Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | எளிய நிலைத் திசுக்கள்
   Posted On :  06.07.2022 09:34 am

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

எளிய நிலைத் திசுக்கள்

ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு எளியத்திசு எனப்படும். இச்செல்கள் அமைப்பு மற்றும் செயலால் ஒன்றுபட்டவை. இவை மூன்று வகைப்படும். அவை, 1. பாரங்கைமா ( Parenchyma) 2. கோலங்கைமா (Collenchyma) 3. ஸ்கிலிரங்கைமா (Sclerenchyma)


நுனி ஆக்குத் திசுவிலிருந்து நிலைத் திசுக்கள் தோன்றுகின்றன. இவை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ செல்பகுப்பு பண்பினை இழந்துவிடுகின்றன. இது இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

1. எளிய நிலைத் திசுக்கள் (Simple permanent tissues)

2. கூட்டு நிலைத்திசுக்கள் (Complex permanent tissues)


எளிய நிலைத் திசுக்கள்:


ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு எளியத்திசு எனப்படும். இச்செல்கள் அமைப்பு மற்றும் செயலால் ஒன்றுபட்டவை. இவை மூன்று வகைப்படும். அவை,

1. பாரங்கைமா ( Parenchyma)

2. கோலங்கைமா (Collenchyma)

3. ஸ்கிலிரங்கைமா (Sclerenchyma)

 

1. பாரங்கைமா (Parenchyma Gk: Para-beside; enehein - to pour)


பாரங்கைமா தாவரத்தின் அனைத்துப் பாகங்களிலும் காணப்படுகின்றது. இது தாவரத்தின் அடிப்படை திசுவினை உண்டாக்குகிறது. பாரங்கைமா செல்கள் உயிருள்ளவை, மெல்லிய செல் சுவர் உடையவை. இதன் செல் சுவர் செல்லுலோஸினால் ஆனது. பாரங்கைமா செல்கள், முட்டை, பலகோணம், உருளை, ஒழுங்கற்ற, நீண்ட அல்லது கை வடிவமுடையது. பாரங்கைமா செல்களுக்கிடையே தெளிவான செல்லிடை வெளிப்பகுதிகாணப்படுகிறது. பாரங்கைமா செல்கள் நீர், காற்று, கழிவுப்பொருட்கள் போன்ற பொருட்களைச் சேமிக்கின்றன. செல்கள் பொதுவாக நிறமற்றவை. உப்பிய பாரங்கைமா

செல்கள் தாவர உடலத்தை விறைப்பாக வைக்க உதவுகிறது. பகுதி நீர் கடத்தும் பணி, பராமரித்தல் பணி பாரங்கைமா செல்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. 


சில பாரங்கைமா செல்கள் பிசின்கள், டேனின்கள், கால்சியம் கார்பானேட் படிகங்கள், கால்சியம் ஆக்ஸலேட் போன்றவற்றைச் சேமித்து வைக்கின்றன. இவை இடியோபிளாஸ்ட்கள் எனப்படுகின்றன. பாரங்கைமா செல்கள் பல வகைப்படும். அவைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பாரங்கைமா வகைகள்



 

 

2. கோலங்கைமா (Collenchyma.Gk. Colla-glue; enchyma-an infusion)


கோலங்கைமா எளிய, உயிருள்ள உறுதியளிக்கும் திசு . கோலங்கைமா பொதுவாக இரு விதையிலை தாவரத் தண்டின் புறத்தோலடித்தோல் பகுதியில் காணப்படுகிறது. இத்திசு வேர்களில் காணப்படுவதில்லை. ஆனால் இலைக்காம்புகள், பூக் காம்புகளில் காணப்படுகிறது. இச்செல்கள் நீண்ட அமைப்புடைவை. குறுக்குவெட்டுத் தோற்றத்தில், பலகோண வடிவமுடையன. இதன் செல் சுவர் சீரற்ற தடிப்புக்களைக் கொண்டுள்ளது. இச்செல்கள் செல்லுலோஸுடன் அதிகளவில் ஹெமி செல்லுலோசும் பெக்டினும் கொண்டுள்ளன. இது வளரும் தாவரபகுதிகளுக்கு தாங்கு திறனையும், மீள் தன்மையையும் அளிக்கிறது. கோலங்கைமா குறுகிய செல்களால் ஆனது. இது குறைந்த எண்ணிக்கையில் பசுங்கணிகங்களை கொண்டோ (அ) இல்லாமலோ காணப்படும். கோலங்கைமாவில் டேனின் இருக்கலாம். செல் சுவரிலுள்ள பெக்டின் படிந்திருப்பதின் அடிப்படையில் கோலங்கைமா மூன்று வகைப்படும். அவை:

 

அ. கோண கோலங்கைமா (Angular Collenchyma):

இது பொதுவான கோலங்கைமா வகையாகும். இங்கு செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும். இதில் செல்கள் இணையும் கோணத்தில் அல்லது விளிம்பில் தடிப்புகள் காணப்படும். எடுத்துக்காட்டு: டாட்டூரா, நிக்கோட்டியானா வின் புறத்தோலடித்தோல்

 


 

ஆ. இடைவெளி கோலங்கைமா (Lacunar Collenchyma):

இவ்வகை கோலங்கைமாவில் செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும். செல்லிடை வெளிப்பகுதியை சூழ்ந்துள்ள சுவர்பகுதி மட்டும் தடிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஐப்போமியாவின் புறத்தோலடித்தோல்.

இ. அடுக்கு கோலங்கைமா (Lamellar Collenchyma):

இவ்வகை கோலங்கைமா செல்கள் நெருக்கமாக அடுக்குகளாக அல்லது வரிசையாக அமைந்துள்ளன. இச்செல்களில் பரிதி இணைப்போக்கு சுவர்கள் (Tangential walls) தடிப்புற்று அடுத்தடுத்து அடுக்குகளாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஹீலியாந்தஸ் புறத்தோலடித்தோல்


 

 

வளையக் கோலங்கைமா (Annular collenchyma ):

டுசேன் (1955) மற்றொரு வகையான வளையக் கோலன்கைமாவை அரளி (Nerium) தாவர இலைக்காம்பில் கண்டறிந்தார். இதன் செல் உள்வெளி ஏறக்குறைய வளைய வடிவமானது.


3. ஸ்கிலிரங்கைமா (Sclerenchyma. Gk. Sclerous - hard: enchyma-an infusion)


ஸ்கிலிரங்கைமா செல்கள் புரோட்டோ பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலைசுவர்களைக்கொண்டு காணப்படும். ஸ்கிலிரங்கைமா செல்கள் இரண்டு வகைப்படும்.

1. ஸ்கிலிரைடுகள்

2. நார்கள்

 

ஸ்கிலிரைடுகள் (கல் செல்கள்) (Sclereids)


ஸ்கிலிரைடுகள் இறந்த செல்களாகும். பொதுவாக இச்செல்கள் ஒத்த விட்டம் கொண்டவை சில நீண்ட வடிவமாக காணப்படும். செல்சுவர் லிக்னின் கொண்டுள்ளதால் மிகவும் தடிப்பாகக் காணப்படுகிறது. இதன் செல் உள்வெளி மிகவும் குறுகலானது. எளிய மற்றும் கிளைத்த குழிகளைக் கொண்டது. ஸ்கிலிரைடுகள் தாங்கு திறனை அளிக்கிறது. இவை விதை உறை, எண்டோஸ்பெர்ம் போன்றவைகளுக்குத் கடினத்தன்மையைக் கொடுக்கின்றன. கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.


ஸ்கிலிரைடுகளின் வகைகள்


அ. பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachyalerids or Stone cells)

இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சில கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)

ஆ. மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):

இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளிஉறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.

இ. ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):

இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பைசம் மற்றும் ஹேகியா (Hakea) விதை உறைகள்

ஈ. ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):

இவை கிளைத்த பிரிவுகளைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்

உ. டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):

இவை மெல்லிய சுவர்கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: நிம்பையா இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.


நூல் போன்ற ஸ்கிலிரைடுகள் (Filiform sclereids): 

இவை ஒலியா யுரோப்பியா இலைத்தாளில் காணப்படும் ஸ்கிலிரைடுகள். இவை 1மி.மீ நீளமுள்ள நீண்ட நார்களைப் போன்றவை.






நார்கள் (Fibres)


நீண்ட, கூர்முனைகளைக் கொண்ட ஸ்கிலிரங்கைமா செல்கள் நார்கள் எனப்படும். நார்கள் குறுகிய செல் அறைகள், லிக்னின் செல் சுவர் ஆகியவை கொண்ட உயிரற்ற செல்களாகும். இவை எளிய குழிகளைக் கொண்டது. இவை தாங்கு திறனை அளிப்பதால் வலிமையான காற்றின் தாக்கத்திலிருந்து தாங்குகிறது. எனவே நார்கள் தாங்கு திசுக்கள் எனப்படும். நார்களானது குடிசை மற்றும் நெசவுத்தொழிலில் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?

தாவரசெல்களில் மிக நீண்டது நார்கள். மிக நீண்ட நார்கள் போமிரியா ரேமி நார்கள் ஆகும். இது 55 செ.மீ நீளமுடையது


நார்கள் ஐந்து வகைப்படும். அவை,


1. சைலம் நார்கள் அல்லது கட்டை நார்கள் :

இரண்டாம் நிலை சைலத்துடன் இணைந்து காணப்படுகின்ற நார்கள் ஆகும். இவை சைலம் இணைந்த நார்கள் எனவும் அழைக்கப்படுன்றன. இவ்வகை நார்கள் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உருவாகின்றன. இவை இரண்டு வகைப்படும்.

அ) லிப்ரிபார்ம் நார்கள் (Libriform fibres)

ஆ) நார் டிரக்கீடுகள் (Fibre tracheids) 

2. பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் (Bast fibres or extra xylary fibres)

இவ்வகை நார்கள் ஃபுளோயத்தில் காணப்படுகின்றன. இயற்கையான பாஸ்ட் நார்கள் வலிமையானவை. செல்லுலோஸினால் ஆனவை. சணல், புளிச்சகீரை , ஆளிவிதைத்தாவரம், சணப்பை போன்ற தாவரங்களில் ஃபுளோயம் அல்லது வெளிப்புறப் பட்டையிலிருந்து கிடைக்கிறது. இந்த ஃபுளோயம் நார்கள் தான் பெரிசைகிள் நார்கள் என்று முதன் முதலில் தவறாக அழைக்கப்பட்டவையாகும்.

3. மேற்புறப்பரப்பு நார்கள் (Surface fibres):

இவ்வகை நார்கள் தாவரப் பகுதியின் மேற்புறப் பரப்பிலிருந்து தோன்றுகிறது. பருத்தி மற்றும் இலவம் பஞ்சு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வகை நார்கள் மேற்புற விதை உறையிலிருந்து கிடைக்கின்றன.

4. கனி நடு உறை நார்கள் (Mesocarp fibres):

இவ்வகை நார்கள் ட்ருப் கனிகளான தேங்காய் கனியின் நடு உறையிலிருந்து கிடைக்கின்றன.

5. இலை நார்கள் (Leaf fibres) :

இவ்வகை நார்கள் மீயூஸா, அகேவ் மற்றும் சென்சுவேரியா தாவர இலைகளிலிருந்து கிடைக்கின்றன. 

 

அன்றாட வாழ்வில் நார்கள்


பொருளாதார பயன்பாட்டின்படி நார்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றது.

1. நூற்பு நார்கள் (textile fibres): துணிகளை நெய்ய, வலைகள் பின்ன, கயிறு தயாரிக்க இவ்வகை நார்கள் பயன்படுகின்றன.

• மேற்புறபரப்பு நார்கள் : எடுத்துக்காட்டு - பருத்தி

 மிருதுவான நார்கள் : எடுத்துக்காட்டு - சணல், ரேமி

 கடினமான நார்கள் : எடுத்துக்காட்டு - தேங்காய், அன்னாசி, அபாக்கா மற்றும் பல 

2. தூரிகை நார்கள் (brush fibres): தூரிகை மற்றும் துடைப்பம் உற்பத்தி செய்யப்பயன்படும் நார்கள் ஆகும். 

3. கடுமையான நூற்பு நார்கள் (Rough weaving fibres): கூடைகள், சேர்கள், பாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. 

4. எழுது தாள் உற்பத்தி நார்கள் (Paper making fibres): இவை சைல கட்டை நார்களில் இருந்து எடுக்கப்பட்டு எழுதுதாள் உற்பத்தியில் பயன்படுகிறது.

5. நிரப்ப உதவும் நார்கள் (Filling fibres): இவ்வகை நார்கள் குஷன், மெத்தை தலையணைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு: பாம்பாக்ஸ், இலவம் பஞ்சு.

 


11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Simple Permanent Tissues: Parenchyma, Collenchyma, Sclerenchyma in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : எளிய நிலைத் திசுக்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு