடமே குவிக்கப்பட்டன.
செயல்பாடு
படம் பார்ப்பது
அருமை மாணவர்களே, நாசிசம் இனப்படுகொலை செய்தது தற்போது உங்களுக்கு தெரியும். நாசிசத்தின் கொடுமைகளைப் பற்றி பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 'சின்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற படம் பல ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. நாசிக் கொடுமைகளைக் கருத்தாகக் கொண்டுள்ளது. இப்படத்தை மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.
சுருக்கமாகக் கூறின், நாசிசம் சர்வாதிகார, இனவாத, பகுத்தறிவிற்கு எதிரான கொள்கையாகும். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியும் ஹிட்லரின் தற்கொலையும், நாசிச கொள்கையையும் கட்சியையும் கலைத்தன. இரண்டாம் உலக போருக்குப் பின் மக்களாட்சியும் கட்சிப் போட்டிகள் முறையும் ஜெர்மனியில் வேரூன்றியதால் நாசிசம் மீண்டும் வளரவில்லை .