Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:05 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்

போர்ச்சுகலைச் சேர்ந்த இளவரசர் ஹென்றி என்ற கடலோடி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார். மாலுமிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஒரு கடற்பயணப் பள்ளியை அவர் நிறுவியிருந்தார்.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்

 

() காரணங்கள்

போர்ச்சுகலைச் சேர்ந்த இளவரசர் ஹென்றி என்ற கடலோடி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார். மாலுமிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஒரு கடற்பயணப் பள்ளியை அவர் நிறுவியிருந்தார். அவருடைய பள்ளியில் கடற்போக்குவரத்தைக் கையாள்வதற்கான சாதனங்களான கடலோடியின் திசைகாட்டும் கருவி மற்றும் வான்நோக்கும் கருவி போன்றவற்றை எப்படிப் பயன்படுத்துவதென மாலுமிகளுக்குக் கற்று கொடுக்கப்பட்டது.

நெடுந்தொலைவுக் கடற்பயணத்துக்கான ஆர்வத்துடிப்பு, இதுவரை பயணப்பட்டிராத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் ஆகியவை மறுமலர்ச்சியினால் உருவாக்கப்பட்ட புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன. அதோடு மார்க்கோபோலோ, இபின் பதூதா போன்றவர்களின் பயணக் குறிப்புகளும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன. இது இறைப்பணியாளர்களின் மதம்பரப்பும் எண்ணத்தை மேலும் உத்வேகப்படுத்தியது. அவர்கள் நீண்ட நெடுந்தொலைதூர நிலங்களில் வாழ்ந்த நம்பிக்கையற்றவர்களிடையே தேவனின் நற்செய்தியைப் பரப்புவதற்காக அபாயகரமான கடற்பயணங்களை மேற்கொள்வதற்குத் துணிந்து முன் வந்தனர்.

ஆனால், இக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையான அம்சமே பொருளாதாரம் தான். கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும் இடையே அமைந்திருந்த நிலவழிப் பாதையை உதுமானியத் துருக்கியர்கள் அடைத்து மூடிய போது, நறுமணப் பொருட்கள், ஏனைய சரக்குகள் விலை ஏற்றம் கண்டன. நறுமணப்பொருட்களின் விற்பனையில் இருந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் ஈட்டி வந்த பெரும் லாபம், இப்போது அவர்களுக்குக் கிடைக்காமற் போயிற்று. ஆசியாவுக்கு புதிய கடற்பாதையைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்ற உந்துதலை இது தீவிரப்படுத்தியது.

பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின் 'ஜியாகரபி' (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி, பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் மையப் பகுதி வாக்கில், அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகளை அச்சிடும் நிலை உருவானதுடன் அவை பரந்த அளவில் சுற்றுக்கும் விடப்பட்டன. அது கடல்வழிப் பாதைகள் பற்றிய அறிவை மிகப் பெரிய அளவுக்கு அதிகரிக்கச் செய்தது.

 

() போர்ச்சுகீசிய கடற் பயண முயற்சிகள்:


இளவரசர் ஹென்றியின் மாலுமிகள் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து அஸோரெஸ் மற்றும் மெடிரா தீவுகள் வரை சென்றனர். அவர்கள்  ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நெடுக ஆய்வு செய்தனர். நில நடுக்கோட்டை முதலில் கடந்து பயணித்தவர் லோபோ கோன்ஸால்வ்ஸ் என்ற கடலோடியாவார். அதுநாள் வரையிலும் மாலு மி ள் அதைத் தாண்டிப் பயணிப்பதற்குத் துணிவு இல்லாதவர்களாயிருந்தனர். ஊற்றுகளைப் பற்றியும், கடல் அரக்கர்களைப் பற்றியும் அவர்கள் அச்சம் மிகுந்தவர்களாயிருந்தனர். பார்த்தலோமியோ டயஸ், ஆப்பிரிக்கக் கடற்கரையை மேலும் தாண்டி, கி.பி. (பொ. .) 1487 -ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் தெற்கு முனை அல்லது கேப் முனையைச் சென்றடைந்தார். மிகத் தீவிரமான கடும் புயலை அங்கு எதிர்கொண்டதால் அந்த முனைக்குப் புயல் முனை' எனப் பெயரிட்டார். ஆனால், போர்ச்சுகலின் அரசர் இரண்டாம் ஜான், அப்பகுதிக்கு 'நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டார். காரணம், அது கடல்வழியாக இந்தியாவைச் சென்றடைய முடியுமென்ற நம்பிக்கையை வழங்கியது.

போர்ச்சுகீசியர்கள், ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நெடுகிலும் வர்த்தகச் சாவடிகளை நிறுவினார்கள். மரச்சாமான்கள், யானைத்தந்தம் போன்ற பொருட்களையும், அடிமைகளையும் அவை விற்பனை செய்தன. வர்த்தகச் சாவடிகளை நிறுவியமை, அடிமைகளை விலைக்கு வாங்கவும், அவர்களை நேரடியாக போர்ச்சுகலுக்கு அனுப்பி வைக்கவும் உதவியது. அடிமைகள் கரும்புத் தோட்டங்களில் பணியிலமர்த்தப்பட்டனர். சர்க்கரை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆப்பிரிக்க அடிமைச் சந்தையிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்களாகிய அடிமைகள், அடிமை வணிகக் கப்பல்களில் மனிதத்தன்மையற்ற நிலைமைகளின் கீழ் காலனிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாசிப்பதற்குக் காற்றுகூடப் போதாத நிலையில், மிகக் குறுகலான இடங்களுக்குள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். பிரயாணத்தின்போதே பலர் இறந்து போயினர்.தப்பி உயிர் பிழைத்தவர்களுக்கோ தோட்டப்பகுதிகளில் துயரம் தொடர்ந்தது. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்பட்டவுடன் அடிமை வர்த்தகம் அதிகரித்துக் கொண்டு சென்றது.


 

() ஸ்பெயினும், புதிய உலகின் கண்டுபிடிப்பும்

ஸ்பெயினின் அரசர் ஃபெர்டினாண்ட், அரசி இஸபெல்லா ஆகியோரின் ஆதரவுடன் கி.பி. (பொ. .) 1492 இல் கொலம்பஸ் மூன்று கப்பல்களில் பயணத்தைத் தொடங்கினார். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்ற அவர், பஹாமாஸ் தீவு, கியூபா மற்றும் ஹைட்டி ஆகிய பகுதிகளை அடைந்தார். ஆசியாவின் எல்லைப்புறப் பகுதிகளை அடைந்துவிட்டதாக கொலம்பஸ் நினைத்தார். ஆகவே, அங்கு அவரை எதிர்கொண்ட உள்நாட்டு மக்களை இந்தியர்கள் என்று அழைத்தார். மற்றொரு மாலுமியான அமெரிகோ வெஸ்புகி, மூன்று அல்லது நான்கு பிரயாணங்களை மேற்கொண்டார். அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதியில் தரையிறங்கினார். அது ஆசியா அல்ல என்று அவர் உணர்ந்தார். ஆனால் ஒரு புதிய கண்டத்தில் அவர்கள் தவறுதலாகத் தரையிறங்கியிருப்பதை உணர்ந்ததால் அதைப் புதிய உலகம்' என்று பெயரிட்டு அழைத்தார். பிற்பாடு, ஒரு ஜெர்மானிய வரைபடவியலாளர், உலகின் வரைபடம் ஒன்றைத் தயார் செய்து கொண்டிருந்த போது புதிய உலகத்திற்கு அமெரிகோ வெஸ்புகியின் பெயரை இட்டு அமெரிக்கா என அதை அழைத்தார்.

 

() போர்ச்சுகீசியர்கள் ஸ்பானியர்கள் இடையே போட்டிப் பகை

கொலம்பசினால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளுக்கு போர்ச்சுகீசியர்கள் உரிமை கொண்டாடினர். அந்தப் பிரச்சனை போப் ஆறாம் அலெக்ஸாண்டரிடம் தீர்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. அஸோர்ஸ் தீவுக்கு மேற்கே வடக்கிலிருந்து தெற்காக ஒரு கற்பனைக் கோட்டை போப் வரைந்தார். அந்தக் கோட்டுக்கு மேற்கிலமைந்த பகுதிகள் ஸ்பெயினுக்கும் கிழக்கிலமைந்த பகுதிகள் போர்ச்சுகலுக்கும் சொந்தமானவையென்று அவர் அறிவித்தார்.

போர்ச்சுகலில் இருந்து கி.பி. (பொ. .) 1497 -இல் வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று கடற்பயணத்தைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு பயணிப்பதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு கடல்வழியைக் கண்டுபிடிப்பதே அப்பயணத்தின் நோக்கம். நன்னம்பிக்கை முனையைச் சென்றடைந்ததற்குப் பிறகு, ஓர் அராபிய கடற்பயண நெறியாளரின் உதவியோடு அவர் இந்தியாவுக்கான தன் கடற்பயணத்தைத் தொடங்கினார். மலபார் கடற்கரையில் அமைந்த கள்ளிக்கோட்டையை கி.பி. (பொ. .) 1498, மே 20 அன்று அடைந்ததார். கள்ளிக்கோட்டையில் மிளகு மற்றும் பிற நறுமணப்பொருட்கள் குறைந்த விலைகளில் கிடைப்பதைக் கண்டு வாஸ்கோடகாமா திகைத்துப் போனார். போர்ச்சுகலில் அது மிகவும் விலையுயர்ந்த, மதிப்பு வாய்ந்த ஒரு பொருள். எவ்வளவு நறுமணப் பொருட்களை விலைக்கு வாங்க முடியுமோ அவ்வளவு அதிகமாக அவர் அவற்றை வாங்கிக் கொண்டார். தனது தாய்நாட்டுக்குத் திரும்பிப் போனதும் அவற்றை விற்று ஏராளமாக இலாபம் சம்பாதித்தார். பின்னர் போர்ச்சுகீசிய கடற்படை கள்ளிக்கோட்டையின் அரசர் சாமரினைத் தோற்கடித்தது பின்னர் அது கோவாவைக் கைப்பற்றியது. கிழக்குப் பகுதியில் தனக்குச் சொந்தமான அனைத்து ஆட்சியுரிமைப் பகுதிகளுக்கும் கோவாவையே தலைநகராக்கிக் கொண்டது. இவ்வாறாக, கிழக்கில் போர்ச்சுகீசியப் பேரரசுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.


கி.பி. (பொ. .) 1519 -இல், ஃபெர்டினாண்ட் மெகெல்லன் மேற்குப்பக்கமாகக் கடலில் பயணம் செய்து ஒரு நீரிணையைக் கடந்தார். பிற்காலத்தில் மெகெல்லன் நீரிணை என்பதாக அது அறியப்பட்டது. அப்பகுதியில் கடல் அமைதியாக இருந்ததால் அதை பசிபிக் பெருங்கடல் என அவர் அழைத்தார். ஒரு தீவை அவர் கண்டடைந்த போது, ஸ்பானிய இளவரசர் பிலிப்பின் பெயரை அதற்குச் சூட்டினார் (பிலிப்பைன்ஸ்). உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். எப்படியிருப்பினும் அவர் பயணம் செய்த கப்பல் ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்றது. இவ்வாறாக உலகை சுற்றி வலம் வந்த கடற்பயணம் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

Tags : The Beginning of the Modern Age | History நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Geographical Discoveries The Beginning of the Modern Age | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்