அரசியல் கொள்கைகள் - சமதர்மவாதம் | 11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I

   Posted On :  03.10.2023 10:14 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I

சமதர்மவாதம்

சமதர்மவாதம் செல்வங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களாக இருக்க வேண்டும். தனிச் சொத்து உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறுகின்றது.

சமதர்மவாதம்

சமதர்மவாதம் செல்வங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களாக இருக்க வேண்டும். தனிச் சொத்து உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறுகின்றது. தாராள வாதத்திற்கு எதிரான கோட்பாடு சமதர்ம கொள்கை ஆகும். பல வகையான சமதர்ம வாதங்கள் உள்ளன. மக்களாட்சி சமதர்ம வாதம், ஃபேபியன் சமதர்மவாதம், பரிணாம சமதர்மவாதம், கில்டு சமதர்மவாதம் என்பவைகள் முக்கியமானவைகள் ஆகும். பல நேரங்களில் சமதர்மவாதமும் பொதுவுடைமைவாதத்தையும் ஒரே பொருள் கொண்டவைகள் போல அழைக்கப்படுகின்றன. ஆனால் காரல் மார்க்ஸ் இரண்டையும் வேறுபடுத்தினார். தனது பொதுவுடைமையை அறிவியல் சமதர்மவாதம் என்றும் இதர சமதர்மவாதங்களைக் கற்பனை சமதர்மவாதம் என்றும் வர்ணித்தார்


1. கற்பனை சமதர்மவாதம்

பல அரசியல் அறிஞர்கள் 19ம் நூற்றாண்டில் தாராளவாதத்தின் எதிர்மறை விளைவுகளைத் தாக்கி பேசினார். உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்ற வேண்டும் என்றனர். இராபர்ட் ஓவன் என்பவர் மனித நேயம் உள்ள தொழில் அதிபர் ஆவார். அவர் கூட்டுறவுமுறையில்தனது தொழிற்சாலைகளை நடத்தினார். தொழிலாளிகளை நன்கு கவனித்துக் கொண்டார். தொழிற்சாலைகளின் மேலாண்மையில் தொழிலாளிகளையும் சேர்த்துக் கொண்டார். தொழிலில் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கும் பங்கு வழங்கினார். தூய சைமன் என்பவர் பிரான்சு நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் அறிஞர் ஆவார். திறமையான பொருளாதாரத்திற்கு தொழிலாளிகளின் நலன்களை முதலாளிகள் பாதுகாக்க வேண்டும் என்றார்.

சார்லஸ் ஃபுரியர் என்ற அறிஞர் தொழிலாளர்களின் அமைப்புகள் உருவாக வேண்டும் என்றார். அந்த அமைப்புகளுக்கு ஃபலான்ஜீஸ் (Phalanges) என்று பெயரிட்டார். இவர் முதலாளிகள் மனசாட்சியுடன், தொழிலாளர்களுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

காரல் மார்க்ஸ் இவர்களின் தொழிலாளர்களுக்கான கரிசனத்தை பாராட்டினார். ஆனால் இவர்களின் கருத்துக்கள் ஆழமற்றவை, அறிவியல் பூர்வமாக இல்லை என்று விமர்சித்தார். ஆகவே இவர்களின் சமதர்மவாதக் கருத்துக்களை கற்பனை சமதர்மவாதம் என்று பெயரிட்டார்


2. மக்களாட்சி சமதர்மவாதம்

விடுதலையும் சமத்துவத்தையும் அடைவதற்கு மக்களாட்சியும் சமதர்மவாதமும் தேவை என்று மக்களாட்சி சமதர்மவாதம் வாதிடுகின்றது. இது தனது அரசு கோட்பாட்டில் பொதுவுடைமையில் இருந்து வேறுபடுகின்றது. அரசு சுரண்டலின் கருவி கிடையாது. அரசு மக்களின் நலன்க் காக்கும் கருவியாகும். அரசு முதலாளிகள் கைப்பாவை இல்லை. சமூக நலனை காக்கும் தன்மை அரசிடம் உள்ளது. அரசு மக்களாட்சி அடிப்படையில் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது அரசு ஆகும்.

சமூக மாற்றங்கள் அமைதியான முறையில் மெல்ல மெல்ல வரவேண்டும். மக்களாட்சி சமதர்மவாதம் வாக்குப் பெட்டி சமதர்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் தங்களின் ஓட்டுகள் மூலம், தேர்தல் பாதை மூலம் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். புரட்சியும் வன்முறையும் - தேவையில்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகின்றது. தனி சொத்துக்களை முற்றிலும் அகற்ற வேண்டாம். சமூக நலனுக்காக தனி சொத்துரிமை மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தனி சொத்துரிமையை அழிக்க வேண்டியது இல்லை என்று மக்களாட்சி சமதர்ம வாதம் கூறுகின்றது.


3. ஃபேபியன் சமதர்மவாதம்

இது இங்கிலாந்து நாட்டின் சமதர்ம வாதம் ஆகும். ஃபேபியன் குழுவால் 1884 முதல் இவ்வகை சமதர்மவாதம் ஆதரிக்கப்பட்டு வந்தது. பண்டையகால ரோமானிய ஜெனரல் 'ஃபேபியஸ்' பெயரால் இது அழைக்கப்படுகின்றது. 'காத்திரு, சரியான நேரத்தில் தீவிரமாக தாக்கு' என்பது ஃபேபியஸ் அவர்களின் இராணுவ உத்தியாகும்.

சிட்னி வெப், H.G.வெல்ஸ் உள்ளிட்டோர் ஃபேபியன் சமதர்மவாதத்தைக் கொண்டு வந்தனர். ஆங்கில எழுத்தாளர் பெர்னார்ட் ஷா ஃபேபியன் சமதர்மவாதத்தின் தலை சிறந்த அறிஞர் ஆவார். ஃபேபியன் சமதர்மவாதம் முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்த்தது. எதிர்மறை தாராளவாதத்தை விமர்சித்தது. அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியது. மக்களாட்சி அரசை ஃபேபியன் சமதர்மவாதம் ஆதரித்தது. அரசிற்கு இரண்டு தன்மைகள் உள்ளன. ஒன்று அதனுடைய அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இருக்க வேண்டும். இரண்டாவதாக நிபுணர்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அரசை நாம் அகற்ற வேண்டாம். அதனை இந்த இரண்டு தன்மைகள் அடிப்படையில் மாற்றினால் போதும் என்று ஃபேபியன் சமதர்மவாதம் கூறியது.


"புரட்சிகள் கொடுங்கோலாட்சியின் கொடுமையை குறைக்க வில்லை. இன்னொரு கொடுங்கோலனிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துள்ளன." -ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஃபேபியன் சமதர்ம வாதத்தின் ஆதரவாளர் ஆவார்.

ஃபேபியன் சமதர்மவாதம் மக்களாட்சியும் சமதர்மமும் மிகவும் நெருங்கிய கோட்பாடுகள் ஆகும். இரண்டு கொள்கைகளும் நீதியையும் சமத்துவத்தையும் மிகவும் ஆதரித்தன. ஃபேபியன் சமதர்மவாதம் தனி சொத்துரிமையை அழிக்க வேண்டும் எனக் கூறவில்லை . சமூக நலனுக்காக தனி சொத்துரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறியது

ஃபேபியன் சமதர்மவாதம் பொதுவுடைமைவாத கொள்கையின் புரட்சியை எதிர்த்தது. வன்முறை மாற்றம் தராது அமைதியான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் மாற்றம் வர வேண்டும் என்று கூறியது.


4. பரிணாம சமதர்மவாதம்

ஜெர்மன் சமதர்ம மக்களாட்சி கட்சியின் தலைவரான இலசல் (Lassalle) பரிணாம சமதர்ம வாதத்தை ஆதரித்தார். ஜெர்மனியில் 1875-ஆம் ஆண்டு வந்த கோட்டா திட்டம் (Gothe Programme) பரிணாம சமதர்மவாதத்தை வளர்த்தது எட்வர்ட் பெர்ன்ஸ்ட ன் "பரிணாம சமதர்ம வாதம்" (Evolutionary Socialism) என்ற நூலை எழுதினார். இத்தாலியின் அன்சில், பிரான்சின் ஜாரஸ் என்று பல அறிஞர்கள் பரிணாம சமதர்மவாதத்தை ஆதரித்தனர்.

மாற்றங்கள் பரிணாமத்தின் மூலம் மெல்ல மெல்ல வரவேண்டும். வன்முறை மூலம் வரக்கூடாது. புரட்சி மூலம் மாற்றங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிணாம சமதர்மவாதம் கூறுகின்றது. மேலும் மனித வாழ்க்கையை பொருளாதார காரணிகள் மட்டும் தீர்மானிப்பது கிடையாது. இதர காரணிகளும் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன. பரிணாம சமதர்மவாதமும் மக்களாட்சி சமதர்மவாதமும் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும். மார்க்சியம் பரிணாம சமதர்மவாதத்தை தரகர் கண்ணோட்ட சமதர்மவாதம் என்று விமர்சித்தது.


கில்டு சமதர்மவாதம்

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் கில்டு சமதர்ம வாதம் தோன்றியது. தேசிய கில்டுகள் அமைப்பின் தலைவரான G.D.H. கோல் கில்டு சமதர்மவாதத்தை ஆதரித்தார். அவர் கில்டு சமதர்மவாதம்: பொருளாதார மீட்புக்கான திட்டம் ₹₹ (Guild Socialism; A Plan for Economic Recorery) என்ற நூலை எழுதினார். தொழிளார்களை சுரண்டுவதால் முதாலாளித்துவத்தை விமர்சித்து கில்டு சமதர்மவாதம் தோன்றியது.

இடைக்கால வரலாற்றில் ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட தொழிலில் உள்ள நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கிய சங்கம் தான் கில்டு ஆகும். அத்தொழிலில் உள்ளவர்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழ்வதற்கு கில்டுகள் உதவின. கில்டு சமதர்மவாதம் ஐரோப்பாவின் இடைக்கால கில்டுகளையும் நவீன தொழிற்சங்கங்களையும் இணைக்கின்றது. கில்டுகள் தான் ஆட்சி செய்ய வேண்டும். தொழிலில் ஈடுப்பட்டுள்ள நிபுணர்கள் தான் அதன் பிரதிநிதியாக செயல் பட வேண்டும். கில்டுகள் இணைந்து தல, மாவட்ட, மாநில, மத்திய ஆட்சி குழுக்களை உருவாக்கி நாட்டை நிர்வகிக்க வேண்டும். முக்கியமான அதிகாரங்கள் கில்டுகளிடமே இருக்க வேண்டும்.

கில்டு சமதர்மவாதம் அரசை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒரு சில பணிகளை மட்டுமே அரசு செய்யவேண்டும். கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளை மட்டுமே அரசு செய்யவேண்டும். மாற்றங்கள், புரட்சி மற்றும் வன்முறை மூலமாக வரக்கூடாது. அமைதியான மக்களாட்சி முறையில் மட்டுமே மாற்றம் வரவேண்டும் என்பது கில்டு சமதர்ம வாதத்தின் முக்கிய கொள்கையாகும்.

ஆனால் விமர்சகர்கள் கில்டு சமதர்ம வாதத்தை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று விமர்சிக்கின்றனர். அரசை ஒரு சாதாரணகில்டு என கருதுவது அரசின் சிறப்புத் தன்மையை சிதைத்து விடும். அரசின் சக்தியை, அதிகாரத்தை கில்டு சமதர்மவாதம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. கில்டு சமதர்மவாதத்தின் அதிகாரம் இல்லாத அரசினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது. போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.


இந்தியாவின் சமதர்மவாதம்

"சமதர்மவாத வகையான சமுதாயம்" என்பதுதான் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும். 1950-களில் இந்திய அரசு இதனை கொண்டு வந்தது. மத, இன, மொழி, ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதும் ஏழ்மை, கல்லாமை ஆகியவற்றை அகற்றுவதும் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும். 1950 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தனது தீர்மானத்தின் மூலம் திட்டக்குழுவை அமைத்தது. 1951 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. நாம் பொதுத் துறையும் தனியார் துறையும் செயல்படும் கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றினோம். பொருளாதாரத்தில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் இந்தியா தந்தது.

மேலும் 42-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சமதர்மவாதத்தை அரசமைப்பின் முகவுரையில் சேர்த்தது. 44-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கி சாதாரண சட்ட உரிமையாக அரசமைப்பின் 12-ஆம் பகுதியில் வைத்தது. அரசமைப்பின் நான்காவது பகுதியில் வேலை உரிமை, சிலர் இடத்தில் செல்வங்கள் குவியாமை, போன்ற சமதர்மவாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. சுதந்திரம் முதல் 1991-ஆம் ஆண்டு வரை இந்தியா சமதர்மவாத கருத்துக்களை பின்பற்றியது.


வேறுபாடுகள்


பொதுவுடைமைவாதம் 

புரட்சி மாற்றத்தின் மருத்துவச்சி ஆகும். பேரு காலத்தில் அன்னையரிடம் இருந்து மருத்துவச்சி குழந்தையை உலகிற்கு எடுத்து வருகிறாள். புரட்சி மாற்றத்தின் மூலம் புதிய சமூகத்தை உலகிற்கு கொண்டு வருகிறது

பணக்கார வர்க்கம் ஏழை வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவியே தான் அரசாகும். ஆகவே நாம் அரசை அழிக்க வேண்டும்

வர்க்கம் போராட்டம், மனித வரலாற்றில் மாற்றத்தின் அடிப்படை சக்தியாகும்

தனி சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும்.

வரலாற்று பொருள் முதல் வாதம் வரலாற்றை விளக்கும். பொருளாதாரம் தான் மனிதனை இயக்குகிறது.

சமதர்மவாதம் 

பரிணாம மாற்றங்களே நன்மையை தருகின்றன. நீடித்து நிற்கின்றன. புரட்சி தேவையில்லை.

அரசை நாம் அழிக்கக் கூடாது அரசை மக்களாட்சி மற்றும் மக்கள் நலன் அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும்

வன்முறையான வர்க்கப் போராட்டம் தேவையில்லை.

தனி சொத்துரிமை மாற்றப்பட வேண்டும். சமூக நலனுக்காக சொத்துரிமை மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்

வரலாற்று பொருள் முதல் வாதம் மட்டுமே மனித வரலாற்றை விளக்காது. கலாச்சாரம், மதம், அரசியல் போன்ற காரணிகளும் மனித வரலாற்றை தீர்மானிக்கன்றன.

Tags : Political Ideologies அரசியல் கொள்கைகள்.
11th Political Science : Chapter 7 : Political Ideologies - Part-I : Socialism Political Ideologies in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I : சமதர்மவாதம் - அரசியல் கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : அரசியல் கொள்கைகள் - பகுதி I