நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - மறுமலர்ச்சி | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 06:57 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

மறுமலர்ச்சி

கான்ஸ்டாண்டி நோபிளில் இருந்து இத்தாலிய நகரத்திற்கு வந்து சேர்ந்திருந்த கல்வியாளர்கள், கலைஞர்களின் வருகையினால் கிரேக்கர்கள், ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியத்தையும், கலையையும் ஆராய்வதில் ஒரு பேரார்வமும் உத்வேகமும் இத்தாலிய நகர அரசுகளில் தோன்றியது.

மறுமலர்ச்சி

கான்ஸ்டாண்டி நோபிளில் இருந்து இத்தாலிய நகரத்திற்கு வந்து சேர்ந்திருந்த கல்வியாளர்கள், கலைஞர்களின் வருகையினால் கிரேக்கர்கள், ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியத்தையும், கலையையும் ஆராய்வதில் ஒரு பேரார்வமும் உத்வேகமும் இத்தாலிய நகர அரசுகளில் தோன்றியது. இந்தப் படைப்பூக்கமிக்க பேரெழுச்சி அவர்களுடைய எழுத்துகள், கலை, கட்டுமானத் தொழில்நுட்பம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது. இந்தக் பண்பாட்டுப் புதுவசந்தம், மறுமலர்ச்சி என அறியப்பட்டுள்ளது. "மறுமலர்ச்சி" என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Renaissance' என்பது மறுபிறப்பு' எனப்பொருள்படும். இத்தாலியச் சொல்லான 'Renascita' என்பதிலிருந்து தோன்றியது. இத்தாலியில் கிரேக்க செவ்வியல் இலக்கியங்களைக் கற்பித்த புலமையாளரான மானுவல் கிரைசோலாரஸ் (Manual Chrysoloras), க்வாரினோ (Guarino), ஜியோவான்னி ஆரிஸ்பா (Giovanni Aurispa) ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டிய சிலராவர். பிற்பாடு, தாங்கள் சேகரித்தவற்றை அவர்கள் அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாக்கங்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்தது.

 

() மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக இத்தாலி ஆகியது ஏன்?

மத்தியத் தரைக்கடல் வணிகத்திலிருந்து, ஃப்ளாரென்ஸ், மிலான், வெனிஸ், ரோம் போன்ற இத்தாலிய நகர அரசுகள் மிகப்பெரும் அளவில் ஆதாயமடைந்து வந்தன. இது ஒரு செல்வச்செழிப்பு மிக்க, துடிப்புமிக்க நகரப் பண்பாட்டின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. ஃப்ளாரென்ஸ் நகரை சேர்ந்த மெடிசி குடும்பத்தினர் மற்றும் நகர அரசுகளின் செல்வக் குடும்பங்கள் இலக்கியம், கலை, இசை ஆகியவற்றைப் போற்றி புரவலர் ஆதரவினை நல்கினர். இந்தக் காலகட்டத்தின் சிகரப்பகுதியாக கி.பி. (பொ. .) 1475- க்கும் கி.பி. (பொ. .) 1525-க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் விளங்கின. இத்தாலிய பல்கலைக்கழகங்கள் மொழி, இலக்கணம், உரைநடை, வரலாறு, அறவியல் போன்ற கலை-அறிவியல்சார் பாடங்களைக் கற்பித்து வந்தன. அவற்றின் வழி மாணவர்களைப் பொதுவாழ்க்கை, வணிகம் மற்றும் நிர்வாகத்திற்குத் தயார் செய்து வந்தன. கலை-அறிவியல் சார் படிப்புகள் இத்தாலியப் பல்கலைக்கழகங்களில் மிகவும் புகழ் பெற்றவையாய் விளங்கியதால் ஐரோப்பா முழுவதிலுமிருந்து மாணவர்கள் அங்கு திரண்டு சென்றனர். கிரேக்க மற்றும் இலத்தீன் செவ்விலக்கியம், மனிதநேயம் என்ற சிந்தனையை அறிமுகம் செய்தது. அது அக்காலகட்டத்தின் ஓவியங்கள், சிற்பங்கள், கட்டடங்கள், இசை மற்றும் எழுத்துக்களில் பிரதிபலித்தது.

 

() இலக்கியத்தில் மனிதநேயம்

மனிதநேயம் என்ற சிந்தனை முதலில் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்பட்டது. மனிதநேயவாதிகள் இடைக்காலச் சிந்தனைகளையும் நிறுவனங்களையும், விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்த்து அவற்றை தங்கள் எழுத்துக்களில் நையாண்டி செய்தனர். மனிதர்கள் பகுத்தறியும் இயற்கை பண்பைப் பெற்றுள்ளார்கள். மேலும் உண்மையான அறிவையும் மகத்துவத்தையும் பெரும் திறனையும் பெற்றுள்ளார்கள் என வாதித்தனர். செவ்வியல் கால மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு, அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் பெட்ரார்க் (கி.பி. (பொ. .) 1304 - கி.பி. (பொ. .) 1374] ஆவார். ஆகவே அவர் மனித நேயத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். செவ்வியல் இலக்கியங்களினால் தாக்கத்திற்குட்பட்டவரான தாந்தே , 'டிவைன் காமெடி' (Divine Comedy) என்ற நூலை எழுதியிருந்தார். மாக்கியவெல்லி அரசியல் ஆய்வுயொன்றை இளவரசன் (The Prince) என்ற தலைப்பில் எழுதினார். இந்தப்புத்தகத்தில், ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். ஓர் அரசன் என்பவன் ஒரே சமயத்தில் சிங்கமும், நரியுமாக விளங்க வேண்டுமென்று அவர் அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை, வழிமுறைகளைக் காட்டிலும் முடிவு தான் மிகவும் முக்கியமானது. மனித நேயவாதிகளிடையே ஓர் இளவரசனாக அறியப்பட்டவரான எராஸ்மஸ் (கி.பி. (பொ. .) 1466 - கி.பி. (பொ. .) 1536], மடமையின் புகழ்ச்சி (In Praise of Folly) என்றொரு நையாண்டி நூலை எழுதினார். திருச்சபை நடவடிக்கைகள், சடங்குகள் பற்றிய புத்தகம் இது. இங்கிலாந்தைச் சேர்ந்த சர் தாமஸ் மூர், உட்டோப்பியா என்ற ஒரு நையாண்டி நூலை எழுதினார். அவருடைய காலத்தின் அரசியல் தீமைகளைப் பற்றியது

மனிதாபிமானம்

மனிதாபிமானம் என்னும் கருத்து மறுமலர்ச்சியின் மையக்கூறாகும். இது மனித கண்ணியத்தையும் இயல்பையும் வலியுறுத்தியது. இடைக்காலத்தில், மனிதர்கள் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்ட முகவர்கள் என்ற கருத்து நிலவியது. மறுமலர்ச்சி கால மனிதாபிமானம் பல்வேறு குணநலன்களைப் பெற்றுள்ள மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தி உன்னத நிலையை அடைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியது. மேலுலகம் நோக்கிய அவர்களின் பார்வையை இவ்வுலகம் நோக்கித் திருப்பியது. ஆன்மீக உலகிலிருந்து பொருள் உலகை நோக்கித் திருப்பியது. மரணத்திற்குப் பின்னரான வாழ்வின் மீதான அவர்களின் கவனத்தை இவ்வுலக வாழ்க்கையை நோக்கித் திருப்பியது.

அது 'செர்வான்டிஸ்என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர் இடைக் காலத்தின் பிரபுத்துவப் பண்புகள், வீரநாயகத் தன்மைகள் குறித்து மற்றொரு நையாண்டி நூலை டான் க்விக்ஸோட்' என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

 

() கலையின் மீதான தாக்கம்

மறுமலர்ச்சிக்கால ஓவியங்களும், சிற்பங்களும் எதார்த்தப் பண்புடனும், இயல்புசார்ந்த இயற்கையான தன்மையுடனும் அமைந்தவை. மத்தியகால ஓவியங்கள், சிற்பங்களின் அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டவை. மத்தியகாலப் படைப்புகள் அழகியல் பாணியில், எதார்த்தமற்றவையாகவும், இரட்டைப் பரிமாணம் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. அவை இயற்கை நிலவெளிகளையும், மனித உடலமைப்பையும், உணர்ச்சிகள் மற்றும் கருத்தியல்களையும் சித்தரிப்பவையாயிருந்தன.


கலையின் களத்தில், லியானர்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ரஃபேல் போன்ற மாபெரும் கலைஞர்கள் மிகச்சிறந்த நுட்பமான கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர். லியானர்டோ டாவின்சி (கி.பி. (பொ. .) 1452 - கி.பி. (பொ. .) 1519], பல்துறைகளில் திறன்மிகுந்த ஒரு மேதை. அவர் ஓர் ஓவியர், சிற்பி, கட்டட வடிவமைப்பாளர், இராணுவப் பொறியியலாளர், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞர். "மோனாலிசா" (La Giaconda), "கடைசி இரவு விருந்து" (The Last Supper), "பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்" (The Virgin on The Rocks) போன்ற அவருடைய ஓவியங்கள் அவரது ஒப்பற்ற படைப்புகளாகும்.

மைக்கேல் ஆஞ்சலோ (கி.பி. (பொ. .) 1475 - கி.பி. (பொ. .) 1564]. ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞர். அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை, ஒரு மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலையும் காட்சிப்படுத்தியது. ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலய மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காகவும் அவர் புகழ் பெற்றுள்ளவராவார். ரஃபேல் (கி.பி. (பொ. .) 1483 - கி.பி. (பொ. .) 1520] அழகு நிறைந்த மடோன்னா '(கன்னிப்பெண்ணும் குழந்தையும்) சித்திரத்தைத் தீட்டியவர். அவர் தீட்டிய மற்றோர் ஓவியமான 'தி ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ் என்பது ஆன்மீகத்துக்கும், மனித நேயத்துக்குமிடையே அவர் வாழ்ந்த காலங்களில் நிலவிய தத்துவார்த்த விவாதத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வரையப்பட்டுள்ளது.


 

() மறுமலர்ச்சிக் காலத்தின் போது அறிவியல்

தாலமி, ஆர்க்கிமிடீஸ், பா யூக்ளிட் மற்றும் செவ்வியல் காலத்தைச் சேர்ந்த மற்றவர்களால் அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் உத்வேகம் பெற்றன. மத்தியகாலகட்டத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்ற அரிஸ்டாட்டிலியக் கண்ணோட்டம், உயிர் மற்றும் மனித குலத்தோற்றம் பற்றிய திருச்சபையின் கருத்தை வலிமைப்படுத்தியது. இருந்தபோதிலும், பிளாட்டோ மற்றும் ஏனைய செவ்வியலாளர்கள் அதை ஏற்க மறுத்து நவீன அறிவியலுக்கு அடித்தளங்களை அமைத்தனர். வில்லியம் ஹார்வி இரத்தத்தின் சுழற்சியைக் கண்டுபிடித்தார். ஒரு கணிதவியல் மாதிரிப் படைப்பின் மூலமாக பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை கோப்பர்னிகஸ் நிரூபித்தார். கலிலியோவும் தான் கண்டுபிடித்து உருவாக்கிய தொலைநோக்கியின் உதவியோடு வானவியல் ரீதியான ஆதாரத்தை வழங்கினார்.

எப்படியிருப்பினும், திருச்சபையின் மதவிசாரணை மன்றத்தின் தீவிர நடவடிககையினாலும், மரணதண்டனை விதிக்கப்படுமென்ற அச்சுறுத்தலினாலும் அவர் தன்னுடைய கண்டறிதல் முடிவுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். இவ்வாறாக, அறிவியலின் வளர்ச்சியைத் தாழ்வாகக் கணித்து அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து அறிவியல் முன்னேற்றத்தைத் தடை செய்தே வந்தது. இருந்த போதிலும், அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளும் புத்தாக்கப் படைப்புகளும் அதிவிரைவாகத் தொடர்ந்து நிகழ்ந்து அறிவியல் புரட்சிக்கு இட்டுச் சென்றது.

 

() மறுமலர்ச்சியின் விளைவுகள்

மறுமலர்ச்சியின் விளைவுகள் ஏராளமானதாகவும், நீடித்த விளைவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது, அதனுடைய மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு என்பது மனித நேயம் என்ற கருத்தாகும். தனிநபர்வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதம் ஆகியவற்றை நோக்கிய ஒரு திட்டவட்டமான நகர்வை அது அடையாளப்படுத்தியது.

வட்டார மொழியில் எழுதுவது என்பதன் அறிமுகமும், நடைமுறையும் தாந்தேயிலிருந்து தொடங்கியது. அது வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அறிவார்ந்த ஓர் அடித்தளத்தை வழங்கியது.

திருச்சபையின் உலகியல் ரீதியான, ஊழல் மலிந்த நடைமுறைகளை விமர்சிப்பதில் மறுமலர்ச்சி ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது. எராஸ்மசும், தாமஸ் மூரும் மறைமுகமாக மதசீர்திருத்தவாத இயக்கத்தை உற்சாகப்படுத்தினர்.

மறுமலர்ச்சியினால் தூண்டிவிடப்பட்ட புத்தார்வம், புதிய நிலவழிப் பாதைகளின் கண்டுபிடிப்பிலும், உலக வரைபடத்தை மாற்றியமைப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது. சாகசங்களுக்கான உத்வேகமும், அறிவுக்கான தாகமும் பெருங்கடல்களினுள் நெடிய கடற்பயணங்களை மேற்கொள்வதற்கு உந்துதலாக அமைந்தன. அதேபோல, செவ்வியல்கால அறிவியல் பற்றிய அறிவுடன் மறுமலர்ச்சியின் அனுபவஞானமும், தீவிர புத்தார்வத் தன்மையும் ஒன்றிணைந்து அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்றன. வானவியலில் கோபர்நிக்கஸின் அறிவியல் கண்டுபிடிப்பும், மனித உடற்கூறியலுக்கு வில்லியம் ஹார்வியின் பங்களிப்பும் அத்தகைய கண்டுபிடிப்புகளாகும்.

Tags : The Beginning of the Modern Age | History நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Renaissance The Beginning of the Modern Age | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : மறுமலர்ச்சி - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்