Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஒருவிதையிலைதாவர வேரின் முதன்நிலை அமைப்பு - மக்காச் சோள வேர்
   Posted On :  06.07.2022 09:48 am

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

ஒருவிதையிலைதாவர வேரின் முதன்நிலை அமைப்பு - மக்காச் சோள வேர்

மக்காச்சோள வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கித் திசுத்தொகுப்புகளின் அமைவு முறை பின்வருமாறு காணப்படுகிறது. அவை பிளிஃபெரஸ் அடுக்கு அல்லது எப்பிபிளமா, புறணி மற்றும் ஸ்டீல்.

ஒருவிதையிலை தாவர வேரின் முதன்நிலை அமைப்பு-மக்காச் சோள வேர்

மக்காச்சோள வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கித் திசுத்தொகுப்புகளின் அமைவு முறை பின்வருமாறு காணப்படுகிறது. அவை பிளிஃபெரஸ் அடுக்கு அல்லது எப்பிபிளமா, புறணி மற்றும் ஸ்டீல்.


புறத்தோல் அடுக்கு அல்லது எபிபிளமா (piliferous layer or Epiblema)

வேரின் வெளிப்புற அடுக்கு எபிபிளமா எனப்படும். இது செல் இடைவெளிகளின்றி நெருக்கமாக அமைந்த ஓரடுக்கு மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்களால் ஆனது. இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூட்டிக்கிள் காணப்படுவதில்லை. வேரின் புறத்தோல் அடுக்கில் காணப்படும் வேர்த்தூவிகள் எப்போதும் ஒரு செல்லால் ஆனவை.

வேர்தூவிகள் மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களை உறிஞ்சுகின்றன. வேர்தூவிகள் பொதுவாகக் குறுகிய காலமே வாழக்கூடியன. இந்த அடுக்கின் முக்கிய பணி உட்புறத் திசுக்களைப் பாதுகாத்தல் ஆகும்.

புறணி (Cortex)

புறணி ஒருபடித்தானதாகும். அதாவது பாரங்கைமா என்ற ஒரே வகை திசுவால் ஆனது. புறணி செல்கள் மெல்லிய செல்சுவரையும் அதிக செல் இடைவெளிகளையும் கொண்ட பல அடுக்கு பாரங்கைமா செல்களைக் கொண்டுள்ளது. புறணி செல்களின் பணி சேமித்தல் ஆகும்.

புறணி செல்கள் பொதுவாக முட்டை வடிவமாகவோ, கோள வடிவமாகவோ உள்ளன. புறணி செல்களில் பொதுவாக பசுங்கணிகங்கள் காணப்படவில்லை . ஆனால் தரசம் சேமிக்கப்பட்டுள்ளது. இச்செல்கள் உயிருள்ளவை. மேலும், இவற்றில் வெளிர்க்கணிகங்கள் காணப்படுகின்றன.

புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகும் அகத்தோலானது ஓரடுக்கு பீப்பாய் வடிவப் பாரங்கைமா செல்களால் ஆனது. இது ஸ்டீலைச் சூழ்ந்து ஒரு முழு வளையமாக அமைந்துள்ளது.

அகத்தோல் செல்களின் ஆரச்சுவரிலும், உள்பரிதி இணைப்போக்கு சுவரிலும் சூபரின்,லிக்னின் என்ற பொருட்களால் ஆன தடிப்புகள் காணப்படுகின்றன. இவை காஸ்பேரியப் பட்டைகள் எனப்படும். இது காஸ்பேரே என்பவரால் முதலில் கண்டறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிரில் உள்ள அகத்தோல் செல்களில் காஸ்பேரியப் பட்டைகள் காணப்படுவதில்லை. இச்செல்கள் வழிச்செல்கள் எனப்படும். இவற்றின் பணி நீரையும், நீரில் கரைந்துள்ள உப்புக்களைப் புறணியிலிருந்து சைலத்திற்கு கடத்துவதாகும். மற்ற அகத்தோல் செல்களில் காஸ்பேரியப் பட்டைகள் இருப்பதால் அவற்றின் மூலம் நீர் மூலக்கூறுகள் சைலத்திசுவை அடைவதில்லை

காஸ்பேரியப் பட்டைகளின் முக்கியப் பணி நீரானது புறணியிலிருந்து சைலத்திற்கு வந்தபின் மீண்டும் சைலத்திலிருந்து புறணிக்கு வெளியே செல்வதைத் தடுப்பதாகும்.

ஸ்டீல் (Stele)

அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த அனைத்துத் திசுக்களும் சேர்ந்து ஸ்டீல் (மைய உருளை) எனப்படும். இது பெரிசைக்கிள், வாஸ்குலத்திசுத் தொகுப்புகள், பித் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பெரிசைக்கிள் (Pericycle)

பெரிசைக்கிள் ஸ்டீலின் வெளிப்புற அடுக்காக அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்துள்ளது இது ஓரடுக்கு பாரங்கைமா செல்களால் ஆனது.

வாஸ்குலத் தொகுப்பு (Vascular system)

வாஸ்குலத் திசுக்கள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன. புரோட்டோசைல முனைகளின் எண்ணிக்கை பல. இத்தகைய சைலம் பல முனை சைலம் எனப்படும். மேலும் சைலம் வெளிநோக்கு சைலமாக காணப்படுகிறது. சைலத்திற்கும், புளோயத்திற்கும் இடையே காணப்படும் திசு இணைப்புத்திசு எனப்படும். மக்காச்சோள வேரில் இணைப்புத் திசு ஸ்கிலிரங்கைமாவால் ஆனது.

பித் (Pith)

மையப்பகுதியில் பெரிய பித் அல்லது மெடுல்லா காணப்படுகிறது. இது செல் இடைவெளிகளுடைய மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்களால் ஆனது. இச்செல்களில் அதிக அளவில் தரசமணிகள் சேமிக்கப்பட்டுள்ளன.


இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை தண்டுகளின் உள்ளமைப்பு:


இருவிதையிலைத் தண்டின் முதன்நிலை அமைப்பு-சூரியகாந்தி தண்டு

இருவிதையிலைத் தண்டின் (சூரியகாந்தி) குறுக்குவெட்டுத்தோற்றத்தில் வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமைந்துள்ள திசுத்தொகுப்புகள் பின்வருமாறு.

புறத்தோல் (Epidermis)

இது பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்ற தண்டின் வெளிப்புற அடுக்காகும். இது ஓரடுக்கு செவ்வக வடிவப் பாரங்கைமா செல்களால் ஆனது. இச்செல்கள் செல் இடைவெளிகளின்றி நெருக்கமாக அமைந்துள்ளன. புறத்தோல் செல்களின் வெளிப்புறச்சுவர் மீது கியூட்டிகிள் என்ற படலம் காணப்படுகிறது. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கை குறைக்க உதவுகிறது. கியூட்டிக்கிள் கியூட்டின் என்ற மெழுகு போன்ற பொருளாலானது. ஆங்காங்கே புறத்தோல் துளைகள் காணப்படுகின்றன. புறத்தோல் செல்கள் உயிருள்ளவையாகும். புறத்தோல் செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. புறத்தோலின் மீது பல செல்களாலான புறத்தோல் தூவிகள் அதிகளவில் காணப்படுகின்றன. 

புறணி (Cortex)

புறத்தோலுக்கு உட்புறமாகப் புறணி காணப்படுகிறது. புறணி மூன்று பகுதிகளாக வேறுபட்டுள்ளது. புறத்தோலுக்கு அடியில் ஒருசில அடுக்கு கோலங்கைமா செல்களாலான பகுதி காணப்படுகிறது. இது புறத்தோலடித்தோல் எனப்படும். இது தண்டிற்கு உறுதியைத் தருகிறது. இச்செல்கள் உயிருள்ளவை. இவற்றின் செல்சுவர்கள் மூலைகளில் தடிப்புற்று காணப்படுகின்றன.

புறத்தோலடித்தோலிற்கு உட்புறமாக ஒரு சில அடுக்கு குளோரங்கைமா செல்களால் ஆன பகுதி காணப்படுகிறது. இப்பகுதி செல்லிடை வெளிகளுடன் காணப்படுகிறது. இப்பகுதி ஒளிச்சேர்க்கையை மேற்கொள்கிறது. சில ரெசின் குழாய்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. மூன்றாவது பகுதி பாரங்கைமா செல்களாலானது. இப்பகுதியில் உள்ள செல்கள் உணவுப் பொருட்களைச் சேமிக்கின்றன.

புறணியின் கடைசியடுக்கு அகத்தோலாகும். அகத்தோல் ஓரடுக்கு பீப்பாய் வடிவ, செல் இடைவெளிகள் அற்று நெருக்கம் அமைந்த பாரங்கைமா செல்களாலானது. அகத்தோல் செல்களில் தரசமணிகள் மிகுந்து காணப்படுகின்றன. எனவே இவ்வடுக்கு தரச அடுக்கு எனவும் அழைக்கப்படும். இவ்வடுக்கு வேர்களில் உள்ள அகத்தோலை ஒத்த அடுக்காகும். பெரும்பாலான இருவிதையிலைத் தாவரத் தண்டில் காஸ்பேரியப் பட்டைகள் கொண்ட அகத்தோல் காணப்படுவிதில்லை. 

ஸ்டீல் (Stele)

அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் அல்லது மைய உருளை ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலக் கற்றைகள், பித் ஆகியவை காணப்படுகின்றன. இருவிதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலக் கற்றைகள் பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்துள்ளன. இவ்வகை ஸ்டீலானது யூஸ்டீல் (Eustele) எனப்படும்.

பெரிசைக்கிள் (Pericycle)

அகத்தோலுக்கும், வாஸ்குலக் கற்றைகளுக்கும் இடையில் காணப்படும் பல அடுக்கு செல்களாலான பகுதி பெரிசைக்கிள் ஆகும். சூரியகாந்தி (Helianthus) தாவரத்தண்டில் சில அடுக்கு ஸ்கிலிரங்கைமா செல்கள் திட்டுகளாக ஒவ்வொரு வாஸ்குலக் கற்றையின் ஃபுளோயத்தின் வெளிப்புறமாக காணப்படுகின்றன. இவை கற்றைத் தொப்பிகள் (Bundle cap) அல்லது வன்மையான ஃபுளோயம் (hard bast) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கற்றைத் தொப்பிகள் மற்றும் அவைகளுக்கு இடையே அமைந்த பாரங்கைமா செல்கள் சேர்ந்து உண்டாக்கும் வளையம், சூரியகாந்தி தண்டில் பெரிசைக்கிளாக உள்ளது.

வாஸ்குலக் கற்றைகள் (Vascular bundles)

வாஸ்குலக் கற்றையில் சைலம், ஃபுளோயம் மற்றும் கேம்பியம் ஆகியவை காணப்படுகின்றன. தண்டில் சைலமும், ஃபுளோயமும் சேர்ந்தமைந்து வாஸ்குலக் கற்றைகளாகக் காணப்படுகின்றன. இந்த வாஸ்குலக் கற்றைகள் ஆப்பு வடிவத்தில் உள்ளன. வாஸ்குலக் கற்றைகள் ஒரு வளையமாக அமைந்துள்ளன. வாஸ்குலக் கற்றை ஒவ்வொன்றும் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, உள் நோக்கு சைலம் கொண்டவையாகும்.



ஃபுளோயம் (Phloem)

முதன் நிலை ஃபுளோயம் வாஸ்குலக்கற்றையில் வெளிப்புறத்தை நோக்கி உள்ளது. இது புரோட்டோஃபுளோயம், மெட்டாஃபுளோயம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஃபுளோயத்தில் சல்லடைக் குழாய்கள், துணைசெல்கள், ஃபுளோயம் பாரங்கைமா ஆகியவை காணப்படுகின்றன. ஃபுளோயம் நார்கள் முதன் நிலை ஃபுளோயத்தில் காணப்படுவதில்லை . ஃபுளோயம் கரிம உணவுப் பொருட்களை இலையிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.

கேம்பியம் (Cambium)

கேம்பியம் செவ்வக வடிவ, மெல்லிய செல்சுவருடைய, ஆக்குத்திசு செல்களாலானது. இது ஒன்றிலிருந்து நான்கு அடுக்கு செல்களாலானது. இந்த கேம்பியம் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புதிய செல்களைத் தோற்றுவிக்கும் திறன் கொண்டுள்ளது.

சைலம் (Xylem)

சைலம் நார்கள், சைலம் பாரங்கைமா, சைலக் குழாய்கள், டிரக்கீடுகள் ஆகியவை சைலத்தில் காணப்படுகின்றன. சைலக்குழாய்கள் தடித்த செல்சுவரை கொண்டு பல வரிசைகளில் அமைந்துள்ளன. சைலம் நீரையும், கனிமங்களையும் வேரிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.

பித் (Pith)

தண்டின் மிகப்பெரிய மையப்பகுதி பித் எனப்படும். இது செல் இடைவெளிகளுள்ள பாரங்கைமா செல்களாலானது. இது மெடுல்லா எனவும் அழைக்கப்படுகிறது. பித் வாஸ்குலக் கற்றைகளுக்கிடையே ஆரப்போக்கில் நீண்டு காணப்படுகிறது. வாஸ்குலக் கற்றைகளுக்கிடையே காணப்படும் பித்தின் இத்தகைய நீட்சிகள் முதன்நிலை பித் கதிர்கள் அல்லது முதன் நிலை மெடுல்லா கதிர்கள் எனப்படும். பித்தின் பணி உணவுப்பொருட்களைச் சேமிப்பதாகும். 




11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Primary Structure of Monocot Root-maize Root in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : ஒருவிதையிலைதாவர வேரின் முதன்நிலை அமைப்பு - மக்காச் சோள வேர் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு