Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மதச் சீர்திருத்த இயக்கம்

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - மதச் சீர்திருத்த இயக்கம் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:00 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

மதச் சீர்திருத்த இயக்கம்

இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது. ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தது. (மதரீதியான கட்டுப்பாட்டைச் செலுத்துவது தவிர, திருச்சபை போப்பாண்டவரின் அரசுகள் எனப்பட்ட சில பகுதிகளை அரசியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தியது) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர்.

மதச் சீர்திருத்த இயக்கம்

இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது. ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தது. (மதரீதியான கட்டுப்பாட்டைச் செலுத்துவது தவிர, திருச்சபை போப்பாண்டவரின் அரசுகள் எனப்பட்ட சில பகுதிகளை அரசியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தியது) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர். அவருடைய அப்பதவி அலுவலகம் பபாசி (papacy) என்று அறியப்பட்டிருந்தது. ஐரோப்பாவின் கிறிஸ்தவர்கள் மீது ஆட்சியதிகார எல்லைகளைக் கடந்து ஆன்மிகரீதியிலான அதிகார ஆட்சியைப் போப்பாண்டவர் கொண்டிருந்தார். அவர் ஓர் இளவரசரைப் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய அதிகாரிகளுள் பலர் ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்; திருச்சபையின் பதவிகள் ஒவ்வொன்றும் விலைகூறி விற்கப்பட்டன. மக்கள் தாங்கள் செய்யும் பாவங்களின் காரணமாக நரகத்தில் கிடந்து துன்பப்பட வேண்டும் என்ற ஒரு நம்பிக்கைக்கு மக்களை கத்தோலிக்க திருச்சபை ஆளாக்கியிருந்தது. அதோடு மட்டுமின்றி மக்கள் தங்களின் பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவமன்னிப்புக் கோருவார்களெனில் அவர்கள் பாவச்சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கத்துக்குச் செல்லமுடியும் என்றும் மக்களை நம்பச் செய்திருந்தது.

கத்தோலிக்க மத ஒறுப்பு நீதிமன்றம் (இன்குஷிசன்)

கத்தோலிக்க மத நீதிமன்றம் மதநம்பிக்கைக்கு  எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைக் கையாள்வதற்காக கத்தோலிக்கத் திருச்சபையால் உருவாக்கப்பட்ட அமைப்பே மத நீதிமன்றமாகும். குற்றமிழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள்  தங்கள் கருத்தைக் கைவிட்டுத் திருந்தினால் அவர்களுக்கு எளிய தண்டனைகளும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. தங்களைத் திருத்திக்கொள்ள மறுப்பவர்கள் கட்டி வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டனர். மத நீதிமன்றங்களிலேயே மிகவும் பழிக்கப்பட்டது ஸ்பானிய மத நீதிமன்றமாகும்.

அப்படியில்லாவிடில், அவர்கள் நரகத்தில் கிடந்து வேதனையில் உழல வேண்டிவரும். பாவங்களில் இருந்து மீள்வதற்காக பல்வேறு நோன்புகளைத் திருச்சபை வரையறுத்திருந்தது. தேவாலயத்தின் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்பதன் மூலம், மக்கள் தமது பாவச்சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று நம்பவைக்கப்பட்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டணத்துக்காகப் பாவமன்னிப்பு வழங்குவதைக் கூட திருச்சபை தொடங்கியிருந்தது.

 

() மார்ட்டின் லூதர் [1483-1556 கி.பி. (பொ..)]


மார்ட்டின் லூதர், அகஸ்தினியன் மரபொழுங்கு வழிவந்த ஒரு துறவியாவார். விட்டென்பர்க் பல்கலைக் கழகத்தில் இறையியல் ஆய்வுப் பேராசிரியராக இருந்தவர். கத்தோலிக்க நம்பிக்கையின் நெறி பிறழாத விசுவாசியாகவும், ஆழ்ந்த அர்ப்பணிப்புணர்வு மிக்க கிறித்தவராகவும் விளங்கியவர். ரோமுக்கு அவர் சென்ற போது திருச்சபையினரின் ஆடம்பரமிக்க வாழ்க்கையைக் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார். ஏறத்தாழ அதே காலகட்டத்தில், ஜோஹன் டெட்ஸெல் என்ற, திருச்சபை ஊழியர் ஒருவர் திருச்சபை பதவிகளை ஏலத்தில் எடுப்பதற்கும், பாவமன்னிப்புச் சீட்டுகளை விற்பனை செய்வதற்காகவும் விட்டென்பர்க்கிற்கு வந்திருந்தார். மார்ட்டின் லூதர் மேற்கண்ட விற்பனைகளையும், திருச்சபையின் ஏனைய ஊழல்களையும் எதிர்த்து ஒரு பிரசுரத்தை எழுதினார். 'தொண்ணூற்றி ஐந்து குறிப்புகளைப் பட்டியலிட்டு விட்டென்பர்க் தேவாலயத்தின் கதவு மீது ஒட்டினார். அவர் எழுப்பிய அந்தத் தொண்ணூற்றி ஐந்து கேள்விகளும் புகழ்பெற்ற தொண்ணூற்றைந்து கொள்கைகள் ஆக பிரபலமாயின. வெகுவிரைவில் அவை அச்சிடப்பட்டு பரவலாகச் சுற்றுக்கு விடப்பட்டன. அவருடைய இத்தகைய விமர்சனங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்வதற்குத் திருச்சபை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, போப் 10வது லியோ, மார்ட்டின் லூதரை மதத்திலிருந்து நீக்கி 'போப்பாண்டவர் ஆணையை வெளியிட்டார். அந்த போப் ஆணையைப் பகிரங்கமாகப் பொது வெளியில் எரித்ததன் மூலம் தனது புரட்சியை லூதர் அடையாளப்படுத்தினார். இதற்காக அவர் கி.பி. (பொ..) 1521ஆம் ஆண்டில் வோர்ம்ஸ் என்ற நகரில் கூடிய சட்ட உருவாக்கப் பேரவையில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டார்.

அவருடைய நண்பர்களுடைய எச்சரிக்கைகளை மீறி லூதர் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அந்த விசாரணையில் பங்கேற்றார். சாக்ஸனியின் தேர்வாளரான ஃப்ரடெரிக், லூதரின் பாதுகாவலராக விளங்கியவராக இருந்ததால் நல்வாய்ப்பாக லூதர் காப்பற்றப்பட்டார். மார்ட்டின் லூதர் விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தார்.

திருச்சபையுடன் தனக்குள்ள கருத்து வேறுபாடுகளை லூதர் மேலும் விரிவாக விளக்கினார். சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை அவர் நிராகரித்தார். முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஒருவர் ஆன்ம விடுதலையை அடைய முடியுமென அவர் வாதிட்டார். 'நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்' என்ற கொள்கை வடிவை அவர் முன்வைத்தார். மக்களுடைய தெய்வீகமான பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் அவர்களுடைய செயல்களினால் அல்ல. மேலும், பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு, விவாதிக்கப்படக் கூடியதே அல்லாமல் திருச்சபையினால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக் கூடிய ஒன்றல்ல. கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப்பாலம் என்பதையும் லூதர் நிராகரித்தார். அவருடைய கருத்துரைகள் ஜெர்மனி முழுவதிலும் பிரபலமாயின. பல இளவரசர்களும், விவசாயிகளும் லூதரின் இலட்சியத்தை ஆதரித்தனர். இவ்வாறாக, லூதரின் மதச்சீர்திருத்தம், திருச்சபையிலிருந்து முதல் வெற்றிகரமான உடைப்பை அடையாளப்படுத்தியது மட்டுமின்றி பிராட்டஸ்டன்ட் திருச்சபை நிறுவமைப்பையும் சுட்டிக்காட்டியது. சில ஜெர்மன் இளவரசர்கள் தங்களின் மீது மதரீதியான நம்பிக்கைகள் திணிக்கப்படும் போது அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் போது அவர்கள் பிராட்டஸ்டன்ட்டுகள் என்று அறியப்பட்டனர். அதைப் பின்பற்றித் தொடர்ந்த சீர்திருத்தமும் கூட பிராட்டஸ்டன்ட்டு சீர்திருத்தம் என்று அறியப்பட்டது

 

() ஏனைய பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கங்கள்:

மார்ட்டின் லூதரின் சீர்திருத்தம், ஏனைய புரோட்டஸ்டன்ட் சீர்திருத்தங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது. லூதரின் சீர்திருத்தத்திற்கான அதே காரணங்களால் உத்வேகம் பெற்றவைதாம் எனினும், அவற்றின் கொள்கை-கோட்பாடுகள் சார்ந்த அணுகுமுறையில் அவை வேறுபாடுகளைக் காட்டுவனவாயிருந்தன.

சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த உல்டிரிச் ஸ்விங்லி (கி.பி. (பொ. .) 1531 - 1484 ] ஜெனீவாவைச் சேர்ந்த ஜான் கால்வின் (கி.பி. (பொ. .) 1564 - 1509 ] ஆகியோர் திருச்சபைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் மார்ட்டின் லூதரைப் பின்பற்றினர். லூதரைப் போன்றே திருச்சபையின் செயற்பாட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாயினர். பாவமன்னிப்புச் சீட்டுகள் மற்றும் திருச்சபை மதகுருமார்கள் பதவிகளை விற்பனை செய்வதை எதிர்த்தனர். ஸ்விங்லி ஜுரிச்சிலிருந்து பணியாற்றி வந்தார். சடங்குகளின் எல்லாவித வடிவங்களுக்கும் அவர் எதிரானவராயிருந்தார். செல்வத்தைக் காட்சிப்படுத்துதலின் எல்லா வடிவங்களையும் ஜான் கால்வினும் எதிர்ப்பவராயிருந்தார். கால்வின் தன்னுடைய 'கிறிஸ்துவ மதத்தின் நிறுவனங்கள் என்ற நூலில் தனது கண்ணோட்டங்களை முறைப்படுத்தி விதிகளாக வகுத்திருந்தார். ஜெனீவாவின் அரசாங்கத்தை கி.பி (பொ . ) 1541 முதல் கி. பி (பொ. )1564 வரை அவர் கட்டுப்படுத்தி வந்தார்

இங்கிலாந்தில், அதன் அரசரான எட்டாம் ஹென்றியின் தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக மதச்சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இவர், தனக்குப் பின் முடிசூட்டிக் கொள்வதற்கு ஒரு மகனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அந்த நோக்கத்துக்காக ஹென்றி மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆகவே கேத்தரினுடனான தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவிக்க வேண்டுமென்று போப்புக்கு விண்ணப்பித்தார். புனித ரோமபுரிப் பேரரசர், கேத்தரினின் உறவினராயிருந்ததால், ஹென்றியின் வேண்டுகோளை ஏற்க வேண்டாமென்று போப்புக்கு நெருக்கடி கொடுத்தார். ஹென்றியின் முடிவை ஒப்புக்கொள்ளாமல் தந்திரமாகத் தவிர்த்துக் கொண்டே வந்ததால் எட்டாம் ஹென்றி அரசர் பொறுமையிழந்து போய், ரோமுடனான தனது பிணைப்புகளைத் துண்டித்துக் கொண்டார். தொடர்ச்சியான அரசாணைகளின் மூலம் தனியான ஓர் ஆங்கிலிகன் திருச்சபையை நிறுவினார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் மடாலயங்களின் சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்தார். ஆங்கிலிகன் திருச்சபையின் உச்சநிலைத் தலைவர் தான்தான் என்றும் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.

Tags : The Beginning of the Modern Age | History நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Reformation The Beginning of the Modern Age | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : மதச் சீர்திருத்த இயக்கம் - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்