Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் தாக்கம்

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் தாக்கம் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:09 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் தாக்கம்

உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள்வரைவுக்கு அது இட்டுச் சென்றது.

புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் தாக்கம்

உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள்வரைவுக்கு அது இட்டுச் சென்றது. புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப்பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம், இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது. போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளுமே குடியேற்றங்களை நிறுவின. இது அவற்றை பொருளாதாரச் செழுமைக்கு இட்டுச் சென்றது.

அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பறிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.

மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி, அன்னாசிப்பழம், அவரை மற்றும் கோகோ போன்ற தாவரங்களும், துருக்கிய-கினியா பன்றிகளும் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து அதேபோல கரும்பு, கோதுமை, அரிசி, குதிரைகள், ஆடுமாடுகள், செம்மறியாடு, வெள்ளாடுகள் போன்ற விலங்குகள், தாவரங்கள் அமெரிக்காவுக்குச் சென்றன. மரண ஆபத்து மிக்க நோய்களான சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல் ஆகியவற்றையும்கூட ஐரோப்பா ஏற்றுமதி செய்தது. துப்பாக்கிகள், குதிரைகளுக்கு அப்பால், உள்ளூர் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய மிக அபாயகரமான ஒன்று உயிர் ஆபத்து விளைவிக்கும் நோய்களின் பரவல் ஆகும். இவற்றுக்கு எதிரான எவ்விதப் பாதுகாப்புமற்றவர்களாக அம்மக்கள் இருந்தனர். அமெரிக்காவின் மிகப்பெரும்பான்மையான பகுதிகளில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இந்நோய்கள் இட்டுச் சென்றன.

கரும்பின் அறிமுகம், தென் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் கரும்புத் தோட்டங்கள் அமைய வழிவகுத்தது. இந்தத் தோட்டங்களில் தொடக்க நிலையில் உள்ளூர் மக்களே பணிகளில் அமர்த்தப்பட்டனர். உள்ளூர் மக்கள் பெருந்திரளாக அழிக்கப்பட்டதால், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்யவேண்டி நேர்ந்தது. காம்பியா, செனகல், கோரீ, எல்மினா, காங்கோ ஆகிய நாடுகள் ஆப்பிரிக்காவில் அடிமை வர்த்தகத்தின் முக்கியமான மையங்களாக மாறின. அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது. ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலை கொடுத்து வாங்கின. இதற்குப் பதிலாக அமெரிக்காவிலிருந்து அவை சர்க்கரை மற்றும் பிற கச்சாப் பொருட்களைப் பெற்றன. இந்த வர்த்தகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவற்ற லாபம் ஈட்டின.


புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இந்த வணிகப் புரட்சியின் தலையாய அம்சங்கள் வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவையே இவ்வணிகப் புரட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் விளைவாக, பதினேழாம் நூற்றாண்டு பல்வேறு கிழக்கிந்திய நிறுவனங்களின் உருவாக்கத்தைக் கண்டது. ஆங்கிலக் கிழக்கிந்தியக்கம்பெனி, டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி போன்றவை அத்தகைய நிறுவனங்களாகும்.

இந்தியாவுக்கு ஒரு புதிய கடல்வழியைக் கண்டுபிடித்ததற்குப் பின்னர் போர்ச்சுகீசியர்கள், கிழக்கிந்திய நறுமணப்பொருள் வர்த்தகத்தில் அராபியர்கள், எகிப்தியர்கள், வெனீசியர்கள் ஆகியோரின் போட்டிகளை படை பலத்தைக் கொண்டு முறியடித்துவிட்டு தங்களுடைய ஏகபோகத்தை நடைமுறைப்படுத்தினர். ஸ்பானியர்கள், புதிய உலகத்திலிருந்த தமது காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களின் சுரங்கப் பணி, போக்குவரத்து ஆகியவற்றின் மீது ஏகபோக ஆதிக்கத்தை நிறுவினர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவில் ஏகபோக வர்த்தக ஆதிக்கத்தைக் கொண்டிருந்ததால். மாபெரும் செல்வத்தைக் குவித்தது. மெர்க்கண்டலிசத்தின் தலையாய அம்சம் என்பது, காலனியாதிக்கவாதிகளின் ஆதாயத்திற்காக காலனி நாடுகளின் செல்வவளங்களை சுரண்டுவதே ஆகும். இது, நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

 

மீள்பார்வை

மறுமலர்ச்சி, மதச்சீர்திருத்தம், நிலவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை நவீன உலகத்தின் முன்நிகழ்வுகளாகத் திகழ்கின்றன.

மனிதநேயம், தனி உரிமைக் கோட்பாடு, பகுத்தறிவு, தேசியம் போன்ற புதிய சிந்தனைகள் அறிவொளிக் காலத்தின் உதயத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.

அறிவியல் வளர்ச்சி, புதிய கருவிகளின் கண்டுபிடிப்பிற்கும், கீழ்த்திசை நாடுகளுக்கு புதிய கடல்வழிக் கண்டுபிடிப்பிற்கும் வழி கோலியது.

அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய களங்களில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றின.

 

ஐரோப்பிய நவீன கால விடியலின்போது இந்தியாவில்......

கி.பி. (பொ..) 1526 ஆம் ஆண்டு மொகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது. கி.பி. (பொ..) 1336 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட விஜய நகர அரசு கிருஷ்ணதேவராயர் [கி.பி. (பொ..) 1509-29] ஆட்சியில் உச்சநிலையை அடைந்தது. போர்த்துக்கீசியர்கள் தங்களது பேரரசைக் கீழ் திசையில் (இந்தியா, மலாக்கா, இலங்கை) நிறுவி, கோவாவைத் தலைநகராகக் கொண்டு கடல் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்கள் பாண்டிய அரசை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி நடத்தினார்கள். ஜெசூட் மிஷனரிகளின் வருகையும், இயேசு சங்கத்தின் உறுப்பினரான புனித பிரான்சிஸ் சேவியர் பணிகளும் தூத்துக்குடியில் மீனவச் சமூகத்தைச் சார்ந்தவர்களைக் கத்தோலிக்க கிறித்தவச் சமயத்தைத் தழுவுவதற்குக் காரணமாக அமைந்தன.


Tags : The Beginning of the Modern Age | History நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Impact of Geographical The Beginning of the Modern Age | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் தாக்கம் - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்