பொருளாதாரம் - பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics
பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (SCOPE)
பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை மிகப் பெரியதாகவும் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
* தேசிய வருவாய் (National Income)
தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தேசிய வருவாயில் துறைகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும். தேசிய வருவாய் மற்றும் அதன் பங்குகளின் போக்கு ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி முறையின் நீண்ட கால அறிவைத் தருகிறது.
* பண வீக்கம் (Inflation)
பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும். மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
* வாணிபச் சுழற்சி (Business Cycle)
பொதுவாக எல்லா நாடுகளும் வாணிப ஏற்றத் தாழ்வு மற்றும் வாணிப சுழற்சியால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கின்றன. மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வாணிபச் சுழற்சி மாற்றங்களைத் (செழிப்பு, பின்னிறக்கம், மந்தநிலை மற்றும் மீட்பு) தெரிந்துக் கொள்ள முடிகிறது.
* வறுமை மற்றும் வேலையின்மை (Poverty and Unemployment)
வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமை மற்றும் வேலையின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வளங்களை ஒதுக்கீடு செய்யவும், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
* பொருளாதார வளர்ச்சி (Economic Growth)
பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், அதை தீர்மானிக்கும் காரணிகள் போன்றவற்றை புரிந்துக் கொள்ள முடியும்.
* பொருளாதார கொள்கைகள் (Economic Policies)
பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தடைகளை தகர்த்தெறியவும் மற்றும் வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.