Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், குறைகள்,

பொருளாதாரம் - முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், குறைகள், | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

   Posted On :  14.03.2022 04:04 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், குறைகள்,

'முதலாளித்துவத்தின் தந்தை' ஆடம் ஸ்மித் ஆவார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire - லேசிபேர், லத்தீனில் - Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்றும் அழைக்கிறோம்.

1. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)





'முதலாளித்துவத்தின் தந்தை' ஆடம் ஸ்மித் ஆவார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire - லேசிபேர், லத்தீனில் - Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்றும் அழைக்கிறோம். இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். தனிநபர் தங்களுக்கான வேலையைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாகச் செயல்படுவர். USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.

மேலும், இவ்வமைப்புகளில் அங்காடிச் சக்திகளிடம் இருந்து (Market forces) அடித்தட்டு சாதாரண மக்களை பாதுகாக்க தேவையான சமூக நல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.



முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்



1. தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரைச் சட்டம் (Private Ownership of Property and Law of Inheritance)

முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில், நிலம், உழைப்பு, மூலதனம், இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிநபர்களுக்கு சொந்தமாக இருக்கும். உரிமையாளர்கள் வளங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிமம் கொள்ள, வைத்துக்கொள்ள, விற்க மற்றும் பயன்படுத்த அதிகாரம் படைத்தவர்களாவர். உரிமையாளர்கள் இறந்த பிறகு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மாற்றப்படும்.


2. தெரிந்தெடுப்பதில் சுதந்திரம் (Freedom of Choice and Enterprise)

ஒவ்வொரு தனிநபரும் தங்களது வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர். அதே போன்று நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பார்கள்.


3. இலாப நோக்கம் (Profit Motive)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். இங்கு வேலை பகுப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறப்புக் கவனம் போன்றவை பின்பற்றப்படும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி (Golden Rule) 'உச்ச இலாபம்' அடைதல்.


4. போட்டியில் சுதந்திரம் (Free Competition)

பொருட்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு. அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது. வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போட்டி நிலவும்.


5. விலை இயங்கு முறை (Price Mechanism)

விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இதயமாகும். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் விலை இயங்கும் முறை, தேவை மற்றும் அளிப்பு அங்காடி சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.


6. அரசின் பங்கு (Role of Government)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையை கட்டுப்படுத்துவதால், அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும். அடிப்படை பணிகளான பாதுகாப்பு, பொதுநலம், கல்வி போன்றவற்றை அரசாங்கம் வழங்குகிறது.


7. வருமான ஏற்றத்தாழ்வு (Inequalities of Income)

முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாகப் பிரிக்கப்படுகிறது. சொத்துக்களை வைத்திருப்பவர்கள் (Haves) மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் (Have - nots) எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர். இதனால் பொருளாதார சமனற்ற நிலை அதிகரிக்கிறது.



முதலாளித்துவத்தின் நன்மைகள் (Merits of Capitalism)



1. தானாக இயங்குதல் : முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்.


2. வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்: இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது. 


3. கடின உழைப்பிற்கு வெகுமதி : கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில் முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும். 


4. பொருளாதார முன்னேற்றம்: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அளவு மிக அதிகமாகும். 


5. நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன. 


6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும். 


7. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.



முதலாளித்துவத்தின் குறைகள் (Demerits of Capitalism)


1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு

முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.


2. வளங்கள் வீணாக்கப்படுதல்

போட்டி விளம்பரங்களினாலும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன.


3. வகுப்புப் போராட்டம்

முதலாளித்துவமானது, சமுதாயத்தை முதலாளிகளாகவும், வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


4. வாணிபச் சுழல்

தடையில்லாச் சந்தை முறை (Free Market System) அதிக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்கிறது. 


5. அத்தியாவசியமில்லா பொருட்களின் உற்பத்தி

இலாபத்தைப் பெறுவதற்காக வாய்ப்பு இருக்குமாயின், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்யப்படும்.





Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Features, Merits, Demerits of Capitalistic Economy (Capitalism) Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், குறைகள், - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்