பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - வருவாயின் வட்ட ஓட்டம் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics
வருவாயின் வட்ட ஓட்டம்
ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது, பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள், மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும். வருவாயின் வட்ட ஓட்டம் ஆய்வானது தேசிய கணக்குகள் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
முக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதித்துவம் செய்யும் மூன்று வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள் உள்ளன.
1. இரண்டு துறை மாதிரி (Two Sector Model)
இது இல்லத்துறை (Household secotor) மற்றும் நிறுவனத்துறையை (Firm sector) யை கொண்ட எளிய பொருளாதாரம்.
2. மூன்று துறை மாதிரி (Three Sector Model)
இது இல்லத்துறை, நிறுவனத்துறை மற்றும் அரசுத்துறை ஆகியவை அடங்கிய கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரதிற்குரியது.
3. நான்கு துறை மாதிரி (Four Sector Model)
இது இல்லத்துறை, நிறுவனத்துறை, அரசுதுறை மற்றும் வெளியுறவுத் துறை (External sector) ஆகியவை அடங்கிய திறந்த பொருளாதார அமைப்புக்குரியதாகும்.
1. இரு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம் (Two Sector Economy)
இல்லத்துறை மற்றும் நிறுவனத்துறை என்ற இரு துறைகள் மட்டுமே காணப்படும்.
i. இல்லத்துறை (Household Sector)
இல்லத்துறை தான் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறையும், நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும். இத்துறை, அதன் அனைத்து வருவாயையும் நிறுவனத்துறை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்துகிறது. இல்லத்துறையானது, அதற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது.
ii. நிறுவனத் துறை (Firm Sector)
நிறுவனத்துறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகின்றது. இல்லத்துறைக்கு சொந்தமான நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்திக் காரணிகளை, பணியமர்த்துகிறது. நிறுவனத்துறை அதன் அனைத்து உற்பத்தியையும் இல்லத்துறைக்கு விற்பனை செய்கின்றது.
இருதுறை பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும் வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும். வெளி வட்டமானது. உற்பத்திக்காரணிகள் மற்றும் பொருட்கள் பிரதிபலிக்கும் உண்மை ஓட்டம் (real Flow) மாகவும், உள் வட்டமானது காரணி விலை மற்றும் பொருள் விலையை குறிக்கும் பண ஓட்ட (Monetary Flow)மாகவும் காணப்படும். உண்மை ஓட்டம் (Real Flow) என்பது இல்லத்துறையிலிருந்து நிறுவனத்துறைக்கு மாறும் உற்பத்தி காரணிபணிகளையும், நிறுவனத்துறையிலிருந்து இல்லத்துறைக்கு மாறும் பொருட்கள் மற்றும் பணிகளையும் குறிப்பதாகும். இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.
Y = C + I
இங்கு
Y என்பது வருவாய் (Income); C என்பது நுகர்வு (Consumption); I என்பது முதலீடு (Investment)
2. மூன்று துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்
இல்லம் மற்றும் நிறுவனத்துறைக்கு மேலாக அரசுத்துறை சேரும்போது மூன்று துறை மாதிரி (Three Sector Model) அமைகிறது. அரசானது இல்லத்துறை மற்றும் நிறுவனங்களில் வரி விதிக்கின்றனர் நிறுவனங்களிலிருந்து பொருள் மற்றும் பணிகளை வாங்குகின்றன. மேலும், இல்லத்துறையிலிருந்து உற்பத்தி காரணிகளையும் பெறுகின்றன. இதற்கு மாறாக, அரசானது ஓய்வு ஊதியம், நஷ்ட ஈடு, மானியம் ஆகிய சமூக பரிவர்த்தனைகளை இல்லங்களுக்கு வழங்குகிறது. அதுபோல, நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பொருள் மற்றும் பணிகளுக்கு பணமளிக்கிறது. மூன்று துறை பொருளாதார மாதிரியை வரைபடம் விளக்குகிறது.
மூன்று துறை மாதிரியில், தேசிய வருமானம் (National Income) என்பது நுகர்வுச் செலவு (Consumption Expenditure) முதலீட்டு செலவு (Investmet Expenditure) மற்றும் அரசின் செலவு (Government Expenditure) ஆகியவற்றை கூட்டுவதால் அடையலாம்.
Y = C + I + G
இங்கு
Y = வருவாய் ; C = நுகர்வுச் செலவு ; I = முதலீட்டுச் செலவு ; G = அரசின் செலவு
3. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்
நான்கு துறை பொருளாதாரத்தில், இல்லம், நிறுவனம் மற்றும் அரசு இவற்றோடு வெளியுறவுத்துறையும் இணைக்கப்படுகிறது. நிஜவாழ்க்கையில், நான்கு துறை பொருளாதாரம் காணப்படுகிறது.
இந்த மாதிரியில் அமைந்துள்ள நான்கு துறைகளாவன.
1. இல்லங்கள் (House hold)
ii. நிறுவனங்கள் (Firms)
iii. அரசு (Government)
iv. வெளியுறவுத் துறை (External Sector)
வெளியுறவு துறையில் அதிகமாக அடங்குவது ஏற்றுமதிகள் (Exports) மற்றும் இறக்குமதிகள் (Imports) இதை வரைபடம் விளக்குகிறது.
நான்கு துறை பொருளாதாரத்தில், ஒட்டு மொத்த செலவானது, உள்நாட்டு செலவுகள்
(C + I + G) மற்றும் நிகர ஏற்றுமதி ( X - M) ஐ உள்ளடக்கும்.
Y = C + I + G + (X - M)
அருஞ்சொற்பொருள்
* பேரியல் பொருளியல்: ஒரு முழுப் பொருளாதாரத்தையும் அதன் போக்கு மற்றும் இயக்கங்களையும் படிக்கின்ற இயல்
* பொருளாதார அமைப்பு: ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வாறு மக்களும் நிறுவனங்களும் இணைந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதைக் குறிப்பது
* முதலாளித்துவம்: உற்பத்திக்கான காரணிகள் தனியார் வசமிருந்தும் அங்காடியானது பொருளாதார நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் அமைப்பு
* சமத்துவம்: பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளை அரசே உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் முறையை குறிப்பது.
* கலப்புத்துவம்: முதலாளித்துவ (தனியார் பங்கு) மற்றும் சமத்துவம் (நாட்டு பங்கு) கொள்கைகளின் இணைவு ஆகும்
* உலகியத்துவம் : ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைளும் மற்ற நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டும் சார்ந்தும் இருப்பது
* உலகியத்துவம்: ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைளும் மாற்ற நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டும் சார்ந்தும் இருப்பது
* இருப்பு (Stock): ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருள் மாறாது நிலையாக இருப்பது
* ஓட்டம் (Flow): மாறிலிகள் காலச்சூழலில் மாறிக்கொண்டு இருப்பது
* பொருளாதார மாதிரி (Model): ஒரு பொருளாதார அமைப்போ அல்லது பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியோ எவ்விதம் இயங்குகிறது என்பதை விளக்குவது
* வட்ட ஓட்டம் (Circular flow): குடும்பங்கள், நிறுவனங்கள், அரசு மற்றும் நாடுகள் ஆகியவற்றிடையே பணம், பண்டம், பணி ஆகியவற்றின் ஓட்டத்தை விளக்குவது