Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள், நன்மைகள், தீமைகள்

பொருளாதாரம் - கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள், நன்மைகள், தீமைகள் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

   Posted On :  14.03.2022 04:23 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள், நன்மைகள், தீமைகள்

கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில், தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காகப் பணியாற்றும்.

3. கலப்புப் பொருளாதாரம் (கலப்புத்துவம்)





கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில், தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காகப் பணியாற்றும். இம்முறை முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் கலவையாகும். முதலாளித்துவம் மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு முறைகளின் தீமைகளை களைய இம்முறை உதவும். இப்பொருளாதார அமைப்பு முறைகளில் தனியார்களும் அரசும் வளங்களைக் கொண்டிருப்பர். இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.



கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள்


1. சொத்து, உற்பத்திச் சாதனங்களின் உரிமம் (Ownership of Property and Means of Production)

உற்பத்திச் சாதனங்களும் சொத்துக்களும் பொதுத்துறைக்குச் சொந்தமாக இருக்கும். பொதுத்துறையும் தனியார்துறையும் வளங்களைக் கொள்முதல் செய்யவும், பயன்படுத்தவும் அல்லது மாற்றவும் உரிமை கொண்டிருக்கும்.


2. பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்திருக்கும் (Coexistence of Public and Private Sectors)

கலப்புப் பொருளாதாரங்களில் தனியார், பொதுத்துறைகள் இரண்டும் இணைந்திருக்கும். தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூக நலனை உச்சப்படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.


3. பொருளாதாரத் திட்டமிடல் (Economic Planning)

மைய திட்டமிடல் அதிகாரம் பொருளாதாரத் திட்டங்களைத் தயாரிக்கும். அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும். பொதுவாக, திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், முன்னுரிமைகள், இலக்குகள் அடிப்படையில்தான் எல்லாத்துறைகளும் இயங்கும்.


4. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு (Solution to Economic Problems)

எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? மற்றும் எப்படிப் பகிர்ந்தளிப்பது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை விலை இயக்க முறை (Price mechanism) மற்றும் அரசின் தலையீட்டின் (Government Intervention) மூலம் தீர்க்கப்படும்.


5. சுதந்திரமும் கட்டுப்பாடும் (Freedom and Control)

வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும்கூட, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.



கலப்புத்துவத்தின் நன்மைகள்



1. அதிவேகப் பொருளாதார வளர்ச்சி (Rapid Economic Growth)

கலப்புப் பொருளாதாரத்தின் சிறந்த நன்மை அதிக வேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இவ்விதம், பொதுத் தேவைகளும், தனியாரின் தேவைகளும் சந்திக்கப்படுகின்றன.


2. சமமான பொருளாதார வளர்ச்சி (Balanced Economic Growth)

பொருளாதாரத்தின் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறது. இது வேளாண்மை மற்றும் தொழில், நுகர்வுப் பண்டங்கள் மற்றும் மூலதனப் பண்டங்கள், கிராமம் மற்றும் நகரம் ஆகியவற்றிடையே சமமான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.


3. வளங்களைச் சரியாக பயன்படுத்துதல் (Proper Utilization of Resources)

ஒரு கலப்புப் பொருளாதாரத்தில், வளங்களின் சரியான பயன்பாட்டை அரசு உறுதிப்படுத்தலாம். அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாகக் கட்டுப்படுத்தும். மேலும் தனியார் துறையை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும்.


4. பொருளாதாரச் சமத்துவம் (Economic Equality)

அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர்வீத வரிமுறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது .

5. சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள் (Special Advantages to the Society)

குறைந்தபட்சக் கூலிகள் மற்றும் பகிர்வு முறைச் சட்டங்கள், நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துதல், மற்றும் சமூக நல நடவடிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் தொழிலாளர்கள், நலிவடைந்த பிரிவினரின் ஆர்வங்களை அரசு பாதுகாக்கும்.



கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள் (Demerits of Mixedism) 



1. ஒருங்கிணைப்பு இல்லாமை (Lack of Coordination) 

கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாகும். இவ்விரண்டு துறைகளும் வேறுபட்ட நோக்கங்களுடன் செயல்படுவதால் ஒருங்கிணைப்புத் தொடர்பான பிரச்சினைகள் உருவாகின்றன.


2. போட்டி மனப்பான்மை (Competitive Attitude)

அரசு மற்றும் தனியார் துறைகள் சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயலாற்றும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவ்விரண்டு துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளில் போட்டித் தன்மையுடனேயே நடந்துகொள்கின்றன.


3. திறமையின்மை (Inefficiency)

மந்தமான அதிகாரமுறை, சிவப்புநாடாமுறை, ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவே இருக்கின்றன.


4. தேசியமாக்கல் பற்றிய பயம் (Fear of Nationalization)

கலப்புப் பொருளாதார அமைப்பில், தேசியமயமாக்குதல் பற்றிய பயம் தனியார் துறைகளில் காணப்படுவதால், தனியார் தொழில்முனைவோர்கள் அவர்களின் வாணிப நடவடிக்கைகளையும், புத்தாக்க முயற்சிகளையும் சுருக்கி விடுகின்றனர்.


5. விரிவடையும் சமத்துவமின்மை (Widening Inequality)

வளங்களின் உரிமை, பரம்பரைச் சட்டங்கள், மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர், ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன.

இறுதியாக, முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையும், சமதர்மத்தின் திறமையின்மையும் கலப்புப் பொருளாதாரத்தில் காணப்படுகின்றன.


பொருளாதார அமைப்புகளை ஒப்பிடுதல்



Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Features, Merits, Demerits of Mixed Economy (Mixedism) Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள், நன்மைகள், தீமைகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்