இருவிதையிலை இலையின் உள்ளமைப்பு-சூரியகாந்தி இலை
சூரியகாந்தி இலையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் புறத்தோல், இலையிடைத் திசு, வாஸ்குலத் திசுக்கள் என தெளிவாகப் புலப்படுகின்றன.
இருவிதையிலை இலை பொதுவாக மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலையாகஉள்ளது.
புறத்தோல் மேல்புறத்தோல், கீழ்ப்புறத்தோல் என இரு அடுக்குகளை உடையது. புறத்தோல் பொதுவாக
நெருக்கமாக அமைந்த ஓரடுக்கு செல்களாலானது. பொதுவாக மேல்புறத்தோலின் மீது படிந்துள்ள
கியூட்டிக்கிள் கீழ்ப்புறத்தோலில் காணப்படுகின்ற கியூட்டிக்கிளை விட தடிமனாக உள்ளது.
புறத்தோலில் காணப்படுகிற சிறிய துளைகள் இலைத்துளைகள் எனப்படும். பொதுவாக மேற்புறத்தோலைவிட
கீழ்ப்புறத்தோலில் அதிக எண்ணிக்கையில் இலைத்துளைகள்
காணப்படும். ஒவ்வொரு இலைத்துளையும் ஒரு இணை அவரை விதை வடிவ காப்பு செல்களால்
சூழப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இலைத்துளையும் ஒரு காற்றறையில் திறக்கிறது. காப்பு
செல்களில் பசுங்கணிகங்கள்
காணப்படுகின்றன.அதே சமயம் மற்ற
புறத்தோல் செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. புறத்தோலின் முக்கியப்
பணி உட்திசுவான இலையிடைத்திசுவை பாதுகாப்பதாகும்.
கியூட்டிக்கிள் நீராவிப்போக்கை தடுக்க உதவுகிறது. நீராவிப்போக்கு,
வளிம பரிமாற்றம் நிகழ இலைத்துளைகள் பயன்படுகின்றன.
மேற்புறத்தோலுக்கும், கீழ்ப்புறத்தோலுக்கும் இடையே
காணப்படும் அடிப்படைத்திசு இலையிடைத் திசு அல்லது மீசோஃபில் எனப்படும் (கிரேக்கம்:
மீசோ = இடையே, பில்லோம் = இலை) இலையிடைத்
திசுவில் இரண்டு வகையான திசுக்கள் உள்ளன. அவை பாலிசேட் பாரங்கைமா மற்றும் பஞ்சுபாரங்கைமா
ஆகும்.
மேற்புறத்தோலுக்கு கீழாகப் பாலிசேட் பாரங்கைமா காணப்படும். இச்செல்கள் நீண்ட உருளை வடிவில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளில் செல் இடைவெளிகளின்றி நெருக்கமாக அமைந்துள்ளன. பாலிசேட் பாரங்கைமா செல்கள் பஞ்சுபாரங்கைமா செல்களை விட அதிக எண்ணிக்கையில் பசுங்கணிகங்களைக் கொண்டுள்ளன. பாலிசேட் பாரங்கைமாவின் பணி ஒளிச்சேர்க்கையாகும். பஞ்சுபாரங்கைமா பாலிசேட் பாரங்கைமாவுக்கு உட்புறமாக உள்ளது. பஞ்சு செல்கள் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. இச்செல்கள் நெருக்கமின்றி அதிக காற்றைறைகளுடன் காணப்படுகின்றன. பாலிசேட் செல்களுடன் ஒப்பிடும்போது, பஞ்சு செல்களில் குறைந்த எண்ணிக்கையில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன. பஞ்சு செல்கள் காற்றறைகள் மூலம் வளிமப்பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றறையானது சுவாச அறை அல்லது அல்லது இலைத் துளை கீழறை எனப்படும்.
வாஸ்குலத்திசுக்கள் இலையின் நரம்புகளில் காணப்படுகின்றன. வாஸ்குலக் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, மூடியவை ஆகும். சைலம் மேற்புறத்தோலை நோக்கியும், ஃபுளோயம் கீழ்ப்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளன. வாஸ்குலக் கற்றைகளைச் சூழ்ந்து அமைந்த செல் இடைவெளிகளின்றி ஓரடுக்கு பாரங்கைமா செல்களாலான உறை காணப்படுகிறது. இது கற்றை உறை அல்லது எல்லை பாரங்கைமா எனப்படும். சைலத்தில் மெட்டாசைலக்கூறுகள் புரோட்டோசைலக் கூறுகள் ஆகியவை காணப்படுகின்றன. புரோட்டோசைலம் மேற்புறத்தோலை நோக்கியும், மெட்டாசைலம் கீழ் புறத்தோலை நோக்கியும் காணப்படுகின்றன. ஃபுளோயத்தில் சல்லடைக்குழாய்கள், துணைசெல்கள், புளோயம் பாரங்கைமா போன்றவை காணப்படுகின்றன. ஃபுளோயம் நார்கள் காணப்படவில்லை. சைலத்தில் சைலக்குழாய்கள், சைலம் பாரங்கைமா ஆகியவை காணப்படுகின்றன. டிரக்கீடுகளும், சைலம்நார்களும் காணப்படுவதில்லை.